
“மணி… மாமி தொல்லை தாங்கலே… பொண்ணுக்கு பாடல் சொல்லிக் குடு, இந்தி லெசன் எடு…” என, உயிரை வாங்குகிறாள்… கணக்கு வழக்கு, ஸ்கூல் பாடமெல்லாம் வேப்பங்காயாச்சே எனக்கு… பொறுப்பு கிட்ட, “பர்மிஷன்” வாங்கு… நாலு நாள் புதுச்சேரிக்கு ஓடி விடலாம்…” என்றார் லென்ஸ் மாமா.
பொ.ஆ., நல்ல மூடில் இருந்த போது, மணக்க, மணக்க காபி போட்டு, பதமாக சீனி இட்டுக் கொடுத்து, “பர்மிஷன்” வாங்கினேன். உடன் சேர்ந்து கொண்டனர் எழுத்தாள நண்பர்கள் சிலர்.
ஓட்டலில் ரூம் புக் செய்து, கும்பலாய் புதுச்சேரியை அடைந்தோம்.
எழுத்து, இலக்கியம், அரசியல், நாட்டு, உலக நடப்பு என ஒரே வாதப் பிரதிவாதங்கள்!
— கடலை ஒட்டிய மணற்பரப்பில் நாற்காலிகள் போட்டு, விவாதம் நடந்து கொண்டிருக்க, ஆங்கில இதழ் ஒன்றை ஒரு கையிலும், மறு கையில் கண்ணாடி கோப்பையையும் வைத்துக் கொண்டு, படிப்பில் மூழ்கி இருந்தார் லென்ஸ் மாமா…
அப்படி என்ன ஆவலாகப் படிக்கிறார் என எட்டிப் பார்த்தேன்… என் ஆவலைப் புரிந்து கொண்ட லென்ஸ் மாமா, “வளர்ப்பு மகன் திருமணத்தைப் பற்றி எல்லாரும் பேசிக் கொண்டிருந்தோமே… அதே போல அல்லது அதை மிஞ்சும் விதமாக வட மாநிலங்களில் திருமணங்கள் நடக்கின்றனவாம்… இதோ, இந்த பத்திரிகையிலே எழுதி இருக்காங்க…” என்றவர், கோப்பையை வாயில் சரித்து, ஒரு மிடறு விழுங்கினார். அதே வேகத்தில், அருகே, சின்ன கரி அடுப்பின் மீது வைக்கப்பட்டிருந்த மண் பாத்திரத்தின் உள்ளே சூடாக இருந்த, “பிஷ் டிக்கா’ ஒன்றை மரக்குச்சியால் எடுத்து லாவகமாக வாயினுள் தள்ளிக் கொண்டு பேச ஆரம்பித்தார்...
“மும்பையில், ஒரு ஆசாமி, தன் மகளின் திருமண அழைப்பிதழை, “கிரானைட்” கல்லில் பதித்து, அதை, வெல்வெட் துணியில் சுற்றி அனுப்பி வைத்தாராம்… ஒவ்வொரு அழைப்பிதழின் மதிப்பும் 550 ரூபாயாம்…
“இன்னொரு ஆசாமி, மரகதங்கள் பதித்த பெட்டியில், வெள்ளியால் செய்யப்பட்ட ரோஜா மலரில் அழைப்பிதழை செதுக்கி அனுப்பி வைத்தாராம்…
“அடுத்தவங்களை விடப் புதுமையா, “காஸ்ட்லி”யா செய்யணுமுன்னு ஒவ்வொருவரும் இப்போ ஆசைப்பட ஆரம்பிச்சிட்டாங்களாம்… கல்யாணம்ன்னா அந்தக் காலம் மாதிரி, உறவுக்காரங்க முன்கூட்டியே வந்து, ஆளுக்கொரு பொறுப்பை எடுத்து நடத்துற சமாச்சாரமெல்லாம் இப்போ மறந்து, மறைஞ்சு போச்சுதே… அதனால, எல்லா வசதியும் உள்ள, “பைவ்ஸ்டார்” ஓட்டல்களைத் தான் பணக்காரங்க நாடி, ஓடுறாங்களாம்…
“மும்பையில், பைவ் ஸ்டார் ஓட்டல்களில் 500 முதல் 1000 பேருக்கு ஒரே நேரத்திலே சாப்பாடு போடுற வசதிகளும் இருக்குதாம்…
“இது தவிர, 36 மணி நேரத்திற்கு தாஜ் ஓட்டல் கல்யாண ஹால் வாடகை 15 லட்சம் ரூபாயாம். இதுவே, மெட்ராஸ் தாஜ் ஓட்டல்ல சாப்பாடு ஆர்டர் அவங்ககிட்ட குடுத்துட்டா, ஹாலுக்கு வாடகை கிடையாதாம்.
“அத மாதிரி கல்யாண, ‘டிரஸ்’களுக்கும் எக்கச்சக்கமா செலவு செய்யறாங்களாம்… விமல் துணிகள் தயாரிக்கிற, ‘ரிலையன்ஸ் குரூப்’ கம்பெனியின் அதிபர் அம்பானியின் மகன் இந்தி நடிகை டீனா முனீமை கல்யாணம் செஞ்சுக்கிட்டார் இல்லியா… அப்போ, டீனா அணிஞ்ச கல் யாண டிரஸ் விலை என்ன தெரியுமா?
“எட்டு லட்சம்… எட்டே எட்டு லட்சம் ரூபாய் தான்!
“வட மாநில ஆண்கள் முன்னப் போல, கோட்டு, சூட்டு போட்டு கல்யாணம் பண்ணிக்கிறது இல்லையாம்… “ஷெர்வாணி”ங்கற டிரஸ் தான் போட்டுக்கிறாங்களாம்… இதோட வில குறைஞ்ச பட்சம் 20 ஆயிரம் ரூபாயிலிருந்து அதிக பட்சம் ரெண்டு லட்சம் ரூபா வரையாம்!”
“நம்மூர் பொண்ணுகளும் வெளுத்துக் கட்றாங்களாம்… வைர ஊசி சேலைன்னு மார்கெட்டுல இருக்குதாம்…
“இன்னொரு புது, “டிரெண்ட்’ நம்மூர் பொண்ணுகளுகிட்ட வந்திருக்குதாம்… இந்தப் பொண்ணுங்களுக்கு, அவங்க பாட்டி போட்டிருந்த நகை டிசைன் தான் இப்போ பிடிச்சு இருக்குதாம்…”
— இப்படியே அடுக்கிக் கொண்டு போனார்.
“நாம் ஏழை நாடு என்கிறோம்… ஆனால், ஜவுளிக்கடை வாசலிலும், நகைக் கடை வாசலிலும் ரேஷன் கடை, “கியூ’ போல் ஜனங்கள் மொய்த்து நிற்பதைப் பார்த்தால், நம் நாடு ஏழை நாடு தானா என்ற சந்தேகம் எழுகிறது…’ என ஒரு எழுத்தாளர் சமீபத்தில் எழுதியது தான் நினைவுக்கு வந்தது.
***
பிழைக்கப் போகும் இடங்களில் நம்மவர்கள் வாலாட்டாமல் இருக்க மாட்டார்கள். இது, நம்மவர்களின் பிறவி குணம். இந்த குணத்தால், உதை வாங்கித் திரும்புவர் என்பது பல நாடுகளில், பல முறை நிரூபிக்கப்பட்டுள்ளது.
இப்போது, இதுபோன்ற ஒரு வாலாட்டி வேலை அமெரிக்காவிலும் ஆரம்பமாகி வருகிறது என்பதை சமீபத்தில் படித்த ஒரு கட்டுரை உறுதி செய்கிறது.
அமெரிக்காவில் இருந்து வெளிவரும் நம்மவர் நடத்தும் ஆங்கில இதழ் ஒன்றில் இக்கட்டுரை வெளியாகி உள்ளது. (கட்டுரையை படிக்க உதவியது, வழக்கம் போல் உதவி ஆசிரியர்.)
கட்டுரையில் கூறப்பட்டுள்ள பொதுவான தகவல்கள்:
கடந்த 1980 முதல் ’90 வரை அமெரிக்காவில், இந்திய ஜனத் தொகை தான் அதிக அளவில் அதிகரித்துள்ளது. சதவீதக் கணக்கில் பார்த்தால், ’80ல் இருந்த இந்திய மக்கள் தொகை ’90ல் 126 சதவீதமாக அதிகரித்துள்ளது. ஆனால், இதே காலத்தில் வெள்ளை அமெரிக்கர்களின் மக்கள் தொகை வெறும் ஆறே ஆறு சதவீதம் தான் அதிகரித்துள்ளது. இதே போல, அங்கு வாழும் கறுப்பர் இன மக்கள் தொகை 13.2 சதவீதம் தான் அதிகரித்துள்ளது.
பிற நாடுகளில் இருந்து அமெரிக்காவில் குடியேறியவர்களில், இந்தியர்களே அதிக அளவில் சம்பளம் பெறுகின்றனர். அதே போல, தரமான பணிகளிலும் இந்தியர்கள் முக்கிய இடத்தை வகிக்கின்றனர்.
தேசிய அளவிலான தனி நபர் சராசரி வருமானத்திலும் இந்தியர் முதலிடம் வகிக்கின்றனர்.
அமெரிக்கர்களின் சராசரி வருட வருமானம்
5 லட்சம் ரூபாய். ஆனால், அங்கு குடியேறிய இந்தியர்களின் சராசரி வருட வருமானம் 6 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய்.
— இப்படிப் புள்ளி விபரங்களைக் கொடுத்த பின், நம்மிடம் பொருளாதார பலம் பெருத்து வருகிறது… வாங்கும் சக்தியும் அதிகரித்து வருகிறது. இன்றும் சில ஆண்டுகளில் அதிகரித்து விடும்.
இப்படிப்பட்ட நம் இனத்திற்கு அரசியலிலும், முக்கிய இடம் வேண்டாமா?
நாம், இங்கு சிறுபான்மையினர் தான், அதற்காக, “வாய்மூடி’ கிடக்க வேண்டும் என்பது விதி அல்ல… நம் குரல் அரசியல் அளவில் ஒலிக்க வேண்டுமென்பதை உறுதி செய்ய வேண்டும். தேசிய அளவிலும், உள்ளூர் அரசிலும் நம்மக்களுக்கு பங்கு அளிக்கப்பட வேண்டும். அரசியல் அதிகாரத்தில் நமக்கும் ஒரு நாள் பங்கு வேண்டும் என்பதை நாம் உறுதி செய்ய வேண்டும்…
— என்ற ரீதியில் தொடர்கிறது கட்டுரை…
பிழைக்கப் போன இடங்களில் நம்மவர், ஏன் விரட்டப்படுகின்றனர் என்பதை அறிந்து கொள்ள இந்த ஒரு சிறு உதாரணம் போதுமல்லவா?
***
Article Source: DINAMALAR
Like this:
Like Loading...