டில்லி நிருபர் அவர். வட மாநிலக்காரர் என்றாலும், ஐயப்ப பக்தி மிக்கவர். மாலை போட்டு விரதமிருந்து வருடா வருடம் சபரி மலை செல்பவர். இந்த ஆண்டும் மலைக்கு போகுமுன் சென்னை வந்த அவர், என்னையும், லென்ஸ் மாமாவையும் சந்தித்தார்.முன்பு நடந்த ஆப்கன் போரைப் பற்றி விலாவரியாக விவரித்தார் அவர். அங்கு சென்று வந்த, உடன் பணியாற்றும் பத்திரிகையாளரின், அனுபவங்களை விவரித்தார். பாகிஸ்தானில் அகதியாக இப்போது வசிக்கும் ஆப்கன் பெண்மணியின் அனுபவம் கொடுமையானது. அப்பெண், இப்படிச் சொல்லி இருக்கிறாள்:தலிபான்களின் ஆட்சியின் போது, சரியாக உடை அணியவில்லை என்பதற்காக நான்கு ஆண்டுகளுக்கு முன், 20 சவுக்கடி எனக்கு கொடுக்கப்பட்டது. அதன் தழும்புகள் என் முதுகில் இப்போதும் இருக்கின்றன.இந்த சவுக்கடித் தழும்பு இல்லாத பெண்ணையே நீங்கள் ஆப்கனில் பார்க்க முடியாது. தலிபான் சொல்லியிருந்தபடிதான் நான் புர்கா அணிந்திருந்தேன். ஆனால், என் மணிக்கட்டு தெரிந்து விட்டது என்பதற்காக, சாலையில் என்னை நிறுத்தி சவுக்கால் அடித்தனர். அதோடு அவர்கள் என்னை விடவில்லை… அதற்கு மேல் நடந்ததை நான் உங்களுக்கு சொல்ல இயலாது.
— இப்படிச் சொன்ன பெண்ணின் வயது 40.
***
ஆப்கனில் இப்போது பெண்களின் கல்வியறிவு வெறும் 4 சதவீதம் மட்டுமே. பெண்கள் பள்ளிக்குச் செல்வதை தலிபான் தடை செய்து விட்டது.உடல்நிலை சரியில்லாத பெண்கள், ஆண் மருத்துவர்களிடம் செல்வதும் தடை செய்யப்பட்டது. பெண் மருத்துவர்களோ பிராக்டிஸ் செய்வதற்கு தடை, இந்த நிலையில் பெண்களின் கதி என்ன?வெறும் ஜுரம் வந்தால் கூட, கவனிக்க யாருமின்றி, ஜன்னி கண்டு செத்தனர் பெண்கள். கர்ப்பிணிகளின் நிலையோ சொல்லவே தேவையில்லை.நோய் வந்த பெண்ணுக்கு, ஆப்கனில் உயிர் வாழ எந்த வாய்ப்பும் இல்லை. நோய் முற்றி சாக வேண்டியதுதான்.பெண்கள் வீட்டுக்கு வெளியே சென்று வேலை செய்வதற்கும் தடை. அதனால், விதவைப் பெண்கள் வேலை எதுவும் செய்ய முடியாமல் பட்டினியால் செத்தனர்.இதனால், ஆப்கன் தெருக்களில் நிறைய பெண்கள் பிச்சை எடுப்பதை நீங்கள் பார்த்து இருக்கலாம். (நல்ல வேளை, பிச்சை எடுப்பது தடை செய்யப்படவில்லை!)ஆப்கன் தெருக்களில் பிச்சை எடுத்துக் கொண்டிருந்த பெண்களில் பலர் போருக்கு முன் ஆசிரியையாகவும், நர்சாகவும் இருந்தவர்கள். பெண்களுக்கான பள்ளிகளும், மருத்துவமனைகளும் மூடப்பட்டு விட்டதால், அங்கு பணியாற்றிய பெண்கள் பிச்சைக்காரிகளாக அலைய வேண்டிய நிலை இருந்தது.இது மட்டுமல்ல, பெண், சப்தம் போட்டு சிரிக்கக் கூடாது. வீட்டுக்குள்ளேயே இருக்க வேண்டும். வெளியே வந்தால் அவளுடன் சகோதரனோ, கணவனோ, தகப்பனோ உடன் வர வேண்டும். ஆனால், அநேகமாக அவர்கள் போர்க்களத்தில் கொல்லப்பட்டிருப்பர். வெளியே சம்பந்தமில்லாமல் சுற்றித் திரியக் கூடாது. நடக்கும் போது செருப்புச் சத்தம் கேட்கக் கூடாது.இதில், ஏதாவது ஒன்று நடந்தால் கூட, தெருவில் நிற்க வைத்து பிரம்படி… பிரம்பு என்றால் மெல்லிய பிரம்பு அல்ல; கிரிக்கெட் பேட் அளவுக்கு செய்த தோல் பிரம்பு.மேற்சொன்ன காரணங்களால் ஆப்கனில் உள்ள பெண்களில் 99 சதவீதத்தினர், மன நோயாளிகளாக ஆகி விட்டனர். பல பெண்கள் தற்கொலை செய்து கொண்டனர்.ஆனால், போருக்கு முன் பெண்களின் நிலை எப்படி இருந்தது தெரியுமா? ஆசிரியர் வேலையில் – 70 சதவீதம்; மருத்துவர் – 40 சதவீதம்; அரசு வேலை – 50 சதவீதம் பெண்கள் இருந்தனர். பெண்கள் அப்போது பாராளுமன்றத்திலும், ராணுவத்திலும் இருந்தனர்.பெண்கள் மீது போடப்பட்டுள்ள உத்தரவுகளைப் பாருங்கள்: அவர்கள் அணியும் புர்கா சாக்கு போன்று கனமாக இருக்க வேண்டும். இதை உடம்பு முழுவதும் – கை மணிக்கட்டு கூட தெரியாமல் – போட்டுக் கொண்டு பாலைவன வெயிலில் நடப்பதை கற்பனை செய்து பாருங்கள்!சாலையின் ஓரத்தில்தான் நடக்க வேண்டும், சிரிக்கக் கூடாது. வளையல் மற்றும் வாசனை திரவியம் போடக் கூடாது. இடுப்பை அனாவசியமாக ஆட்டி நடக்கக் கூடாது! வீட்டுக்கு வெளியே யாரிடமும் பேசக் கூடாது!— இவை, அகதிப் பெண் கூறியது!நாய்களை விடக் கேவலமாக பெண்களை நடத்திய மூடர்கள், இப்போதாவது ஒழிந்தார்களே என எண்ணி, பெருமூச்சு விட்டேன்!
***
“ஆங்கிலேயர்கள் இந்தியாவை ஆண்டு கொண்டிருந்த போது, அவர்கள் வெளியிட்ட நாணயங்களில் இங்கிலாந்து நாட்டு அரசர்களின் உருவத்தைப் பொறிப்பது வழக்கம். ஆனால், சில நாணயங்களில் மட்டும் இங்கிலாந்து நாட்டு அரசனின் தலையில் கிரீடம் இருப்பதில்லை… காரணம் தெரியுமா?’ எனக் கேட்டார்,”பீச் மீட்டிங்” பெரியவர் ஒருவர். கேட்டு விட்டு அவரே விளக்கம் கொடுத்தார்…”அந்த அரசர், ஒரு பெண்ணிடம் தவறாக நடந்து கொண்டார். வழக்கு நீதிமன்றத்துக்குச் சென்றது. இங்கிலாந்தில் உள்ள நீதிமன்றத்தில் வழக்கு நடந்தால், அரசனுக்குச் சாதகமாகவே தீர்ப்பு கூறுவர். ஆகவே, வெளிநாட்டில் தான் வழக்கை நடத்த வேண்டும் என்று வாதாடினர்.”இந்தியாவில் வழக்கை நடத்தலாம் என்று முடிவு செய்தனர். அப்போது இந்தியாவில் சென்னை, மும்பை, கொல்கத்தா ஆகிய மூன்று நகரங்களில், தான் நீதிமன்றங்கள் இருந்தன.”மும்பை, கொல்கத்தா ஆகிய இரண்டு நகரங்களில் வெள்ளைக்காரர்களே நீதிபதியாக இருந்ததால், சென்னை நீதிமன்றத்துக்கு வழக்கு வந்தது.”விசாரணை ¬முடிவில், “அரசனின் ஆட்சிக்காலம் ¬முழுவதும் தலையில் கிரீடம் அணிந்து கொள்ளக் கூடாது!” என்று தீர்ப்பு வழங்கினார் சென்னை நீதிபதி.”அரசனும் நீதிபதியினுடைய தீர்ப்பை மதித்து, ஆட்சிக்காலம் ¬முழுவதும் தலையில் கிரீடம் வைத்துக் கொள்ளவில்லை. ஆகவே தான் அந்த அரசன் உருவம் பதித்த நாணயங்களில் கிரீடம் இல்லை!” என்றார் அந்தப் பெரியவர்.”அப்படி ஒன்றும் சரித்திர ஆதாரம் இருப்பதாகத் தெரியவில்லையே… நேருவின் உருவம் பொறித்த நாணயமும் நம் நாட்டில் வெளியிடப்பட்டது. அதில், “குல்லா” இல்லாமல், வழுக்கைத் தலையுடன் தான் நேரு உருவம் பொறிக்கப்பட்டது.”இதுபோல் கிரீடம் இல்லாததும் ஒரு யதார்த்தத்துக்காக இருந்திருக்கலாம்… சும்மா, “ரீல்”விடாதீங்க…’ என்றேன்.
— தெரிந்தவர்கள் விளக்கினால் நல்லது!
***
article source: DINAMALAR
