பார்த்தது..கேட்டது..படித்தது 19.6.2011

கம்ப்யூட்டரை, “ஆன்” செய்து, “ஈ-மெயில்” பார்ப்பது என்பது, தினசரி காலை பல் துலக்குவது போன்ற வழக்கமான பழக்கமாகி விட்டது.ஆனாலும், ஒவ்வொரு நாளும், ஈ-மெயில் பார்க்கும் போதும், “பலான சமாச்சாரங்கள் ஏதும் இன்று வந்திருக்கக் கூடாதே…” என்று வேண்டியபடியே தான் பார்க்க வேண்டியுள்ளது.
எவ்வளவுக்கெவ்வளவு உபயோகமான தகவல்கள் கிடைக்கிறதோ… அதே அளவில் தேவையில்லாத, பலான சமாச்சாரங்களும், படங்களும் வருகின்றன.
மதுரை, சேலம், ஈரோடு போன்ற நகரங்களில் உள்ள, “இன்டர்நெட் பிரவுசிங் சென்டர்”களில் இந்த சமாச்சாரங்களை, “டவுண்லோடு” செய்து, தயாராக வைத்துள்ளனர்.
இளைஞர் பட்டாளம் மணிக்கு, 50 – 100 ரூபாய் கொடுத்து, ஒரு காலத்தில், “புளூ – பிலிம்” பார்த்தது போல, இவற்றை பார்த்துச் செல்கிறது என்பது வேதனையான விஷயம்.
கம்மிங் பேக் டு த பாயின்ட்…

அன்று, ஈ-மெயிலில், “நாம் இந்தியர்” என பெருமை கொள்ள வைக்கும் வகையில் ஒரு தபால் வந்திருந்தது. அதில், இந்தியர்கள் படைத்த – படைத்துக் கொண்டிருக்கும் சாதனைகள் பட்டியலிட்டுக் காட்டப்பட்டிருந்தன. அதைப் படிக்கப் படிக்க பிரமை ஏற்பட்டது. பட்டியலில் இருந்து இதோ சில சாதனைகள்…
* கடந்த, பத்தாயிரம் ஆண்டுகளில், எந்த நாட்டின் மீதும் இந்தியா போர் தொடுக்கவில்லை.

* கணக்கிடுவதற்கு மிகத் தேவையான, “பூஜ்ஜியத்தை” கண்டுபிடித்தது இந்தியா; கண்டுபிடித்தவர் ஆர்யபட்டர்.

* கிறிஸ்துவுக்கு, எழுநூறு ஆண்டுகளுக்கு முன், இந்தியாவில் தட்சசீலத்தில், உலகிலேயே முதன்முதலாக பல்கலைக் கழகம் ஆரம்பிக்கப்பட்டது. உலகம் முழுவதிலும் இருந்து, பத்தாயிரத்து, 500 மாணவர்கள் இங்கு பயின்றனர். அறுபதுக்கும் மேற்பட்ட பாட வகைகள் கற்பிக்கப்பட்டன.

* கிறிஸ்துவுக்கு, நானூறு ஆண்டுகளுக்கு முன், நாளந்தா பல்கலைக் கழகம் இந்தியாவில் ஆரம்பிக்கப்பட்டது. இது, கல்வி உலகுக்கு பெரும் வழிகாட்டியாக அமைந்தது.

* ஐரோப்பிய மொழிகள் அனைத்திற்கும் தாய் மொழியாக அமைந்தது, இந்திய மொழியான சமஸ்கிருதம். கம்ப்யூட்டர், “சாப்ட்வேர்” தயார் செய்ய மிகவும் ஏற்ற மொழி சமஸ்கிருதம் தான் என, அமெரிக்கப் பத்திரிகையான,
“போபர்ஸ், 1987 ஜூலை இதழில் குறிப்பிட்டுள்ளது.

* ஆயுர்வேதம் தான் மனித இனத்திற்கு ஆதியில் தெரிந்த மருத்துவ முறை. இதை, இந்தியாவின் சரகர் என்பவர்தான் கண்டு பிடித்து முறைப்படுத்தினார். இன்று, உலகம் முழுவதும் ஆயுர்வேத மருத்துவ முறை புத்துயிர் பெற்று வளர்ந்து வருகிறது.

* பிரிட்டிஷ்காரர்கள் இங்கு ஊடுருவும் முன், இந்தியாதான் உலகிலேயே பணக்கார நாடாகத் திகழ்ந்தது.

* “Navigation” – என ஆங்கிலத்தில் சொல்லப்படும், கப்பல் – படகு செலுத்தும் கலையை 6,000 ஆண்டுகளுக்கு முன், சிந்து நதியில் நிகழ்த்திக் காட்டியவர்கள் இந்தியர்களே. “நவ்காத்” எனும் சமஸ்கிருத சொல்லே ஆங்கிலத்தில், “Navigation” என்றானது. ஆங்கிலத்தில், “நேவி” என, கடற்படையைக் குறிக்கும் சொல், “நூவ்” என்ற சமஸ்கிருத சொல்லில் இருந்தே வந்தது.

* சூரியனை பூமி சுற்றி வர எடுத்துக் கொள்ளும் நாட்கள் எத்தனை என்பதை, ஐரோப்பிய வான சாஸ்திரி ஸ்மார்ட் கண்டுபிடித்து கூறுவதற்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்பே, அதாவது, கி.பி, 5ம் நூற்றாண்டிலேயே இந்தியாவின் பட்டாச்சாரியர் கண்டுபிடித்து விட்டார். மிகச் சரியாக 365.258756484 நாட்களாகிறது என்பதை பட்டாச்சாரியர் கண்டுபிடித்தார்.

* கணித சாஸ்திரத்தில், “பை” என்பதன் மதிப்பைக் கணக்கிட்டவர் புதையனார் என்ற இந்தியரே. ஐரோப்பிய கணித மேதைகள், “பித்தகோரஸ் தேற்றத்”தை, விளக்குவதற்கு பல நூற்றாண்டுகளுக்கு முன், அதாவது, 6வது நூற்றாண்டிலேயே விளக்கினார் புதையனார்.

* கணிதத்தில் அல்ஜிப்ரா, டிரிக்னாமெட்ரி, கால்குலஸ் ஆகியவை இந்தியாவிலேயே கண்டுபிடிக்கப்பட்டது. குவாட்ராட்டிக் சமன்பாடுகள், ஸ்ரீதராச்சார்யா என்ற இந்தியரால், 11ம் நூற்றாண்டில் கண்டுபிடிக்கப்பட்டது.

* கம்பியில்லா தகவல் தொடர்பை, இந்தியாவின் ஜகதீஷ் போஸ் தான் முதன் முதலில் கண்டுபிடித்தார் – மார்கோனி (ரேடியோ கண்டுபிடித்தவர்) அல்ல என்று அமெரிக்க நிறுவனமான ஐ.இ.இ.இ., அடித்துக் கூறுகிறது.

* செஸ் விளையாட்டு, இந்தியாவிலேயே முதன்முதலில் கண்டுபிடிக்கப்பட்டது. சந்திரஞ்சா (சதுரங்கம்), அஷ்டபாதா என, இரு பெயரில் அழைக்கப்பட்டது.

* சிசேரியன், கேட்ராக்ட், செயற்கைக் கால், எலும்பு முறிவு, பித்தப்பைக் கல், மூளை மற்றும் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சைகளை, 2,600 வருடங்களுக்கு முன்பே, செய்து இருக்கிறார் சுஷ்ருதன் என்ற இந்தியர். அறுவை சிகிச்சைக்கு முன் கொடுக்கப்படும் மயக்க மருத்து சிகிச்சையையும் செய்து இருக்கிறார். 125க்கும் மேற்பட்ட அறுவை
சிகிச்சைக்கு கருவிகளையும் பயன்படுத்தி உள்ளார்.

— இப்படி எல்லாவற்றிலும் சரித்திரத்தில் நம்பர் ஒன் ஆகத் திகழ்ந்த இந்தியர்கள், இன்றும் நம் பெருமையை உலகம் முழுவதும் நிலைநாட்டி வருகின்றனர். உதாரணத்திற்கு: அமெரிக்காவில் உள்ள டாக்டர்களில், 38 சதவீதம் இந்தியர்கள்; விஞ்ஞானிகளில், 12 சதவீதம் இந்தியர்கள்; விண்வெளி துறையான, “நாசா”வில், 36 சதவீதம் இந்தியர்கள்; பில்கேட்சின், “மைக்ரோ சாப்ட்” நிறுவனத்தில், 34 சதவீதம் இந்தியர்கள்; கம்ப்யூட்டர் நிறுவனமான ஐ.பி.எம்.,மில் 28 சதவீதம் இந்தியர்கள்; அதே போல, “இன்டெல்” கம்ப்யூட்டர் நிறுவனத்தில், 17 சதவீதம் இந்தியர்கள்; “சிராக்ஸ்” நிறுவனத்தில், 13 சதவீதம் இந்தியர்கள்; அமெரிக்காவில், 35 லட்சம் இந்தியர்கள் வசிக்கின்றனர்…
இவை சிறு எடுத்துக்காட்டு தான்; அரசியல், ஜாதி, மதம் இவற்றை ஒதுக்கி வைத்து, நம் மக்கள் தம் அறிவுத் திறனை சரியான பாதையில் செலுத்தினால், நம்மை மிஞ்ச இவ்வையகத்தில் எவரும் இல்லை தானே!

ARTICLE SOURCE: DINAMALAR

திண்ணை 29.5.2011

“திப்பு” என்றாலே, புலி என்று தான் பொருள். திப்பு, தன்னை ஒரு புலியாகவே கருதி வாழ்ந்தார். பிரிட்டிஷ் சிங்கத்தை வீழ்த்தி விரட்ட, இறைவனால் அனுப்பப்பட்டவர் என்றே தன்னை நினைத்தார். திப்புவின் வாள், பீரங்கி, சிம்மாசனம், ராணுவச் சீருடை, ஆவணங்கள் என அனைத்திலும், புலியின் கர்ஜிக்கும் உருவம் பொறிக்கப்பட்டிருந்தது.
திப்பு தயாரித்திருந்த இயந்திரப் புலி, இந்திய மரச்சிற்ப மரபையொட்டி உருவாக்கப்பட்டது.
1795 து 178 செ.மீ., அளவில், அழகிய வண்ணம் தீட்டப்பட்டு விளங்குகிறது. புலியின் தோள் பக்கம் உள்ள விசையைத் திருகினால், புலி ஆவேசமாக உறுமி, கீழே விழுந்து கிடக்கும் வெள்ளைச் சிப்பாயைக் குதறுவது போலவும், அவன் அலறுவது போன்ற ஒலியை உண்டாக்க கூடியதுமான இயந்திர இசைக்கருவி, புலியின் வயிற்றுப் பகுதியில் பொருத்தப்பட்டுள்ளது.
திப்புவின் மரணத்திற்குப் பின், பிரிட்டிஷார் இங்கிலாந்துக்கு இதை எடுத்துச் சென்று விட்டனர். பிரிட்டிஷ் கம்பெனி, தன் முதல் எதிரியாகத் திகழ்ந்த திப்புவை வென்றதைக் கொண்டாடும் வகையில் வெளியிட்ட பதக்கத்தில், சிங்கம், புலியை வெல்வது போன்று பதித்து மகிழ்ந்தனர். மற்றொரு பதக்கத்தில், காரன்வாலிஸ் உருவத்தையும், திப்புவின் பிள்ளைகளை அவன் பணயமாகப் பெறுவதையும் அச்சிட்டனர்.
“திப்பு சுல்தான் – ஒரு மாவீரன்” என்ற நூலிலிருந்து…

***

சீன தேசத்தில், ஹஸி, ஹோ எனும் இரண்டு ஜோதிடர்கள் இருந்தனர்; அவர்கள், அரசு வேலைக்காரர்கள். சூரிய கிரகணம், சந்திர கிரகணம் முதலிய விசேஷ நிகழ்ச்சிகளைப் பற்றிக் கணக்கிட வேண்டியதும், அவற்றைப் பற்றி முன் எச்சரிக்கை செய்ய வேண்டியதும் அவர்களின் வேலை; அதற்காக, அவர்களுக்கு சம்பளம் தரப்பட்டு வந்தது.
கிரகணம் பிடிக்கும் போது, சூரியனும், சந்திரனும், பேராபத்தில் அகப்பட்டு திண்டாடுகின்றனர் என்பது, சீன தேசத்தாரின் நம்பிக்கை. அப்போது, சூரியனையும், சந்திரனையும் ஆபத்திலிருந்து விடு விப்பதற்காக, ஆகாயத்தை நோக்கி அம்புகளை எய்வதும், பறைகளைக் கொட்டுவதும், இன்னும், இவை போன்ற காரியங்களைச் செய்வதும் அந்நாட்டு வழக்கம். இவற்றை எல்லாம், அவர்கள் முக்கியமான மதச் சடங்குகளாகக் கருதினர்.
இவற்றைச் செய்யாமலிருந்தால், நாட்டுக்குப் பெரிய கேடு வந்துவிடும் என்றும் அவர்கள் எண்ணினர். இப்படிப்பட்ட காரியங்களைச் செய்ய வேண்டுமானால், முன்பாகவே அதற்கு தயாராக இருந்தாலன்றி முடியாது அல்லவா?
ஒரு முறை, அந்த இரண்டு வான சாஸ்திரிகளும், கணக்குப் போட வேண்டிய வேலையின் போது, கள்ளைக் குடித்து மயங்கிக் கிடந்தனர். வரப்போகும் சூரிய கிரகணத்தைப் பற்றி அவர்கள் கணக்கிடத் தவறி விட்டனர். ஆகவே, மக்கள் எதிர்பாராத சமயத்தில், திடீரென்று ஒரு சூரிய கிரகணம் வந்து விட்டது. மேலும், அது சாதாரண சூரிய கிரகணம் அல்ல; பூரண சூரிய கிரகணம்.
அப்போது, சற்று நேரம் <உலகமே இருளில் மூழ்கி விட்டது. கிரகணம் நிகழும் போது, நடத்த வேண்டிய சடங்குகள் ஒன்றும் சரியாக நடத்தப்படவில்லை. இந்த தவறால், தங்கள் தேசத்துக்கு ஏதாவது பெரிய தீங்கு ஏற்படக்கூடும் என, மக்கள் பயந்தனர். அரசனிடம் போய், தங்கள் குறையை முறையிட்டனர்.
இப்படி, அரசு ஜோதிடர்கள் செய்தது பெரும் பிழை என்று, அந்த இரண்டு வான சாஸ்திரிகளையும், சிரச்சேதம் செய்யும்படி உத்தரவிட்டான்; அதன்படி, அவர்கள் தலை வெட்டப்பட்டது.
அந்த கிரகணத்தால், சூரியனுக்கும், நாட்டுக்கும் என்ன ஆபத்து நிகழ்ந்ததோ, நிகழவில்லையோ தெரியாது; ஜோதிடர்கள் இருவருக்கும், அந்த கிரகணத்தால், மிகப்பெரிய ஆபத்து வந்தது என்பதில் சந்தேகம் இல்லை.
பெ.நா.அப்புசுவாமி ஒரு கட்டுரையில்.

***

நாடக உலகில் பழம் பெரும் நடிகர் யதார்த்தம் பொன்னுசாமி. பல நடிகர்களை உருவாக்கி, ஓய்ந்து போனவர். அவருக்கு நிதி திரட்ட, நடிகர் கே.ஏ.தங்கவேலு குழுவினர், திருச்சி தேவர் ஹாலில், ஜூன் 9, 1967ல் நடத்திய, “மனைவியின் மாங்கல்யம்” நாடகத்திற்கு, கட்டணம் வாங்காமல் தலைமை தாங்கினார் ஈ.வெ.ரா., அந்த வகையில், ஈ.வெ.ரா.,வின் நன்கொடை, 150 ரூபாய் என கணக்கிடப்பட்டது.
“ஈ .வெ. ரா., வரலாறு” நூலில், கவிஞர் கருணானந்தம்.

பார்த்தது..கேட்டது..படித்தது 29.5.2011


லண்டனில் வசிக்கும் இலங்கைத் தமிழர் அவர்; வியாபாரத்தில் ஈடுபட்டிருந்தார். கடந்த வாரத்தில் சென்னை வந்திருந்த போது, அலுவலகம் வந்து சந்தித்தார். அவரது துணைவியார் நடனமணி; பரத நாட்டியத்தில் வல்லவர். அவரைப் பற்றியும், அவரது குழந்தைகள் பற்றியும் நலம் விசாரித்து, மாலையில் அவர் தங்கியிருக்கும் ஓட்டலுக்கு நானும், லென்ஸ் மாமாவும் வருவதாகக் கூறி, அதன்படியே சென்றோம்.
சிறிது நேர சம்பிரதாயப் பேச்சுகளுக்குப் பிறகு, “இங்கிலாந்தில் உள்ள டீன்-ஏஜர்களிடம், “மாரல் வேல்யூ” எல்லாம் எக்கச்சக்கமாக குறைந்து வருவதாக கேள்விப்படுகிறேனே… உண்மைதானா?” எனக் கேட்டேன்.
அவர் சொன்னார்: ஆமாம்பா… நான் சொல்லப் போற நியூஸ், உனக்கு ஷாக் ஆக கூட இருக்கும். இங்கே, 13 வயதுடைய பெண் குழந்தைகளில், கால்வாசி பேர் நான்கிற்கும் மேற்பட்ட, “பார்ட்னர்கள்” வைத்துள்ளனர். 13 முதல், 15 வயதுடையவர்களில், ஆறில் ஒரு பெண்ணும், ஐந்தில் ஒரு பையனும் செக்சில் தீவிரமாக இருக்கின்றனர் – அது, சட்டத்திற்கு புறம்பானது என்று தெரிந்தும் கூட.

குடிபோதையில் இருக்கும் போது, தம் கன்னித் தன்மையை இழந்ததாக, ஐந்தில் ஒரு, “டீன்-ஏஜர்” என்ற விகிதத்தில் கூறுகின்றனர். மேற்கு ஐரோப்பிய நாடுகளில், இங்கிலாந்தில் மட்டும்தான், “டீன்-ஏஜ்” பெண்கள் கர்ப்பம் தரிப்பது அதிகமாக உள்ளது…

இது மட்டுமல்ல, இக்குழந்தைகள் தம் தாய்மொழியான ஆங்கிலத்தை கற்பதிலும் பின் தங்கியே இருக்கின்றனர். மற்ற ஐரோப்பிய மொழி பேசும் குழந்தைகள், தம் தாய் மொழியின் அடிப்படையை, ஒரு வருடத்தில் கற்றுக் கொள்கின்றனர் என்றால், இவர்களுக்கு மூன்று வருடமாகிறது.
மற்ற ஐரோப்பிய மொழிகளை, ஒரு வருடம் படித்தாலே, அவற்றில் உள்ள, 90 சதவீத வார்த்தைகளை சரியாக உச்சரிக்க கற்றுக் கொள்கின்றனர் அந்நாட்டு குழந்தைகள்; இதுவே, இங்கிலாந்துக் குழந்தைகள், 30 சதவீதம்தான் கற்றுக் கொள்ள முடிகிறது என்று விலாவாரியாக நண்பர் பேசிக் கொண்டே போக, லென்ஸ் மாமா திருதிருவென்று விழிக்க ஆரம்பித்தார். லென்ஸ் மாமாவின் தர்ம சங்கடத்தைப் புரிந்து கொண்ட நண்பர், “ஓ… உங்களை மறந்து விட்டேனே…” என்று கூறியபடியே, ஜெம்மிசன் பாட்டிலை ஓப்பன் செய்து, “தாக சாந்தி”க்கான சம்பிரதாயங்களை செய்து முடித்தார்.

பின்னர், ஓட்டலின் ரூம் சர்வீசுக்கு போன் செய்து, கடாய் பனீர், முருக் டிக்கா, பிஷ் பிங்கர், ரஷ்யன் சாலட் ஆகியவற்றுக்கும் ஆர்டர் செய்தார். பின்னர், “இந்த ட்ரிப்புக்கு ஏதும் விசேஷக் காரணங்கள் உண்டா?” எனக் கேட்டேன்.

அவரே தொடர்ந்தார்: கண்டிப்பாக உண்டு. புட் இன்டஸ்ட்ரியில் இறங்கலாம் என முடிவு செய்துள்ளேன். இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் இவற்றை விற்பனை செய்வது குறித்து, ஆராய்ச்சி செய்யவே வந்துள்ளேன்.

உங்கள் ஊரில் தயாராகும் பர்பி, லட்டு, பேடா, குலோப் ஜாமூன் போன்றவை சுகாதாரமற்ற முறையில் தயாராகிறது. அத்துடன், ஆர்கனைஸ்டு செக்டரில் இத்துறை இல்லை.
இந்தியாவில் தயாராகும் சாக்லேட்டுகள் மற்றும் மேல்நாட்டு வகை இனிப்புகளின் மார்க்கெட்டை விட, நூறு சதவீதம் அதிக விற்பனையாகின்றன, நான் சொன்ன லட்டு, குலோப் ஜாமூன் போன்ற ஸ்வீட்டுகள். இவற்றின் வருடாந்திர விற்பனை, பத்தாயிரம் கோடி ரூபாய் என்றால், உனக்கு மயக்கம் வருகிறது தானே!
இந்த மார்க்கெட் வருடத்திற்கு, 10 சதவீதம் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்தியாவில், முப்பது நகரங்களில் — குறிப்பாக, வடமாநில நகரங்களில் ஒரு ஏஜென்சி உதவியுடன், சர்வே நடத்தினேன். இதில் கிடைத்த ஆச்சரியமான தகவல்: இந்த நகரங்கள் அனைத்திலும், ஒவ்வொரு நாள் காலையிலும், இரண்டு லட்ச ரூபாய் மதிப்புள்ள ஜிலேபி விற்பனையாகிறது என்பதுதான்.

இதுபோன்ற ஜிலேபிகளை சுகாதாரமான முறையில், மிஷின்கள் உதவியுடன், தயாரித்து, “டீப்-பிரீஸ்” செய்து விற்கலாம் என்ற யோசனை இருக்கிறது.மசாலா பொரி மற்றும் வறுத்த பாசி பருப்பு ஆகியவற்றின் மார்க்கெட்டும் சூப்பராக இருக்கிறது. இதன் உள்நாட்டு விற்பனை ஆண்டுக்கு, அறுநூறு கோடி ரூபாய்.இங்கே இந்தியாவில், ஐம்பது வெவ்வேறு நிறுவனங்கள், ஊறுகாய் தயாரிப்பில் ஈடுபட்டுள்ளன. ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கான டன் மாங்காய், எலுமிச்சை, பச்சை மிளகாய் பயன்படுத்தி, ஊறுகாய்கள் தயாரிக்கப்படுகின்றன. இவை, வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
ஆண்டுக்கு, 4,000 கோடி ரூபாய்க்கு ஊறுகாய் வியாபாரம் நடக்கிறது என்றால் பார்த்துக் கொள்ளேன் என்று கூறும் போது லென்ஸ் மாமா, “ஊறுகான்னதும்தான் ஞாபகம் வருது… சரக்கு சாப்பிடும் போது நாக்கில் தடவிக் கொள்ள மாங்கா ஊறுகாய் இருந்தா அதோட டேஸ்ட்டே தனிதான். போன் போட்டு கொஞ்சம் ஊறுகாய் கொண்டு வரச் சொல்லுங்க…” என்றபடியே இன்னொரு ரவுண்ட்டுக்குத் தயாரானார்.
நான் கடாய் பனீரை ஆள்காட்டி, நடுவிரல் நடுவே லாவகமாக எடுத்து வாயில் போட்டுக் கொண்டு, “ம்… சொல்லுங்க!” என்றேன்.
மீண்டும் தொடர்ந்தார்: இந்தியாவில், முப்பது வகையான அப்பளங்கள் விற்பனையாகின்றன. மல்டி நேஷனல் கம்பெனி ஒன்று அப்பளத் தயாரிப்பு மற்றும் வியாபாரத்தில் ஈடுபட எண்ணி, மார்க்கெட் சர்வே ஒன்று நடத்தியது. அப்போது, அப்பள மார்க்கெட் ஆண்டுக்கு, 5,000 கோடி ரூபாய் என்று கண்டு கொண்டது.இதே போல ரெடிமேட் சப்பாத்திக்கும் நல்ல மார்க்கெட் உள்ளது. இந்தியாவில், 60 சதவீத மக்கள் சப்பாத்தியே சாப்பிடுகின்றனர். இந்தியாவில் கோதுமை உற்பத்தியில், 10 சதவீதம் மட்டுமே பிஸ்கெட், ரொட்டி, கேக் தயாரிப்புக்கு செலவாகிறது. மீதமுள்ள, 90 சதவீதமும் சப்பாத்தி, புரோட்டா போன்றவை தயாரிக்கவே பயன்படுகிறது.
ரொட்டி மற்றும் பிஸ்கெட் கம்பெனிகளுக்கிடையே நிலவும், மிகப்பெரிய போட்டி காரணமாக, எக்கச்சக்க விளம்பரங்கள் வெளியாகின்றன. இதனாலேயே இவற்றைத் தயாரிப்பதற்கு அதிக அளவில், கோதுமை செலவாவதாக ஒரு மாயத் தோற்றம் மக்களிடையே உள்ளது.
இந்த ஆராய்ச்சிகளுக்காகவே எக்கச்சக்க பணம் செலவழித்து விட்டேன். விரைவில் புட் புரொடக்ஷன் இன்டஸ்ட்ரியில் கால் பதிக்கப் போகிறேன் என்று கூறி முடித்தார். “இந்தியாவிலேயே இருந்து கொண்டு இதுபற்றியெல்லாம் ஒன்றுமே தெரியாமல் இருந்து விட்டோமே!” என எண்ணியபடியே, லென்ஸ் மாமாவை அழைத்துக்கொண்டு, ஓட்டலை விட்டு வெளியேறினேன்.

***

Article source: DINAMALAR