அரிச்சந்திர புராண விரிவுரையில் கேட்டது: எப்படியாவது அரிச்சந்திரனை, “பொய் பேசுபவன்” என்று நிரூபணம் செய்ய வேண்டும் என்ற நோக்கில், விசுவாமித்திரர், அரிச்சந்திரனைத் தொடர்கிறார்.
கானகத்தின் வழியே செல்கின்றனர். இரவு நேரம் நெருங்குகிறது. ஒரு புறம் பசி, தாகம், இந்த நிலையில் அரிச்சந்திரன் களைப்பு மேலீட்டால், சிறிது கண்ணயர்கிறான்.
இதை அறிந்த முனிவர், அரிச்சந்திரனைப் பார்த்து, “என்ன தூக்கமா?” என்று கேட்டார். அதற்கு மிகப் பணிவாக, “ஆம், சிறிது கண்ணயர்ந்து விட்டேன். மன்னித்தருள்க…” என்று வேண்டுகிறான் அரிச்சந்திரன்.
இந்த இடத்தில், நாம் ஓர் உண்மையைக் கவனிக்க வேண்டும். உலகில், மக்கள் அனைவரும், இம்மாதிரி களைப்பு, அசதி காரணமாக, ஒரு குட்டித் தூக்கம் போடும் போது, “என்ன, தூக்கமா?” என்று நாம் கேட்டால், “இல்லையே… விழித்துக் கொண்டுதான் இருக்கிறேன்!” என்று தான் கூறுவர். இது நாம், நம்மை அறியாமல் சொல்லும் பொய்; ஆனால், அரிச்சந்திரன் வாய் தவறிக் கூட பொய் சொல்லவில்லை.
— கதை சொன்னவர்: வடகுடி (சேங்காலிபுரம்) நாராயண தீட்சிதர்.
***
பாரதியார் வீட்டில் மிகவும் வறுமை. அவர் மனைவி செல்லம்மாள், யார் வீட்டிலோ, கடனாக அரைப்படி அரிசி வாங்கி வந்து, சமைப்பதற்காக வைத்திருக்கிறார்.
பாரதி வருகிறார்; அரிசியைப் பார்க்கிறார். வீட்டுக் கொல்லைப்புறம் மேய்ந்து திரியும் குருவிகளைப் பார்க்கிறார். உடனே, ஒரு கை அரிசியை அள்ளி, குருவிகளுக்கு இறைக்கிறார். அவை, அரிசியைப் பொறுக்கித் தின்று பசியாறுவதைப் பார்த்து ரசிக்கிறார்.
இந்த நினைவோடு, “தமிழ்ப்பாவை” என்ற பழைய சிற்றிதழ் ஒன்றைப் புரட்டிக் கொண்டிருந்தேன். அதன் ஆசிரியர் கருணைதாசன் என்பவர், பாரதியின் சீடர்; பாரதிதாசனுடன் பழகியவர். அவர், அந்தப் பத்திரிகையில், பாரதிதாசன் பற்றி நினைவு கூர்கிறார்:
மதுரை சேதுபதி உயர்நிலை பள்ளிக்கு, 1957ல் வருகை தந்தார் பாரதிதாசன். அன்று மதியம், என் வீட்டிற்கு உணவருந்த வரும்படி கேட்டேன்; அவரும் ஒப்புக் கொண்டார். “என்ன உணவு ஐயா, உங்களுக்குப் பிடித்தமானவை?” என்று கேட்டேன்.
அவர் சிரித்துக் கொண்டே, “உன் மனைவி, படித்த பெண் ஆயிற்றே… நல்லா சமைப்பாளா?” என்று கேட்டார்.
“திருமணமான போது, என் மனைவிக்கு சமைக்கத் தெரியாது; இப்போது கைவந்த கலை!” என்றேன் நான்.
“அப்படீன்னா, நாலைந்து புறாக் குஞ்சு வாங்கி, பக்குவமா சமைக்கச் சொல்லு… உடம்புக்கு நல்லது. 15 – 20 நாள் குஞ்சாக இருக்கட்டும்…” என்றார்.
அதன்படி, பக்கத்திலுள்ள கோச்சடை என்ற இடத்துக்கு ஆள் அனுப்பி, சிறு புறாக் குஞ்சுகளாக வாங்கி வந்து சமைத்து வைத்தோம்.
நன்கு சுவைத்து, உண்டு மகிழ்ந்தார் கவிஞர்.
— தமிழ்ப்பாவை, 1.5.1989 இதழிலிருந்து…
Article source: Dinamalar
