
நண்பர் ஒருவரை வரவேற்க, சென்னை திரிசூலம் பன்னாட்டு விமான வருகை தளத்தில் காத்திருந்தோம். அதிகாலை, 4:00 மணிக்கு லண்டனிலிருந்து, நேரடியாக சென்னை வரும், “பிரிட்டிஷ் ஏர்வேஸ்” விமானம் அது. முதல் நாள் இரவு, உ.பா., சாப்பிட்டு, உணவு ஏதும் எடுக்காமல், லென்ஸ் மாமா படுத்து விட்டார் போலும்… “மணி… பசிக்கிதுப்பா… பசிக்கிதுப்பா…” என, “தொணத்தி” கொண்டே இருந்தார்.
சுற்று முற்றும் பார்த்தேன்… காபி – டீ கடை ஒன்று மட்டும் தான் திறந்து இருந்தது… கொஞ்ச தூரம் நடந்ததும், “அடையார் ஆனந்த பவனின்” விமான நிலையக் கிளைக் கடையை சாவகாசமாகத் திறந்து கொண்டிருந்தார் ஊழியர் ஒருவர்…
திராட்சைப் பழம் போல, ரோஸ் கலரில், கொஞ்சம் ஜீராவில் ஊறி கொண்டிருந்த இனிப்பு ஒன்றைக் காட்டி, பெண்மணி ஒருவர், தன் கணவரிடம் தெலுங்கில் மாட்லாடிக் கொண்டிருந்தார்… உடனே கணவர், தெலுங்கு கலந்த தமிழில், இரண்டு கிலோ இனிப்புக்கு, “ஆர்டர்” கொடுத்தார்…
“அட… தேவுடா… இந்த அதிகாலை வேளையில் ஸ்வீட்டா?” என, எனக்குத் தெரிந்த தெலுங்கில் நினைத்துக் கொண்டு, லென்ஸ் மாமாவை அழைத்து வரச் சென்றேன்… கொஞ்சம் மிக்சரோ, காரச் சேவோ வாங்கி, அத்துடன் காபி சாப்பிட்டால், அவரின் பசி அடங்குமே என்ற எண்ணத்தில்…
அகோரப் பசியில் இருந்த மாமா, நூறு கிராம் மிக்சர் வாங்கியதுமே, பட, படவென வாய்க்குள் கொட்ட ஆரம்பித்தார்… அவரின் கையை, “லபக்” எனப் பிடித்த குப்பண்ணா, “ஓய்… கையை அலம்பினீரா? எந்தப் பொருளை சாப்பிடுமுன்னும் பொது விதிகள் சிலது இருக்கு. தெரியாதா உமக்கு?” என வினா எழுப்பினார்… அதற்கு பதில் சொல்லும் பொறுமை எல்லாம் இல்லை மாமாவிடம்… காரியத்திலேயே கண்ணாய் இருந்து, மிக்சரை, “அரை”த்துக் கொண்டிருந்தார்.
குப்பண்ணாவை தனியே அழைத்துச் சென்று, “அந்தப் பொது விதிகளை எங்கிட்டே சொல்லுங்களேன்… நான் எழுதி, நாலு வாசகர்களாவது அதைப் பின்பற்றுவர்… நல்லது நடக்கட்டுமே…” என்றேன்.
பேஷா சொல்றேன் அம்பி… கேட்டுக்கோ… இது, “ஆச்சாரக் கோவை”யில சொல்லப்பட்டது… என்னோட கற்பனைன்னு நெனைச்சுண்டுடாதே…” என்றவர், சிறிய இடைவெளி விட்டு ஆரம்பித்தார்…
சாப்பிடறதுக்கு முன்னே, கை, கால் அலம்பி, வாய் கொப்பளிக்கணும்… உடனே, காலையும் கழுவணும்… காலை கழுவிய ஈரத்துடனே சாப்பிட உக்காரணும்… அப்பறம், சாப்பிடப் போற இலையோ அல்லது தட்டையோ சுற்றி நீர் தெளிக்கணும்… இது, எறும்பு அல்லது ஈ அங்கே அண்டாமல் இருக்கறதுக்கு!
இப்போ, “புபே”ன்னு நாகரிகமா, அவாளே எடுத்து போட்டுண்டு, நின்னோ, நடந்தோ சாப்பிடுறாளே… அது தப்பு! “புபே”ன்னாலும், எடுத்துப் போட்டுண்டு, எங்கேயாவது உக்காந்துண்டு தான் போஜனம் பண்ணணும்! சாப்பிடும் போது பேசிண்டே இருக்கப் படாது!
சாப்பிடறது கிழக்குப் பக்கமாவோ, வடக்குப் பக்கமாவோ இருக்கணும்! தெற்கு, மேற்கு திசைகளைப் பார்த்து சாப்பிடறதை கண்டிப்பா, “அவாய்ட்” பண்ணிடனும்…கல்யாணப் பந்தியிலோ அல்லது வேறு விசேஷ பந்தியிலோ அமர்ந்து சாப்பிடும் போது, நம்மை விட மூத்தோர் பக்கத்தில் உட்கார்ந்து சாப்பிடப்படாது… ஒரு வேளை, அப்படி அமைஞ்சுட்டுதுன்னா, அவா சாப்பிட ஆரம்பிக்கு முன்னே நாம் சாப்பிடப்படாது; அது போலவே, அவா சாப்பிட்டு எழுந்திருக்கு முன்னே நாம் எழுந்திருக்கப் படாது!
பொதுவா, மூத்தவா சாப்பிட்டப்பறம், இளையவா சாப்பிடறது தான் நல்லது…
“முதல்ல பாயசம் அல்லது பூந்தி போன்ற இனிப்பு வகைகளையும், மத்த, “ஐட்டங்களை” இடையிலும், கடைசியில் கசப்பு உணவுகளையும் சாப்பிடணும்… சில பேர் மோர் சாதம் சாப்பிட்டப்பறம் பாயசம் சாப்பிடுவா… அது ரொம்பக் கெடுதி தெரிஞ்சுக்கோ!
சாப்பிட்டப்பறம் நன்னா வாய் கொப்பளிச்சுட்டு, கால் அலம்பின ஈரம் காயர வரை நன்னா நடந்துட்டுத் தான் ராத்திரியில படுக்கைக்குப் போகணும்!
விருந்தாளிகள், மூத்தோர், குழந்தைகள், பசு, பறவைகளுக்கு உணவு அளித்த பிறகு தான், இளையோர் சாப்பிட வேண்டும்!
சாப்பிட்ட பின்னரே தண்ணீர் அருந்த வேண்டும். தண்ணீர் டம்பளரையோ, குவளையையோ ரெண்டு கையிலும் பிடிச்சுண்டு குடிக்கப்படாது… பெரியோருக்கு ஏதாவது ஒன்றைத் தரும் போதோ அல்லது பெறும் போதோ மட்டுமே இரு கைகளாலும் செய்யணும். என, மிக நீண்ட, “லெக்சர்” கொடுத்து முடித்தார்…
மிக்சர் சாப்பிட்டு, காபியும் குடித்து, வெண்குழல் வத்தியை கார் பார்க்கிங் இருட்டு நிழலில் ஊதிக் கொண்டிருந்தார் லென்ஸ் மாமா… விமான நிலையம் பொது இடமாயிற்றே… பொது இடங்களில் புகைபிடித்தால் போலீஸ் புடிச்சுக்குமே!
***
லென்ஸ் மாமாவிற்கு ரத்தத்தில் கொழுப்பு சத்து கூடி விட்டது. “தினமும், 45 நிமிடம் முதல் ஒரு மணி நேரம் வரை நடைப்பயிற்சி மேற்கொண்டே ஆக வேண்டும்!” என, மருத்துவர் அறிவுறுத்தியதால், அதை செய்கிறார்.
“நல்ல விஷயம் தானே!” என நீங்கள் எண்ணலாம்… ஆனால், தொல்லை என்னையல்லவா பிடித்துக் கொண்டது. அதிகாலை, 4:30 மணிக்கு என் இருப்பிடம் வந்து, “பீம்… பீம்” என ஹாரன் அடித்து, என்னை எழுப்பி, தன்னுடன் நடைப் பயிற்சிக்கு அழைத்துச் சென்று விடுகிறார். தூக்கம் கலையாமல், அரைக் கண் விழித்த நிலையிலேயே நடந்து செல்லும் போது கண்ட காட்சிகள்…
* கை இல்லாத பனியனும், டிராக் சூட்டும் அணிந்து, தலை முடியை போனி டெயில் ஸ்டைலில் கட்டி, இளம் பெண்கள் ஏன் குதித்து, குதித்து ஓடுகின்றனர்? அப்படி ஓடும் போது, அவர்களின் அங்க அசைவுகள் ஆபாசமாக தெரிவதுடன், சபலிஸ்ட் ஆண்களின் மனதை பதறவும் வைக்கின்றனரே… இது ஏன்?
*நடுத்தர வயது பெண்கள் ஓடுவதில்லை. அதற்கு பதில், “மென் குதி நடை” பயில்கின்றனர். அவர்களும் தம் மீது துப்பட்டா போடாமல், மிகுந்த லோ கட் டாப்ஸ் அணிந்து செல்லும் போது, கால் மணி நேர நடையிலேயே வேர்த்து, விறுவிறுத்து உடலோடு ஒட்டிக் கொண்ட சுரிதார் டாப்ஸ், அங்கங்களின் வளைவு, நெளிவுகளை
அப்படியே வெளிச்சம் போட்டு காட்டுவது இவர்களுக்கு தெரிவதில்லையே… ஏன்?
* டூ – வீலர் ஓட்டும் சென்னைப் பெண்கள், 90 சதவீதம் பேரும் தம் சுரிதார் டாப்சில் உள்ள சைடு கட்டிங்கை இடுப்பு வரை வெட்டி, தைசையும், கால் மசில் அழகையும் வெளிச்சம் போடுவது ஏன்?
— இது போன்ற உடைகள் பெண்களுக்கு வசதி என்பதால், இப்படி அணிகின்றனரா? மண் தின்னப் போகும் உடம்பை மனிதர்கள் பார்த்து ரசிக்கட்டுமே என்ற தாராள மனப்பான்மையுடன் இருக்கின்றனரா?
***
Article Source: DINAMALAR
Like this:
Like Loading...