தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த ஐயர் ஒருவர், பட்டுக்கோட்டை யாரை ஒரு படத்துக்குப் பாட்டு எழுத ஒப்பந்தம் செய்தார். பாடல், “ரிகார்டிங்’கும் ஆகிவிட்டது. ஆனால், அதற்கான ஊதியத்தைக் கொடுக்காமல், இழுத்தடித்து வந்தார்.
ஒரு நாள் ஐயரின் வீட்டுக்குப் போனார் பட்டுக்கோட்டையார்; ஐயரும் இருந்தார். வணக்கம் சொல்லி விட்டு, “முக்கியமான செலவுகளுக்காக சிரமப்படுகிறேன். இன்று எப்படியாவது நீங்கள் பணம் கொடுத்தாக வேண்டும்…’ என்றார்.
ஐயரோ, “பணம் இன்னிக்கு இல்லே; நாளைக்கு வேணும்னா வந்து பாருங்கோ…’ என்றார்.
ஐயரைப் பார்த்தபடியே நின்று கொண்டிருந்தார் பட்டுக் கோட்டையார்.
“என்ன… நின்னுட்டே இருக்கேள்… போய்ட்டு நாளைக்கு வாங்கோன்னேன்! இல்லே, நிக்கிறதா இருந்தா நின்னுன்டே இரும்…’ என்று கூறிவிட்டு, ஐயர் உள்ளே போய் விட்டார்.
முதலில், “நாளைக்கு வாங்கோ’ என்றிருந்த மரியாதை, கடைசியில், “நின்னுன்டே இரும்…’ என்றும், “வாரும், போரும்…’ என்றும் குறையத் தொடங்கி விட்டதைப் புரிந்து கொண்டதும், வந்தது கோபம். பிறகென்ன, அது கவிதைக் கனலாக உருவெடுத்தது. உடனே, சட்டைப் பையிலிருந்து தாளையும், பேனாவையும் எடுத்து, ஏதோ எழுதினார். மேஜையின் மீது வைத்துவிட்டு வீட்டுக்கு, “விர்’ரென்று வந்து விட்டார். வந்து கொஞ்ச நேரம் கழிந்ததும், அந்தக் கம்பெனியிலிருந்து ஒரு ஆள் பணத்துடன் வந்து விட்டான். அவர் துண்டுச் சீட்டில் எழுதி வைத்துவிட்டு வந்த கவிதை இதுதான்.
“தாயால் வளர்ந்தேன்
தமிழால் அறிவு பெற்றேன்
நாயே… நேற்றுன்னை
நடுத் தெருவில் சந்தித்தேன்
நீ யார் என்னை நில்லென்று சொல்ல?”
இதைப் படித்து விட்டுத்தான் அந்த ஐயர் உடனே பணத்தைக் கொடுத்தனுப்பி விட்டார்.
— தில்ரூபா சண்முகம் எழுதிய, “பட்டுக் கோட்டையார்’ நூலிலிருந்து…
*****************************************************
சேலத்தில், “காந்தி ஐயர்’ ஓட்டல் பெயர் பெற்றது. அந்த ஓட்டலின் சொந்தக்காரர் இயற்பெயர் எனக்குத் தெரியாது. பொது ஜனங்கள் அவரை காந்தி ஐயர் என்று தான் அழைக்கின்றனர். அரிஜன இயக்கம் தமிழகத்தில் தலையெடுத்த காலத்தில் சேலம் காந்தி ஐயரும் அதில் ஈடுபட்டார்.
தம் ஓட்டலில் அரிஜனங்கள் நுழையவும், மற்ற ஜாதி இந்துக்களுடன் இருந்து உணவு உண்ணவும் அனுமதி கொடுத்தார். இதன் பயனை ஒரு வாரத்திற்குள் அனுபவித்தார். அவர் ஓட்டலுக்கு யாரும் சாப்பிடப் வருவதில்லை. ஓட்டலுக்கு யாரும் சாப்பிட வராவிட்டால், ஓட்டல்காரர் கதி என்னவாகும்? காந்தி ஐயர் ஓட்டாண்டி ஆகிவிட்டார். இருப்பினும், மகாத்மாவின் மேல் பாரத்தைப் போட்டு, தாம் பிடித்த விரதத்தை விடாது கடைபிடித்து வந்தார். பதினைந்து நாட்கள் ஆயின. ஒருவர் இருவராக மெல்ல மெல்ல ஜாதி இந்துக்கள் திரும்பி வர ஆரம்பித்தனர்.
மாதம் ஒன்றாயிற்று. போன பேர்வழிகளில் பாதிப் பேர் திரும்பி விட்டனர். இரண்டாவது மாதத்தில், எல்லாரும் திரும்பி விட்டனர். மூன்றாவது மாதத்தில், காந்தி ஐயர் ஓட்டல் கியாதி அடைந்து விட்டது. நஷ்டமடைந்த பணம் வட்டியும், முதலுமாகத் திரும்பிவிட்டது.
சேலம் நகர சபையினர், தங்கள் எல்லைக்குள் எந்த சாப்பாட்டு இடம் இருந்த போதிலும், அதனுள் எல்லா ஜாதியாரும் சமமாகப் புகும் உரிமை வேண்டுமென்ற நியாயத்தை வற்புறுத்த வேண்டுமெனத் தீர்மானம் செய்தனர். பொது ஜனங்களுக்கு சாப்பாடு, பலகாரம் முதலியவை அளிக்கும் இடங்களில், ஒரு ஜாதியாரை மட்டும் வராமல் தடை செய்யும் ஓட்டல்களுக்கு லைசென்ஸ் ரத்து செய்யப்படும் என்று, தீர்மானம் நிறைவேற்றி, சென்னை சர்க்கார் அனுமதிக்கு அனுப்பினர். சென்னை சர்க்கார் அதற்கு அனுமதி கொடுக்க மறுத்தனர். ஆனால், நகரசபையார், சென்னை சர்க்கார் இருவரையும் காந்தி ஐயர் வென்று விட்டார்.
—”தமிழ்நாட்டில் காந்தி’ நூலிலிருந்து…
—————–
source: DINAMALAR