பார்த்தது..கேட்டது..படித்தது 24.10.2010

மது உற்பத்தி நிறுவனம் ஒன்றின் மாநிலப் பிரதிநிதி ஒருவர் எங்கள் நண்பர். நாகாலாந்து மாநிலம் முழுவதற்கும் பொறுப்பாளர். தமிழர் தான்! கடந்த வாரம் சென்னை வந்திருந்தார்.

“பீச் பக்கம் போயே ரெண்டு வருஷம் ஆச்சு… நாகாலாந்தில் பீச்சை எங்கே பார்க்கிறது… வா… அங்கே போவோம்!”  என அழைத்தார்.

பீச் நண்பர்களுடன் அளவளாவி விட்டு, கடல் நீரில் காலை நனைத்து விட்டு, மணலில் அமர்ந்த போது, “அரசியல் நிலவரமெல்லாம் நாகாலாந்துல எப்படி இருக்கு?” எனக் கேட்டேன்.

“நம்மூருக்கு இளச்சது இல்லே நாகாலாந்து அரசியல்… எங்க மதுக் கம்பெனியின் ஏரியா வினியோகஸ்தராக இருந்தார் ஒருவர்… திடீரென அமைச்சராகி விட்டார். என்ன பதவி கொடுப்பது? முக்கியமான பதவிகள் எல்லாம் பலமிக்கவர்கள் எடுத்துக் கொண்டு விட்டனர்.

“இவரும் ஓரளவு செல்வாக்கு மிக்கவரே… பார்த்தார் முதல்வர்… பட்டு வளர்ப்புத் துறை என்ற ஒரு மினிஸ்டிரியை உருவாக்கி, அதில் அமைச்சர் பதவியைக் கொடுத்து விட்டார்.

“இவரது பணி என்ன தெரியுமா? வெளி மாநிலங்களில் இருந்து, வளர்ப்பதற்காக வரும் பட்டுப் புழுக்களை இரண்டு பாகமாகப் பிரித்து, ஒரு பாகத்தை முதல்வர் வீட்டுக்கு அனுப்புவது, மற்றதை தான் வைத்துக் கொள்வது.”

பல லட்சக்கணக்கான பட்டுப் புழுக்கள் இருக்குமல்லவா… அதை, நண்பர்கள், உறவினர்கள் வீடுகளுக்கு பிரித்து அனுப்பி விடுவார்.

“ஓ… ஹோ… பொது மக்களும், பட்டு பூச்சி வளர்ப்போருக்கும் கொடுக்காமல், முதல்வர் மற்றும் அமைச்சர், அவரது உறவினர்கள், நண்பர்கள் மட்டுமே பட்டுப் பூச்சிகளை வளர்த்து, துட்டு சம்பாதிக்கின்றனர் போலும்…’ என்று தானே நினைக்கிறாய்…

“அது தான் தவறு! நம்மூரில் மழைக் காலங்களில் அடை, அடையாகப் பறந்து வரும் ஈசல்களை வறுத்து உண்பரே… அது போல பட்டு புழுக்களை வறுத்து, வயிற்றுக்குள் அனுப்பி விடுவர்… பட்டு புழுக்கள் நாகர்களின், “டெலிகசி’ – மிகப் பிடித்த உணவு… பட்டு புழுக்களுக்கே இந்த கதி என்றால், மற்ற துறைகள் என்ன பாடுபடும் என கணக்கிட்டுக் கொள்… இது தான் நாகாலாந்து மாநில அரசியல்…’ பிரமித்துப் போய் அவரது முகத்தையே பார்த்தபடி இருந்த போது, “வா… மணலில் நடக்கலாம்…’ என அழைத்துச் சென்றார்.


மணலில் நடந்த போது, ஆங்காங்கே அமர்ந்து, தோளில் சாய்ந்து, மடியில் படுத்து கிடந்த காதல் ஜோடிகள் தத்தமது நிலைக்கு வந்து, முகத்தை மறைத்துக் கொண்டனர். நம்மால் தான் அவர்களுக்கு இடைஞ்சல் என்பதை உணர்ந்து, நண்பரை அழைத்துக் கொண்டு, மற்ற நண்பர்கள் கூடி இருந்த இடத்தை வந்தடைந்தேன்.
பள்ளி விடுமுறையை ஒட்டி சொந்த ஊரான நாகர்கோவில் சென்று திரும்பிய நண்பர் ஒருவரின் மனைவி, அங்கிருந்து பனை ஓலைப் பெட்டியில் காரச்சேவு, தட்டை போன்றவை வாங்கி வந்திருந்தார்.

அதை நண்பர் வினியோகம் செய்ய, பீச்சாளர்கள் சுவைத்துக் கொண்டிருந்தனர்.
வாயில் காரச் சேவை போட்டு அரைத்துக் கொண்டிருந்த நடுத்தெரு நாராயணன், அதை முழுவதும் முழுங்காமலேயே, “சார்… உங்க ஊருல நாய (நாய்) அடிச்சு சாப்பிடுவாங்களாமே… உண்மையா?’ என கொழ, கொழவெனக் கேட்டார்.
“உண்மை தான் அண்ணாச்சி, நம்மூருல விருந்தாளிக வந்தா, கோழி அடிச்சு குழம்பு வைக்கிறோம் பாருங்க… அது மாதிரி அவங்க நாய் அடிச்சு, விருந்து வச்சுருவாங்க… அது மட்டுமில்லே… விழாக் காலங்களிலும் நாய் விருந்து தான்!’

“அத எப்படி சமைப்பாங்க?’ என கேட்டார். அண்ணாச்சி.
“விருந்துக்கு ஆள் வருது… விழா வருதுன்னாலே, வீட்ல வளர்கிற நாய்களில் ஒன்றை தெரிவு செய்து, மூன்று நாள் பட்டினி போட்டுடுவாங்க! நாலாவது நாள், தண்ணீல ஊற வச்ச அரிசியை நாய் தின்ன கொடுப்பாங்க… பேய் பசியில இருக்கும் நாய், அதை லவக்கு, லவக்குன்னு தின்னுப்புடும்.

“நாய் அதைச் சாப்பிட்டு ஆறு மணி நேரம் ஆனதும், மேலோகம் அனுப்பி, அதன் குடலை வெட்டி தனியே எடுத்துடுவாங்க. அந்த குடலை நிலக்கரி தணலில் பதமாக வாட்டி, வேக வைப்பாங்க. அந்த நேரத்துல, நாய் குடலில் இருக்கிற அரிசி வெந்து சோறாகி விடும். அப்புறம் என்ன… ஹார்லிக்ஸ் விளம்பரத்தில் வரும் குழந்தை சொல்வது போல, அப்படியே சாப்பிடலாம்!’ எனக் கூறி முடிக்க, அங்கே கூடி இருந்த 10–15 பேரும், “உவ்வே…’ என்றனர்.


“நமக்கு, “உவ்வே’ ஆக இருப்பது அவர்களுக்கு, “ஓகோ!’ இது தான் உலகம்!’ என ஒரு தத்துவத்தைச் சொல்லி முடித்தார்.
சரி… சரி… நாய்–பூனை கதை எல்லாம் விடுங்க… கோவையில பிரபல ஓட்டல்ல தங்கி இருந்த போது, உணவகத்திலும், உ.பா., கூடத்திலும் சேவை ரொம்ப சுமார்ன்னு ஒருமுறை எழுதி இருந்தியே… ஏதாவது ரெஸ்பான்ஸ் உண்டா… அந்த பக்கத்திலிருந்து…’ என கேட்டார் குப்பண்ணா.

“ஏன் இல்லாம… வாரமலர் இதழ்ல வந்த விஷயத்தை படிச்சிட்டு, அடுத்த நாள் காலையில், கோவை ஓட்டலில் இருந்து போன்… அவர்களது பொது மேலாளர் பேச விரும்புவதாகக் கூறினார்… “சரி கொடுங்கள்!’ என்றேன். எடுத்ததுமே நடந்த விஷயங்களுக்கு ஆங்கிலத்தில் வருத்தம் தெரிவித்தார். எது, எது, எப்படி, எப்போது நடந்தது எனக் கேட்டார்.

“நடந்த விஷயங்களை நான் தமிழில் விவரிக்க, “ஐம் எக்ஸ்டிரீம்லி சாரி… ஐ டோன்ட் நோ டமில்…’ என்றார். இது ஏதடா வம்பா போச்சு… எனக்கு நோ… நோ கம் இங்கிலீஷ் ஆச்சே… என்று, லென்ஸ் மாமாவிடம் விஷயத்தைக் கூறி, ஆங்கிலத்தில் விவரிக்கச் சொன்னேன்.

“அவர் மிகுந்த வருத்தம் தெரிவித்து விட்டு, “இதை மனதில் வைத்துக் கொண்டு நம் ஓட்டலுக்கு அடுத்த முறை வராமல் இருந்து விடக் கூடாது…’ என்றும் கேட்டுக் கொண்டாராம்; விபரத்தைக் கூறினார் மாமா…

“அதெல்லாம் சரி… என்னைப் போல தமிழ் மட்டுமே தெரிந்த ஆசாமிகளுடன் பேசுவதற்காகவாவது, அந்த ஜி.எம்., தமிழ் கற்றுக் கொள்ளலாம் அல்லவா… குப்பண்ணா சார்!’ என்றேன்.

“ஓட்டல்ன்னதும் நினைவுக்கு வருதுண்ணா… போன வாரம் புதுச்சேரி போயிருந்தேனா… மாஸ் ஓட்டலில் தங்கினேன்… அங்கே, குளிக்கிறதுக்கு ஒரு ஹேண்ட் ஷவர் இருக்குண்ணா… அதனோட டியூப்பை கொஞ்சம் நீளமாக வைக்க மாட்டாங்க.. முதுகுப் பக்கமெல்லாம் தண்ணி அடிச்சுக்க முடியலே…’ என்றார் பீச் நண்பர் ஒருவர்.

மாஸ் ஓட்டலில் இவர் கூறியது போன்ற ஷவர் கிடையாதே… என யோசித்த போது தான் புரிந்தது… “நம்பர் டூ’ போன பிறகு சுத்தம் செய்ய, வெஸ்டர்ன் கிளாசட் அருகே சின்னதாக வைத்திருக்கும் ஷவரை எடுத்து ஐயா குளித்திருக்கிறார் என்பது… இதைக் கேட்டு அனைவரும் விழுந்து, விழுந்து, சிரித்தனர்.
மேற்படியாரை அவரது பெயருடன் ஐ.ஏ.எஸ்., சேர்த்து தான் கூப்பிட வேண்டும் என்பார். நண்பருக்கு ஐ.ஏ.எஸ்., ஆக ஆசை… முடியவில்லை… மத்திய அரசு அலுவலகத்தில் பணி கிடைத்தது. இவர், முன்னாள் மத்திய அமைச்சர் ஒருவரின் உறவினர்.

“நான் செஞ்ச கூத்தைக் கேளுங்க…” என ஆரம்பித்தார் மத்திய அரசு ஊழியரான இன்னொரு பீச் நண்பர்…
“நண்பர் ஒருவருக்கு வேலை ஒன்று முடித்துக் கொடுத்ததன் பொருட்டு, புதுச்சேரி ஜாலி டூருக்கு ஏற்பாடு செய்து, ஒரு காரும் கொடுத்து, ரூமும் போட்டுக் கொடுத்தார். ரொம்ப பெருமையாக என் மனைவியையும் அழைத்துக் கொண்டு, “ஏசி’ ரூம் டீ… வாழ்க்கையிலே முதன் முதலா தங்கப் போறே…” எனச் சொல்லி அழைத்துச் சென்றேன்.

“ரூமில் தங்கியதும் என் மனைவியிடம், “கம்பளி போர்த்திக் கொள். “ஏசி’  குளிரை உன்னால் தாங்க முடியாது!’ என்று வேறு கூறி, “ஏசி’யை ஆன் செய்து, ரொம்ப குளிர வேண்டும் என்பதற்காக, 30ம் எண்ணில் வைத்து, நானும் படுத்துக் கொண்டு கம்பளியைப் போர்த்திக் கொண்டேன். அடுத்த பத்து நிமிடங்களில் வியர்த்துக் கொட்ட ஆரம்பித்தது.

“என் மனைவியோ, “என்னய்யா… ஏதோ “ஏசி’  கீசின்ன… வியர்த்துக் கொட்டுது. நம்ம மைலாப்பூர் ஸ்டீரிட் ஹவுசில் கூட காத்து ஜிலு, ஜிலுன்னு வருமே…’ என்றதும், என் ஈகோ பஞ்சராக, கடும் கோபம் கொண்டு ஓட்டல் பணியாளரை வரவழைத்து புகார் செய்தேன்.

“வந்தவர் “ஏசி’  மெஷினைப் பார்த்து விட்டு, “சார் … “ஏசி’க்கு புதுசா?’ எனக் கேட்டார். அடடே… எப்படியோ கண்டுபிடித்து விட்டானே என மனதில் நினைத்தபடி பதில் ஒன்றும் சொல்லவில்லை… பணியாளர் 30 என்ற எண்ணிலிருந்து ஸ்விட்சை 18ம் எண்ணிற்கு கொண்டு வந்ததும் ஜிலு, ஜிலுவெனக் காற்று வர ஆரம்பித்தது…

“நான் என் வெட்கத்தை விட்டு, “என்ன தம்பி, பேன் ரெகுலேட்டர்ல எல்லாம் ஒண்ணுல வச்சா, மெதுவா சுத்தும், ஆறுல வெச்சா, வேகமா சுத்தும்… அப்படிதான் நெனைச்சு ரொம்ப ஜிலு, ஜிலுப்பா இருக்கணும்ன்ற காரணத்துக்காக 30ல வச்சேன்…’ என்று கூறவும் —

“அந்த பணியாளர் என் அறியாமையை எண்ணி நகைக்காமல், மிகவும் பணிவாக, “ஏசி டெம்ப்ரச்சர்’ என்றால், 18 டிகிரி சென்டிகிரேடு இருக்கும்… அது ரொம்ப குளிரெடுத்ததுன்னா 22ல் வைத்துக் கொள்ளலாம்!’ எனக் கூறி விடை பெற்றார்.
“என் மனைவி என்னை பார்த்து ஏளன சிரிப்பு ஒன்று விட்டாளே, பார்க்கலாம்…’ என்று முடித்தார்.

“இது பரவாயில்லை… என் கதை வித்தியாசமா னது…’ என ஆரம்பித்தார் இன்னொரு நண்பர்…
“அமர்ந்து கொண்டு, “நம்பர் டூ’ இருக்க வேண்டும் என்ற விஷயம் தெரியாமல், ஒரு ஓட்டல் அறையில், வெஸ்டர்ன் கிளாஸட் மீது வழக்கம் போல ஏறிக் குந்திக் கொண்டேன். அடுத்த இரண்டாவது நிமிடம், “தடால்’ என அந்த பீங்கான் கோப்பை சாய்ந்தது. நான் கீழே விழ, பீங்கான் சில்லிகள் என் அமருமிடத்தை பதம் பார்த்து விட்டன…’ எனக் கூற, சபையின் சிரிப்பொலி அடங்க வெகு நேரமாயிற்று!

———-

source of this article: DINAMALAR

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s