வியக்க வைத்த செங்கிஸ்கான்

Emperor Genghis Khan (1162 - 1227)

 

{Tip: To view the text in larger size, press the ctrl button in your keyboard and scroll the mouse wheel}

சுமார் எண்ணூறு வருடங்களுக்கு முன் வாழ்ந்த பேரரசர் என்றாலும் இன்றுவரை செங்கிஸ்கான் மீதான பிரமிப்பும் மிரட்சியும் கொஞ்சம்கூட குறையவில்லை. காரணம், அவரது போர்த்திறன், ஆளுமை, வலிமை. நூற்றாண்டுகள் பல கடந்தாலும் மங்கோலியா என்ற தேசத்தின் ஒரே ஐகான் அவரே.

அவர் பிறந்தது சாதாரணமான ஒரு மங்கோலிய நாடோடிக் கூட்டத்தில். அப்போது மங்கோலியா என்ற ஒரு தேசமே கிடையாது. சிதறிக் கிடக்கும் நாடோடிக் கூட்டங்களை எல்லாம் ஒன்றிணைத்து ‘மங்கோலியா’ என்ற வலிமையான தேசத்தை உருவாக்க வேண்டும் என்பதே செங்கிஸ்கானின் கனவு. செய்து காட்டினார். தன் துணிச்சலாலும் துடிதுடிப்பாலும் உலகமே அண்ணாந்து பார்க்கும் வகையில் மங்கோலியப் பேரரசையும் அமைத்தார். மாவீரன் அலெக்ஸாண்டரின் பேரரசைவிட செங்கிஸ்கான் அமைத்த பேரரசு நான்கு மடங்கு பெரியது.

அவருக்குப் பின் அவருடைய வாரிசுகள் ராஜ்ஜியத்தை மேலும் விரிவாக்குவதில் பெரும் வெற்றி கண்டனர். கொரியா, ஹங்கேரி, பால்கன், பாக்தாத், மெசபடோமியா, சிரியா என்று அனைத்து திசைகளிலும் மங்கோலியர்களின் ஆதிக்கம்தான். ரஷ்யா, ஐரோப்பியா, சீனா மீதான மங்கோலியர்களின் படையெடுப்புகளும் தொடர்ந்தன. கி.பி. 1260&ல் செங்கிஸ்கானின் பேரனான குபிலாய் கான், மங்கோலிய ராஜ்ஜியத்தின் ஐந்தாவது பேரரசர் ஆனார். கிழக்கு ஆசியாவில் யுவான் பேரரசை உருவாக்கினார். சீனாவின் சாங் பேரரசை வீழ்த்தினார். சீனா முழுவதையும் தன் ஆட்சியின் கீழ்க் கொண்டுவந்த அவர், பெய்ஜிங்கைத் தலைநகராக அறிவித்து அங்கிருந்து ஆட்சிபுரிய ஆரம்பித்தார்.

‘நாம் இப்போது பெய்ஜிங்தான் சென்று கொண்டிருக்கிறோமா?’ – நிக்கோலோ போலோ (மார்க்கோ போலோவின் தந்தை) குபிலாய் கானின் தூதுவரிடம் கேட்டார்.

‘இல்லையில்லை. கோடைக்காலத்தில் கான் சாங்டூவில் கோடைக்கால முகாமில் தங்கியிருப்பார்.’

பெய்ஜிங்குக்கு வடமேற்கில் சுமார் 180 மைல் தொலைவிலுள்ள இடம் அது. அவர்கள் பட்டுச் சாலையில் அதை நோக்கித்தான் சென்று கொண்டிருந்தார்கள். வழியெங்கும் குபிலாய் கானின் ஆதிக்கப் புகழை பல்வேறு விதங்களில் காட்சிகளாகவும் வார்த்தைகளாகவும் உணர முடிந்தது. அவருடைய தூதுவரும் கானின் வலிமையை, அவரது வெற்றிகளையெல்லாம் சொல்லிக் கொண்டே வந்தார். போலோ சகோதரர்-களுக்கு கானைச் சந்திக்க உள்ளூர ஆர்வமும் இருந்தது, கூடவே பயமும். கான், தங்களை என்ன மாதிரி நடத்துவார்?

‘மேற்கிலிருக்கும் தேசங்களைப் பற்றி தெரிந்து-கொள்ள கான் எப்போதுமே விரும்புவார். அங்கிருந்து வரும் வியாபாரிகளான உங்களைச் சந்தித்தால் மகிழ்ச்சியடைவார்.’

புக்காராவிலிருந்து சாங்டூவை அடைய அவர்-களுக்கு ஒரு வருடம் பிடித்தது. தாற்காலிகக் கூடாரங்களால் முகாம் நிறைந்திருந்தது. சில பிரம்மாண்ட கூடாரங்களை நகர்த்திச் செல்லும் விதத்தில் சக்கரங்கள் பொருத்தியிருந்தார்கள். அப்படிப்பட்டதொரு கூடாரத்தில்தான் குபிலாய் கான் இருந்தார்.

தரையோடு தரையாகப் பணிந்து வணங்கிக் கிடந்த போலோ சகோதரர்களை எழுந்து நிற்கச் சொன்னார் கான். ‘உங்களைச் சந்தித்ததில் எனக்கு மிக்க மகிழ்ச்சி. நீங்கள் எனது விருந்தினர்கள். நன்றாக ஓய்வெடுங்கள். நிறைய பேசலாம்.’ கானின் கம்பீரமான தோற்றமும், உள்ளுக்குள் அதிர்வை ஏற்படுத்தும் குரலும், போலோ சகோதரர்களைக் கட்டிப் போட்டன. வியாபார நிமித்தமாக பல்வேறு மொழிகளை அறிந்து வைத்திருந்த சகோதரர்களுக்கு, கான் பேசிய தத்தார் மொழியும் தெரியும் என்பது வசதியாக இருந்தது.

ஐரோப்பிய நாடுகளின் அப்போதைய நிலை என்ன, யார் யாருக்கு யாருடன் பிரச்னை, எந்தப் போரில் யார் வென்றார்கள், வெனிஸ் எப்படிப்பட்ட நகரம், கான்ஸ்டாண்டிநோபிளைக் கைப்பற்றியது எப்படி, வெனிஸியர்களின் போர்த் தந்திரம் என்ன, ஐரோப்பியர்கள் எந்த மாதிரியான ஆயுதங்களை உபயோகப்படுத்துகிறார்கள், என்னென்ன பொருட்களை எல்லாம் வணிகம் செய்கிறார்கள், மத்திய தரைக்கடலில் உள்ள வியாபார வாய்ப்புகள் என்னென்ன – போலோ சகோதரர்களுடனான அடுத்தடுத்த சந்திப்புகளில் குபிலாய் கான் பல்வேறு விஷயங்களைக் கேட்டுத் தெரிந்துகொண்டார். ஐரோப்பிய நாடுகள் மீது படையெடுத்துச் செல்ல திட்டமிடுவதற்காக இந்த விசாரணை.

Genghis Khan and three of his four sons

கானின் விருந்தோம்பலில் போலோ சகோதரர்கள் மயங்கிக் கிடந்தார்கள். அங்கே அவர்கள் சந்தித்த மங்கோலியர்கள், சீனர்கள், யூதர்கள் யாராக இருந்தாலும் சரி, அவர்கள் குபிலாய் கானை ஒரு கடவுள் போலத்தான் நினைத்தார்கள். புத்த மதத்தை ஆட்சி மதமாக அங்கீகரித்திருந்த கான், அனைத்து மதத்தினருக்கும் அவரவர்க்குரிய வழிபாட்டு உரிமையை வழங்கியிருந்தார். கான் குறித்து அங்கே உலவிய பல செய்திகள் போலோ சகோதரர்களை வாய் பிளக்க வைத்தன.

‘கான், உணவருந்தும் அறைக்குச் சென்று அமருவார். அப்போது அங்கே இருக்கும் மேசை சில அடி உயரத்துக்குத் தானாக எழும்பி மிதக்கும். இன்னொரு மேசையில் உணவுப் பொருள்கள் வைக்கப்பட்டிருக்கும். அந்த மேசையிலிருந்து சாப்பிடும் மேசைக்கு உணவுப்பொருட்கள் தானாக இடம் மாறும். வட்டுகளில் திட உணவுப் பொருட்களும், குவளைகளில் பால், ஒயின் போன்ற பானங்களும் தானாக நிரம்பும். பின் சாப்பிடும் மேசை காற்றில் மிதந்து சென்று கானின் அருகில் சென்று தரையிறங்கும். ஏதாவது ஒரு பொருளை கான் மேலும் விரும்பினார் என்றால் அது மீண்டும் தானாக நிரம்பும். கான், உண்டு முடித்தபின் மேசையும் பாத்திரங்களும் மீண்டும் பழைய இடத்துக்கே திரும்பி வந்துவிடும். பல விருந்தினர்களும் கான் உணவருந்தும் இந்த அதிசயத்தைக் கண்டுகளித்திருக்கிறார்கள்.’

பலரும் சொன்ன இந்தச் சம்பவம் குறித்து சகோதரர்கள் விசாரித்துப் பார்த்தார்கள். காஷ்மீரிகளான பக்ஸி என்றழைக்கப்படும் கண்கட்டு வித்தை செய்பவர்கள், அவர்கள் வணங்கும் தேவதைகள் துணையுடன் நிகழ்த்தும் அதிசயம் இது என்று பதில் கிடைத்தது. கிறித்துவ மதத்தைச் சார்ந்த சகோதரர்களால் அவற்றை நம்பவே முடியவில்லை.

‘கிறித்துவ மதத்தின் சிறப்புகளாக என்ன சொல்லுவீர்கள்?’ அன்றைய சந்திப்பில் குபிலாய் கான் கேட்டார். போலோ சகோதரர்களும் தமது கருத்துகளை, ஐரோப்பாவில் கிறித்துவ மதம் செழித்து வளரும் விதத்தைப் பகிர்ந்துகொண்டார்கள். ‘நீங்கள் உங்கள் மதத் தலைவரைச் (போப்) சந்தித்-திருக்கிறீர்களா? என் சார்பில் தூதுவராகச் சென்று சந்திக்க இயலுமா?’

கான் இப்படிக் கேட்டதும் சகோதரர்கள் வாயடைத்துப் போனார்கள். கான் சார்பில் போப்பைச் சென்று சந்திப்பது என்பது பெறுதற்கரிய கௌரவம்தான். ஆனால் எதற்குச் சந்திக்க வேண்டும்? கானும் கிறித்துவ மதத்துக்கு மாற விரும்புகிறாரா? ஆனால் அதை அவரிடம் நேரடியாகக் கேட்க முடியாதே.

‘நான் கிறித்துவ மதத்துக்கு மாற விரும்புகிறேனோ என்று நீங்கள் சந்தேகப்படலாம். என் ராஜ்ஜியத்தில் அனைத்து மதத்தினரையும் ஆதரிப்பவன் நான். இறைவனின் தூதர்களாக மக்கள் வணங்கும் கிறித்துவர்களின் இயேசுவோ, இஸ்லாமியர்களின் நபியோ, யூதர்களின் மோஸஸோ, சிலைகளை வணங்கு-வோரின் தெய்வங்களோ – எல்லோரையுமே நான் விரும்பி வணங்குகிறேன். நால்வரில் யார் உன்னதமானவர்களோ அவர்கள் என்னை ஆசிர்வதிக்கட்டுமே.

சிலைகளைக் கடவுளாக வணங்குபவர்கள் என்முன் பல அதிசயங்களை நிகழ்த்திக் காட்டியிருக்கிறார்கள். அவர்கள் கைபடாமல் எனக்கு உணவு பரிமாறுகிறார்கள். சிலைகளைப் பேச வைக்கிறார்கள். மழை பெய்ய வைக்கிறார்கள். அதை நிறுத்தவும் செய்கிறார்கள். தீய சக்திகளை அடக்கியாள்கிறார்கள். நான் கண்ட கிறித்துவர்கள் யாரும் அத்தனை சக்தி வாய்ந்தவர்களாக, திறமையானவர்களாகத் தெரிய-வில்லை. அப்படி இருக்கும்போது நான் கிறித்துவனாக ஞானஸ்நானம் பெற்றுக் கொள்வதை என் அரசவையில் உள்ளவர்களே ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். எனவே உங்கள் மதத் தலைவரிடம் சென்று கிறித்துவ மத நெறிகளில் நன்கு பயிற்சி பெற்ற, அரிய செயல்கள் செய்யக்கூடிய, அதிசயங்களை நிகழ்த்தும் வல்லமை பெற்ற நூறு மத குருமார்களை இங்கே என் ராஜ்ஜியத்துக்கு அனுப்பச் சொல்லுங்கள். அந்த குருமார்கள் என் அரசவைக்கு வந்து எல்லோர் முன்பும் சிலைகளை வணங்குபவர்களுடன் மோதட்டும். தீய சக்திகளை அடக்கி அவர்களை வென்று காட்டட்டும். அப்போது நான் கிறித்துவ மதத்துக்கு மாறுகிறேன். என்னைத் தொடர்ந்து என் அரசவையில் உள்ளவர்களும், என் மக்களும் மதம் மாறுவார்கள். இதெல்லாம் நிகழ்ந்தால் உலகில் வேறெங்கும் இருப்பதைவிட என் ராஜ்ஜியத்தில்தான் அதிக கிறித்துவர்கள் இருப்பார்கள். இதை உங்கள் மதத் தலைவரிடம் தெரியப்படுத்துங்கள்.’

குபிலாய் கான் கிறித்துவ மதத்தைத் தழுவ நினைத்ததற்கு இன்னொரு காரணமும் உண்டு. ஆளுக்கொரு மதம், ஆளுக்கொரு கடவுள் என்று தன் ராஜ்ஜியம் முழுவதும் மக்கள் பிளவுபட்டுக் கிடப்பதைவிட, கிறித்துவம் என்ற ஒரே மதத்தின் கீழ் ஒன்றிணைந்தால் வலிமை பெருகும் என்று கணக்கிட்டார். போப்பைச் சந்திக்கச் செல்வதற்காக போலோ சகோதரர்களுக்கு அனைத்து வசதிகளும் செய்து தரப்பட்டன. பயணத்துக்குத் தேவையான குதிரைகள், ஒட்டகங்கள், செல்வங்கள், துருக்கிய மொழியில் எழுதப்பட்ட போப்புக்கான தூதுக் கடிதம், குபிலாய் கானின் முத்திரையுடன் கூடிய தங்கப் பட்டயம் (அதுதான் விசா), கூடவே பயணத்தில் துணைவர அதிகாரி ஒருவர். அவர் பெயர் கோகட்டல்.

‘ஜெருசலேமில் அணையாமல் எரிந்து கொண்டிருக்கும் அந்த விளக்கினுடைய புனித எண்ணெயையும் எடுத்து வாருங்கள்.’

கி.பி. 1266&ல் போலோ சகோதரர்கள் விடைபெறும் நேரத்தில் குபிலாய் கான் சொன்ன வேலை இது. வியாபாரிகளாக அங்கே வந்தார்கள். கானின் நன்மதிப்பைப் பெற்று போப்பைச் சந்திக்கச் செல்லும் தூதுவர்களாகக் கிளம்பினார்கள். அவர்களுக்கு அதில் பெருமைதான். ஆனால் உடன் துணைக்கு வர அமர்த்தப்-பட்ட கோகட்டலுக்குப் பயணத்தில் கொஞ்சம்கூட இஷ்டமே இல்லை. ஆரம்பம் முதலே புலம்பிக் கொண்டு வந்தார். ‘மீண்டும் நான் திரும்பிவர எத்தனை வருடங்களாகுமோ? எனக்கு ஏன் இப்படி ஒரு கஷ்டம் வர வேண்டும்?’

சில வாரங்கள் கடந்திருக்கும். கோகட்டல் நோய்வாய்ப்பட்டார். படுத்த படுக்கையாகக் கிடந்தார். குணமாகும் வரை காத்திருந்து அவரை அழைத்துக் கொண்டு போனாலும் புலம்பல் நிற்காது. ‘அய்யா, நாங்கள் எங்கள் பயணத்தை, பணிகளைப் பார்த்துக் கொள்கிறோம். நீங்கள் உடல்நிலை சரியானதும் ஊர் திரும்புங்கள். கானிடம் விஷயத்தைச் சொல்லிவிடுங்கள். வருகிறோம்.’

சுமார் மூன்று வருடங்கள் பயணம் செய்து, கி.பி. 1269&ல் அவர்கள் போப் இருந்த நகரமான ஜெருசலேமின் ஏக்ராவை (கிநீக்ஷீணீ) அடைந்தபோது கேள்விப்பட்ட செய்தி போலோ சகோதரர்களை நிலைகுலைய வைத்தது.

‘போப் ஆறாம் கிளமெண்ட் இறந்துவிட்டார்..!’

——————————–

Original source of this article: Tamilaga Arasiyal

Image source: Wikipedia

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s