பார்த்தது..கேட்டது..படித்தது 7.11.2010

சென்னையிலிருந்து ஒரு வாசகர், தன் மகளுக்கு வரன் பார்த்த அனுபவம் பற்றி எழுதிய கடிதத்தைப் படியுங்களேன்…


அன்புள்ள அந்துமணிக்கு வணக்கம். நான் தங்களுடைய வாசகன். நான் ஒரு தேசிய வங்கியில் வேலை பார்த்து, ஓய்வு பெற்றவன். வருமான வரித்துறையில் அதிகாரியாக இருந்து ஓய்வு பெற்றவர் என் மனைவி. எங்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் தான். என் மகளுக்குத் திருமணம் செய்ய வரன் பார்த்துக் கொண்டிருக்கிறேன். எனக்கு ஏற்பட்ட அனுபவங்களை உங்களுடனும், வாசகர்களிடமும் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
ஆணுக்குப் பெண் சளைத்தவள் அல்ல என்றும்,  கிரண்பேடி போன்ற தீரமிகு பெண்கள் உள்ளனர் என்றும், பல்துறைகளிலும் பெண்கள் கொடி கட்டிப் பறக்கின்றனர் என்றும், நாம் ஜம்பமடித்துக் கொண்டாலும், திருமணம் என்று வரும்போது ஆணாதிக்கம் அதிகமாயிருப்பதுடன் பெண்ணையும், பெற்றவர்களையும் கிள்ளுக் கீரையாக மதிப்பிடுவதே இன்றும் தொடர்கிறது.
என் மகள் பி.காம்., முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்று, எம்.எஸ்ஸி., சைக்காலஜி மற்றும் மனிதவள மேம்பாட்டில் முதுகலை பட்டம் பெற்றவள். அழகும், திறமையும் உள்ளவள். அவளுக்கு வரன் பார்க்க செய்தித்தாளில் வந்த விளம்பரங்களைப் பார்த்த போது, அதிர்ந்து போனேன்.
மாப்பிள்ளையாக விரும்பும் பையன் எந்த நிறத்திலும், காமாலைக்காரனைப் போலவோ, வழித்தெடுக்கும் கறுப்பாகவோ இருக்கலாம்; ஆனால், மணமகளோ பால் வெள்ளையாக இருக்க வேண்டும். கோதுமை நிறமா? வேண்டவே, வேண்டாம். மிக அழகியாக, இந்திய அழகிப் போட்டியில் பங்கு கொள்ள வேண்டிய அழகுடன் இருத்தல் அவசியம். மணமகன் எப்படி வேண்டுமானாலும் கரடு, முரடாகக் கூட இருக்கலாம்; இது மிகவும் அடிப்படையான விஷயம்.
பெண் பார்த்தலில் துவங்கி, திருமணம் முடியும் வரை பெண் மிக ஒல்லியாக இருத்தல் அவசியம்; ஆனால், மணமகன் எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். திருமணம் முடிந்த சில வாரங்களில் பெண், “குண்டாக”  மாற வேண்டும். அப்போது தான் உறவினர்களும், நண்பர்களும் மணமகன் வீட்டில் அப்பெண்ணை நல்ல போஷாக்குடன், “கவனித்து” கொள்வதாக நம்புவர்.
இன்னொரு விஷயம்: பெண் குடும்பம், கட்டுப்பெட்டியான குடும்பமாக இருக்க வேண்டும். இதன் பொருள் என்னவென்று விளங்கவில்லை. பெண்ணின் தந்தை பஞ்சகச்சம், உச்சிக் குடுமியுடனும், தாயார் மடிசாருடன் இருக்க வேண்டுமா… தெரியவில்லை. ஆனால், அதே சமயம், “முற்போக்கு”  கொள்கைகளுடன் நவநாகரிகமாகவும் இருக்க வேண்டும். வைதீகமாக ஆசாரமாக இருப்பதுடன், “கடவுள் பயம்”(கடவுளிடம் அன்பு தேவையில்லை; பயம் தான் தேவை) இருப்பதுடன் நாசூக்காக, மிடுக்காக, ஆணவம் இன்றி, மாடர்ன் ஆக இருத்தல் வேண்டும்.
அடுத்த நிபந்தனை: “ஹோம்லி!’ இதற்குப் பொருள் வீட்டிலேயே இருக்க வேண்டுமா அல்லது வேலையில் இருக்கக் கூடாதா என்பது தெளிவாகத் தெரியவில்லை. ஆனால், பல மணமகன்கள் வேலை பார்க்கும், “ஹோம்லி’ பெண்களையே தேடுகின்றனர். வேலைக்கும் போய்க் கொண்டு, வீட்டையும் கவனித்து, சமையல் முதல் அனைத்து வேலைகளையும் செய்வதுடன், மாப்பிள்ளையின் நண்பர்களுடன், “நாசூ” க்காக பழகத் தெரிந்திருக்க வேண்டும்.
அடுத்தது, ஆங்கிலப் புலமை அடிப்படைத் தேவைகளில் ஒன்று!
தொழில் மற்றும் சம்பளம் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. டாக்டருக்கு டாக்டரும், சாப்ட்வேருக்கு சாப்ட்வேரும் தேவை. ஒரே தொழிலில் இருத்தல் அவசியம். இன்னும் சிலருக்கோ, மிகவும் அதிக அளவில் படித்திருக்க வேண்டும்; வீட்டில் இருந்து வித, விதமாய் சமைத்துப் போட்டால் போதும்;  படித்த படிப்பு  வீணாவது பற்றி கவலையில்லை.
அடுத்தது, அமெரிக்கா போன்ற வெளிநாட்டு மாப்பிள்ளைகளும், அவர்களது பெற்றோரும் செய்யும் கிராக்கி, மேல் நாட்டில் படிப்பவராகவோ, வேலை செய்பவராகவோ இருக்க வேண்டும் அல்லது சொந்த செலவில் விசா வாங்கக் கூடிய திறன் இருக்க வேண்டும்.
வரதட்சணை தேவையில்லை என்பதில், உள் சூட்சமம் உள்ளது. ஆனால், மற்ற வாழ்க்கை வசதி சாதனங்கள் பூரணமாகத் தேவை என்பதுதான் உள்ளர்த்தம். அதுவும் வெளிநாட்டு மாப்பிள்ளையாக இருந்தால், போக, வர விமானச் செலவு பெண் வீட்டாருடையது தான்.
இவ்வளவு சிரமங்களையும் பட்டுக் கொண்டிருக்கும் போது, எனக்கு ஒருவர் போன் செய்து, என் மகள் ஜாதகம் கிடைத்ததாகவும், தன் இரண்டு மகன்களில் மூத்த மகன் பெங்களூரூவில் மாதம்  50 ஆயிரம் ரூபாய் சம்பாதிப்பதாகவும், தமிழகத்தின் ஒரு பெரிய நகரில் வீடும், மகனுக்கு சொந்த கார் உள்ளதாகவும், தங்களுக்கு, “எதிர்பார்ப்பு’ ஏதுமில்லை; தங்களுக்கு பந்தா கிடையாது என்றும் கூறி, அணுகினார்.
அந்தப் பையனும் மிக நல்ல முறையில் பழகி, என் மகளைப் பற்றிய விவரங்களை தெரிந்து கொண்டான். அவள் தற்போது உள்ள சைக்காலஜிஸ்ட் வேலையில் தொடரலாமென்றும், தான் சாப்ட்வேர் துறையில் இருந்தாலும், சைக்காலஜிஸ்ட் ஆட்சேபனையில்லை என்றும், புகைப்படத்தைப் பார்த்து பெண் பிடித்திருப்பதாகவும் கூறி, புகைப்படத்தையும் வாங்கி வைத்துக் கொண்டனர்.
என் மகள் வேலை பயிற்சி காரணமாக வெளியூரில் இருந்ததால், வாரம் இருமுறை போன் செய்து, அவள் எப்போது வருவாள் என்று விசாரித்தபடி இருந்தனர். இவ்வாறு இரண்டு மாதம் கழிந்தன.
என் மகள் வந்த விவரம் தெரிவித்தவுடன், என் வீட்டிற்கு வந்த மணமகனின் பெற்றோர் மற்றும் தாத்தா அவளிடம் பேசி, பின் பெண்ணைப் பிடித்து விட்டதாகவும், அவளே தங்கள் மருமகள் என்று முடிவெடுத்து விட்டதால் புகைப்படத்தை வைத்துக் கொள்வதாகவும், சில நாட்களில்  பெண்ணை ஒரு சம்பிரதாயத்துக்கு, “பார்க்க’ மணமகனை மட்டும் அனுப்புவதாகவும் கூறிச் சென்றனர்.
நாங்களும் மிக நல்லவர்களாக இருக்கின்றனர், இந்த இடம் முடிந்த மாதிரி தான் என்று அவர்கள் கொடுத்த அபிப்ராயத்தின் பேரில் மணநாள் மற்றும் மண்டபம் தேர்வு செய்ய முயன்றோம்.
திடீரென்று ஒருநாள் மணமகன் தந்தை போன் செய்து, தன் மகன் ஓராண்டுக்கு திருமணம் வேண்டாமென்று கூறுவதாகவும், உடனே மணமகள் சாப்ட்வேர் ஆக இருந்தால் பரவாயில்லை என்றும் பேச்சை மாற்றி கூறினார். நான் எவ்வளவோ எடுத்துரைத்தும், தன் மகன் இந்த முடிவை மாற்றிக் கொள்ளவில்லை என்றும் கூறினார்.
தன் மகன் ஓராண்டு கழித்து திருமணம் செய்வதாயிருந்தால் இப்போது ஏன் முயற்சி செய்ய வேண்டும் என்று அவர்களுக்கு தோன்றவில்லை? என் மகள் சைக்காலஜிஸ்ட் என்று தெரிந்து ஒப்புக் கொண்டு, பின்னர் சாப்ட்வேர் புரொபஷனல் தான் வேண்டும் என்று கூறுவது என்ன நியாயம்? சுமார் மூன்று மாதம் தொங்கலில் வைத்தனர்.
இதிலிருந்து, பெண்ணையும், பெற்றோரையும் கிள்ளுக்கீரையாக எண்ணும் போக்கு இன்றும் மாறவில்லையென்று எனக்குப் படுகிறது.
— “இக்காலத்தில் இன்னும் கட்டுப்பெட்டித்தனம் மாறவில்லையே…”என, கடிதத்தை படித்த பின் சலிப்பு தட்டியது.

Source of this article: Dinamalar

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s