கண்ணுபடபோகுதையா

    

      மணிமேகலை பிரசுரத்தின் “கண் திருஷ்டிகளும் பரிகாரங்களும்” என்ற புத்தகத்தை சமீபத்தில் நான் படிக்க நேர்ந்தது. அதில் சில சுவாரசியமான செய்திகள் குறிப்பிடப்பட்டு இருந்தன. அவற்றை இப் பதிவின் மூலமாக உங்களுடன் பகிர்ந்துக் கொள்கிறேன். நம்புவர்கள் நம்பலாம், நம்பாதவர்கள் இதன்  சுவாரசியம் கருதி தொடர்ந்து படிக்கலாம். 

     “திருஷ்டி” என்ற வட சொல்லுக்கு இணையான தமிழ் சொல் “பார்வை” என்பதாகும். ஒருவருடைய கண் பார்வையிலேயே அவருடைய நவரச  பாவங்களையும் உணர்த்த முடியும். கோபம், வெறுப்பு முதலியவற்றை ஒருவரது பார்வைகளிலேயே நாம் பார்த்திருப்போம் அல்லவா?      கூர்மையான ஒருவருடைய பார்வை நம் மீது படும் போது நமது உடலில் பல மாற்றங்கள்(நல்லதோ கெட்டதோ) ஏற்படுகின்றன. இந்த பாதிப்புகளின் வீரியத்தை   குறைப்பதற்காகவே  பரிகாரங்கள் செய்யப்படுகின்றன. ஒரு பெண் தனது நெற்றியில் திலகம் இடுவதே கண் திருஷ்டியைக் குறைக்க ஒரு பரிகாரம் தான். இதில் எனக்கு நம்பிக்கை உண்டு. விஞ்ஞான பூர்வமாக ஆராய்ந்தால், புருவத்திற்கு இடைப்பட்ட பகுதியை நோக்கி பார்வையை செலுத்தி mesmerism மூலமாக ஒருவரை வசியம் செய்ய முடியும். இதையே திரிஷ்டி  என்று நமது முன்னோர்களால் கூறப்பட்டது போலும்.

     உலக வரலாற்றிலும் “திரிஷ்டி” சில சுவாரசியமான இடங்களைப் பிடித்திருக்கிறது.ஹிட்லரின் ஸ்வஸ்திக்(swastik) சின்னமும் திருஷ்டியோடு சம்பந்தப்பட்டு இருந்ததாக ஜேர்மன் ஆராய்ச்சியாளர்களே கூறுகின்றனராம். வீட்டில் பல்லிகள் இருந்தால் திருஷ்டி பாதிப்பு வராது என்பது மலேசியா மக்களின் நம்பிக்கை. பிரிட்டன் மக்கள், தம் நாட்டில் குரங்குகள் அதிகம் இருந்தால் அது நாட்டிற்கும் தங்களுக்கும் தோஷம் ஏற்படாமல் இருக்கும் என்று நம்பினார்கள். ஒரு கட்டத்தில் குரங்குகளின் எண்ணிக்கை குறைய ஆரம்பித்தவுடன் மக்களிடையே பீதி பற்றிக்கொண்டது. இதை அறிந்த அன்றைய பிரிட்டன் பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சில்(Winston Churchill)  இரவோடு இரவாக வெளிநாடுகளிலிருந்து நிறைய குரங்குகளை இறக்குமதி செய்துள்ளார். 

    கண் திருஷ்டி மனிதர்களை மட்டுமல்ல, மற்ற உயிரினங்களையும், உயிரற்றவைகளையும்(நிலம்,பயிர்) பாதிக்கும்.

திருஷ்டி ஏற்படுத்தக் கூடிய கண்கள் என்று குறிப்பிடப்படுபவை:
* செவ்வரி படர்ந்த கண்கள் 
* நன்கு கறுத்து உருண்டு திரண்ட கண்கள் 
* பூனைக் கண்கள் 
* யானையின் கண்கள்  போன்று சிறுத்துச் சுருங்கிய கண்கள் 
மேலும், இந்த புத்தகத்தில் பெண்களுக்கு கர்ப்ப காலத்தில் ஒவ்வொரு  மாதமும் ஏற்படும் திருஷ்டிகளும், குழந்தைகளின் வாழ்க்கையில் ஒவ்வொரு வயதிலும் ஏற்படும் திருஷ்டிகள், வெவ்வேறு தொழில்களுக்கான திருஷ்டிகள் முதலிய பல சுவாரசியமான செய்திகள் கூறப்பட்டுள்ளன. அவற்றையெல்லாம் நேரம் கிடைக்கும் போது உங்களோடு பகிர்ந்துக் கொள்கிறேன்.