திண்ணை 7.11.2010

நவாப் ராஜமாணிக்கம் என்பவர், அந்தக் காலத்தில் கொடிகட்டிப் பறந்த நாடக நடிகர். சொந்தமாக நாடகக் கம்பெனி வைத்து, தமிழகம் முழுவதும் நாடகங்கள் நடத்தி வந்தார். இவர், ஒருமுறை தன் நாடகத்தைக் கும்பகோணத்தில் நடத்திக் கொண்டிருந்தார். அதே நாட்களில், எம்.ஆர்.ராதாவும் கும்பகோணத்தில் தன் நாடகத்தை நடத்தி வந்தார்.
நவாப் ராஜமாணிக்கத்தினுடையது புராண-பக்தி நாடகங்கள்! ராதாவுடையதோ நாத்திகப் பிரசார நாடகங்கள். நவாப்பின் நாடகங்களுக்குத் தான் நல்ல கூட்டம்; வசூல். ராதாவுக்கு, “கலெக்ஷன்’ சரியில்லை.
ஒரு நாள், நேராக நவாப் ராஜமாணிக்கத்திடம் போனார் ராதா. “எனக்கு அவசரமாகக் கொஞ்சம் பண உதவி வேண்டும்; கொடுங்கள்…”  என்று கேட்டார். ராஜமாணிக்கத்திற்குக் கோபம் வந்து விட்டது.
ஏன்யா… நான் பக்தி நாடகம் போடறேன்… எனக்கு எதிராக நீ நாத்திகப் பிரசார நாடகம் போடறே. அப்புறம் என்னிடமே வந்து பணம் கேட்கிறாயே?” என்று கேட்டார்.
“நான், “கடவுள் இல்லை’ன்னு சொல்லி நாத்திக நாடகம் போடறதால தான், “கடவுள் உண்டு’ன்னு சொல்லி பக்தி நாடகம் போடற உங்க நாடகத்துக்கு கூட்டம் வருது. என் மீது இருக்கிற கோபத்திலே, ஆஸ்திகர்கள் உங்க நாடகத்துக்கு வர்றாங்க. நாளைக்கே நான் என் நாடகத்தை வேற ஊருக்கு மாத்திட்டுப் போயிட்டா, அப்புறம் உங்க நாடகத்துக்கு எவனும் வர மாட்டான். அப்புறம், நீங்க ஈ ஓட்ட வேண்டியது தான். இப்ப என்ன சொல்றீங்க? பணம் கொடுக்கறீங்களா அல்லது நாளைக்கே நான் நாடகக் குழுவோட வேறு ஊருக்குப் புறப்படவா?’ என்று கேட்டார் ராதா.
கொஞ்சம் யோசித்த நவாப் ராஜமாணிக்கம், பேசாமல் உள்ளே போய், ஒரு பெருந் தொகையைக் கொண்டு வந்து ராதாவிடம் கொடுத்து, வழியனுப்பி வைத்தார்.

source: DINAMALAR

பார்த்தது..கேட்டது..படித்தது 7.11.2010

சென்னையிலிருந்து ஒரு வாசகர், தன் மகளுக்கு வரன் பார்த்த அனுபவம் பற்றி எழுதிய கடிதத்தைப் படியுங்களேன்…


அன்புள்ள அந்துமணிக்கு வணக்கம். நான் தங்களுடைய வாசகன். நான் ஒரு தேசிய வங்கியில் வேலை பார்த்து, ஓய்வு பெற்றவன். வருமான வரித்துறையில் அதிகாரியாக இருந்து ஓய்வு பெற்றவர் என் மனைவி. எங்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் தான். என் மகளுக்குத் திருமணம் செய்ய வரன் பார்த்துக் கொண்டிருக்கிறேன். எனக்கு ஏற்பட்ட அனுபவங்களை உங்களுடனும், வாசகர்களிடமும் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
ஆணுக்குப் பெண் சளைத்தவள் அல்ல என்றும்,  கிரண்பேடி போன்ற தீரமிகு பெண்கள் உள்ளனர் என்றும், பல்துறைகளிலும் பெண்கள் கொடி கட்டிப் பறக்கின்றனர் என்றும், நாம் ஜம்பமடித்துக் கொண்டாலும், திருமணம் என்று வரும்போது ஆணாதிக்கம் அதிகமாயிருப்பதுடன் பெண்ணையும், பெற்றவர்களையும் கிள்ளுக் கீரையாக மதிப்பிடுவதே இன்றும் தொடர்கிறது.
என் மகள் பி.காம்., முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்று, எம்.எஸ்ஸி., சைக்காலஜி மற்றும் மனிதவள மேம்பாட்டில் முதுகலை பட்டம் பெற்றவள். அழகும், திறமையும் உள்ளவள். அவளுக்கு வரன் பார்க்க செய்தித்தாளில் வந்த விளம்பரங்களைப் பார்த்த போது, அதிர்ந்து போனேன்.
மாப்பிள்ளையாக விரும்பும் பையன் எந்த நிறத்திலும், காமாலைக்காரனைப் போலவோ, வழித்தெடுக்கும் கறுப்பாகவோ இருக்கலாம்; ஆனால், மணமகளோ பால் வெள்ளையாக இருக்க வேண்டும். கோதுமை நிறமா? வேண்டவே, வேண்டாம். மிக அழகியாக, இந்திய அழகிப் போட்டியில் பங்கு கொள்ள வேண்டிய அழகுடன் இருத்தல் அவசியம். மணமகன் எப்படி வேண்டுமானாலும் கரடு, முரடாகக் கூட இருக்கலாம்; இது மிகவும் அடிப்படையான விஷயம்.
பெண் பார்த்தலில் துவங்கி, திருமணம் முடியும் வரை பெண் மிக ஒல்லியாக இருத்தல் அவசியம்; ஆனால், மணமகன் எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். திருமணம் முடிந்த சில வாரங்களில் பெண், “குண்டாக”  மாற வேண்டும். அப்போது தான் உறவினர்களும், நண்பர்களும் மணமகன் வீட்டில் அப்பெண்ணை நல்ல போஷாக்குடன், “கவனித்து” கொள்வதாக நம்புவர்.
இன்னொரு விஷயம்: பெண் குடும்பம், கட்டுப்பெட்டியான குடும்பமாக இருக்க வேண்டும். இதன் பொருள் என்னவென்று விளங்கவில்லை. பெண்ணின் தந்தை பஞ்சகச்சம், உச்சிக் குடுமியுடனும், தாயார் மடிசாருடன் இருக்க வேண்டுமா… தெரியவில்லை. ஆனால், அதே சமயம், “முற்போக்கு”  கொள்கைகளுடன் நவநாகரிகமாகவும் இருக்க வேண்டும். வைதீகமாக ஆசாரமாக இருப்பதுடன், “கடவுள் பயம்”(கடவுளிடம் அன்பு தேவையில்லை; பயம் தான் தேவை) இருப்பதுடன் நாசூக்காக, மிடுக்காக, ஆணவம் இன்றி, மாடர்ன் ஆக இருத்தல் வேண்டும்.
அடுத்த நிபந்தனை: “ஹோம்லி!’ இதற்குப் பொருள் வீட்டிலேயே இருக்க வேண்டுமா அல்லது வேலையில் இருக்கக் கூடாதா என்பது தெளிவாகத் தெரியவில்லை. ஆனால், பல மணமகன்கள் வேலை பார்க்கும், “ஹோம்லி’ பெண்களையே தேடுகின்றனர். வேலைக்கும் போய்க் கொண்டு, வீட்டையும் கவனித்து, சமையல் முதல் அனைத்து வேலைகளையும் செய்வதுடன், மாப்பிள்ளையின் நண்பர்களுடன், “நாசூ” க்காக பழகத் தெரிந்திருக்க வேண்டும்.
அடுத்தது, ஆங்கிலப் புலமை அடிப்படைத் தேவைகளில் ஒன்று!
தொழில் மற்றும் சம்பளம் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. டாக்டருக்கு டாக்டரும், சாப்ட்வேருக்கு சாப்ட்வேரும் தேவை. ஒரே தொழிலில் இருத்தல் அவசியம். இன்னும் சிலருக்கோ, மிகவும் அதிக அளவில் படித்திருக்க வேண்டும்; வீட்டில் இருந்து வித, விதமாய் சமைத்துப் போட்டால் போதும்;  படித்த படிப்பு  வீணாவது பற்றி கவலையில்லை.
அடுத்தது, அமெரிக்கா போன்ற வெளிநாட்டு மாப்பிள்ளைகளும், அவர்களது பெற்றோரும் செய்யும் கிராக்கி, மேல் நாட்டில் படிப்பவராகவோ, வேலை செய்பவராகவோ இருக்க வேண்டும் அல்லது சொந்த செலவில் விசா வாங்கக் கூடிய திறன் இருக்க வேண்டும்.
வரதட்சணை தேவையில்லை என்பதில், உள் சூட்சமம் உள்ளது. ஆனால், மற்ற வாழ்க்கை வசதி சாதனங்கள் பூரணமாகத் தேவை என்பதுதான் உள்ளர்த்தம். அதுவும் வெளிநாட்டு மாப்பிள்ளையாக இருந்தால், போக, வர விமானச் செலவு பெண் வீட்டாருடையது தான்.
இவ்வளவு சிரமங்களையும் பட்டுக் கொண்டிருக்கும் போது, எனக்கு ஒருவர் போன் செய்து, என் மகள் ஜாதகம் கிடைத்ததாகவும், தன் இரண்டு மகன்களில் மூத்த மகன் பெங்களூரூவில் மாதம்  50 ஆயிரம் ரூபாய் சம்பாதிப்பதாகவும், தமிழகத்தின் ஒரு பெரிய நகரில் வீடும், மகனுக்கு சொந்த கார் உள்ளதாகவும், தங்களுக்கு, “எதிர்பார்ப்பு’ ஏதுமில்லை; தங்களுக்கு பந்தா கிடையாது என்றும் கூறி, அணுகினார்.
அந்தப் பையனும் மிக நல்ல முறையில் பழகி, என் மகளைப் பற்றிய விவரங்களை தெரிந்து கொண்டான். அவள் தற்போது உள்ள சைக்காலஜிஸ்ட் வேலையில் தொடரலாமென்றும், தான் சாப்ட்வேர் துறையில் இருந்தாலும், சைக்காலஜிஸ்ட் ஆட்சேபனையில்லை என்றும், புகைப்படத்தைப் பார்த்து பெண் பிடித்திருப்பதாகவும் கூறி, புகைப்படத்தையும் வாங்கி வைத்துக் கொண்டனர்.
என் மகள் வேலை பயிற்சி காரணமாக வெளியூரில் இருந்ததால், வாரம் இருமுறை போன் செய்து, அவள் எப்போது வருவாள் என்று விசாரித்தபடி இருந்தனர். இவ்வாறு இரண்டு மாதம் கழிந்தன.
என் மகள் வந்த விவரம் தெரிவித்தவுடன், என் வீட்டிற்கு வந்த மணமகனின் பெற்றோர் மற்றும் தாத்தா அவளிடம் பேசி, பின் பெண்ணைப் பிடித்து விட்டதாகவும், அவளே தங்கள் மருமகள் என்று முடிவெடுத்து விட்டதால் புகைப்படத்தை வைத்துக் கொள்வதாகவும், சில நாட்களில்  பெண்ணை ஒரு சம்பிரதாயத்துக்கு, “பார்க்க’ மணமகனை மட்டும் அனுப்புவதாகவும் கூறிச் சென்றனர்.
நாங்களும் மிக நல்லவர்களாக இருக்கின்றனர், இந்த இடம் முடிந்த மாதிரி தான் என்று அவர்கள் கொடுத்த அபிப்ராயத்தின் பேரில் மணநாள் மற்றும் மண்டபம் தேர்வு செய்ய முயன்றோம்.
திடீரென்று ஒருநாள் மணமகன் தந்தை போன் செய்து, தன் மகன் ஓராண்டுக்கு திருமணம் வேண்டாமென்று கூறுவதாகவும், உடனே மணமகள் சாப்ட்வேர் ஆக இருந்தால் பரவாயில்லை என்றும் பேச்சை மாற்றி கூறினார். நான் எவ்வளவோ எடுத்துரைத்தும், தன் மகன் இந்த முடிவை மாற்றிக் கொள்ளவில்லை என்றும் கூறினார்.
தன் மகன் ஓராண்டு கழித்து திருமணம் செய்வதாயிருந்தால் இப்போது ஏன் முயற்சி செய்ய வேண்டும் என்று அவர்களுக்கு தோன்றவில்லை? என் மகள் சைக்காலஜிஸ்ட் என்று தெரிந்து ஒப்புக் கொண்டு, பின்னர் சாப்ட்வேர் புரொபஷனல் தான் வேண்டும் என்று கூறுவது என்ன நியாயம்? சுமார் மூன்று மாதம் தொங்கலில் வைத்தனர்.
இதிலிருந்து, பெண்ணையும், பெற்றோரையும் கிள்ளுக்கீரையாக எண்ணும் போக்கு இன்றும் மாறவில்லையென்று எனக்குப் படுகிறது.
— “இக்காலத்தில் இன்னும் கட்டுப்பெட்டித்தனம் மாறவில்லையே…”என, கடிதத்தை படித்த பின் சலிப்பு தட்டியது.

Source of this article: Dinamalar

7000 கார்களுக்குச் சொந்தக்காரர்

உலகின் மிகப் பெரிய கோடீஸ்வரர்களில் ஒருவரான, புரூனே நாட்டின் சுல்தான், ஆடம்பர கார்களை வாங்கி குவிப்பதில் அவருக்கு நிகர் அவர் மட்டுமே. எண்ணெய் வளமிக்க நாடான புரூனே, 1967ல் தனி நாடானது. அதன் சுல்தானாக (மன்னராக) ஹசனன் போக்கியா முயுசுதீன் வாதுலா இருந்து வருகிறார்.
எண்ணெய் வளத்தால் கொழிக்கும் அந்நாட்டு சுல்தானின் வருமானத்திற்கு, அளவே இல்லாமல் போய் விட்டது. ஒரு வினாடிக்கு அவரது வருவாய், 5,277 ரூபாய். அதுவே, ஒரு வாரத்திற்கு 3,191 கோடி ரூபாய். அவரது அரண்மனை இரண்டு  லட்சம் சதுர மீட்டர் பரப்பளவு கொண்டது. இங்கு 1,788 அறைகள் உள்ளன. இதுதான் உலகிலுள்ள அரண்மனைகளிலேயே மிகப் பெரியது.
இங்கு 275 ஆடம்பர குளியலறைகள் உள்ளன. அதில் உள்ள பொருட்கள் எல்லாம், தங்கம் மற்றும் வெள்ளியினால் செய்யப்பட்டவை. இவரது மகளுக்கு 18 வயது நிரம்பியதும் நடத்தப்பட்ட பிறந்த நாள் கொண்டாட்டத்தில் சுல்தான் அவருக்கு ஏர் பஸ் ஏ-320 விமானம் வழங்கினார். அவர் பயன்படுத்துவதோ போயிங் 747 விமானம்.
இதை எல்லாம் விட, வித விதமான கார்களை வாங்கி குவிப்பதில் மிகுந்த ஆர்வம் கொண்டவர் சுல்தான். அவரது கேரேஜில், தற்போது 7,000 கார்கள் நிறுத்தப்பட்டுள்ளன. இவற்றின்
மதிப்பு, 2,312 கோடி ரூபாய். அவரிடம் உள்ள 7,000 கார்களில் அதிகளவில் இருப்பவை ரோல்ஸ்ராய்ஸ் கார்கள் தான். இவற்றின் எண்ணிக்கை மட்டுமே 604.


இது தவிர, மெர்சிடீஸ் பென்ஸ்-574, பெராரி-452, ஆஸ்டின் மார்ட்டின்-300, பென்ட்லீ-382, பி.எம்.டபிள்யூ – 209, ஜாகு வார்-179, போர்ஷெய்-160, கோனிநெக்-134, லம்போர்க்கினி-21, மெக்லாரன் எப்1 ரகம்-8, பியூஜோ-5, ஷெல்பி சூப்பர் 1 ஆகியவை குறிப்பிடத்தக்க பிரபல மாடல் கார்கள். இந்த அதிக விலை யுள்ள ஆடம்பர கார் களை தவிர, மேலும் நான்காயிரம் வெவ்வேறு நிறுவன கார்களும் அவருக்கு சொந்தமாக உள்ளன. இவ்வளவு கார்களை யும் அவரது அரண்மனை அருகே உள்ள விமான நிலையத்தின் ஒரு மூலை யில் நிறுத்தி வைத்துள்ளார். கார்கள் நிறுத்தப் படும் பார்க்கிங் ஏரியாவுக்கும் கார் நிறுவனங்களின் பெயர்களையே சூட்டி உள்ளார். அவற்றை பராமரிப்பதற்கென தனித்தனியே மெக்கானிக்கு களையும் வைத்துள்ளார்.
அவர்களுக்கு உணவு, உறைவிடம், கை கொள்ள முடியாத அளவுக்கு சம்பளமும் வழங்கி வருகிறார். அதில் குறிப்பிட்ட சில கார் மெக்கானிக்குகளுக்கு ஆண்டுக்கு 1 கோடியே 15 லட்ச ரூபாய் சம்பளமாக வழங்கப்படுகிறது. உலகில் மிக முக்கிய கார் தயாரிப்பு நிறுவனங்களின் அனைத்து பிரபல கார்களும் அவரிடம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அதில் சில குறிப்பிட்ட மாடல்கள், அவரது விருப்பத்திற்கேற்ப கார் நிறுவனங்கள் தயாரித்து அளித்தவை என்பதும் குறிப்பிடத் தக்கது.

Read this article in English <here>

Source of  this article: Dinamalar

பார்த்தது..கேட்டது..படித்தது 31.10.2010

கம்ப்யூட்டர் சாப்ட்வேர் துறையும், கால் சென்டர்களும் சென்னையிலும், சென்னையைச் சுற்றியும் பெருகி விட்டதால், இளைஞர்கள் மற்றும் இளம் பெண்களின் வாழ்க்கை முறையும் மாறி விட்டது; வாழ்க்கைத் தரமும் மாறி விட்டது.சமீபத்தில் ஒரு நாள், முழு உடல் பரிசோதனை செய்து கொள்ள சென்னை வந்திருந்தார் வெளியூர் நண்பர் ஒருவர். என் உதவியை நாடினார். தி.நகரில் உள்ள ஒரு பரிசோதனைக் கூடத்தில் அவருக்கு, “அப்பாயின்மென்ட்’ வாங்கிக் கொடுத்திருந்தேன். வெறும் வயிற்றுடன் மறுநாள் காலை வரச் சொல்லி இருந்தனர்.தனியே போக அச்சப்பட்ட நண்பர், என்னையும் அழைத்தார். காலை நேரத்தில் அந்த பரிசோதனைக் கூடத்தின் வெளி வாயிலை ஒட்டி வண்டியை நிறுத்தி இறங்கவும், என் வண்டிக்கு பின்னால், ஐந்து புது மாருதி கார்கள், “சர்… சர்’ என வேகமாக வந்து நின்றன.ஒவ்வொரு காரிலிருந்தும் ஒரு இளம் பெண் இறங்கினர்! அனைவருமே 23–25 வயதுக்குட்பட்டவர்கள்.புரிந்து போனது… அவர்கள் அனைவரும் சாப்ட்வேர் நிறுவனத்தில் வேலை செய்பவர்கள் என்பது! அந்த நிறுவனத்தினர் உடல் பரிசோதனைக்காக இப்பெண்களை அனுப்பியுள்ளனர் என்பதையும் அனுமானிக்க முடிந்தது.சாப்ட்வேர் நிறுவனங்கள், இரண்டு வருட அனுபவம் உள்ள, “கேன்டிடேட்’களுக்கு மாதம் 40 ஆயிரம் முதல் 60 ஆயிரம் ரூபாய் வரை சம்பளம் வழங்குகின்றன… இவ்வளவு சின்ன வயதில் இவ்ளோ பணத்தை வைத்து என்ன செய்வர்?உடனே புது மாருதி கார் வாங்க வேண்டியது தான்! மாதத் தவணைத் தொகையாக நிதி நிறுவனங்கள், மாருதி கார்களுக்கு குறைந்த பட்ச தவணை தானே கேட்கின்றன… எனவே, 90 சதவீதம் பேர் கார் வாங்கி விடுகின்றனர்!வாழ்க்கைத் தரம் இப்படி உயர்ந்தாலும், வாழ்க்கை முறை தவிடு பொடியாகி விட்டது! இவர்கள் சூரியனைப் பார்ப்பதே அரிதாகி வருகிறது.எப்.எம்., ரேடியோ நிலையத்தில் பணியாற்றி வந்த இளம் பெண் ஒருவர், சாப்ட்வேர் துறையில் வேலை கிடைத்து சென்று விட்டார். சமீபத்தில், நம் அலுவலகத்தில் அப்பெண்ணை சந்தித்த போது, “வேலை எப்படி இருக்கும்மா?’ எனக் கேட்டேன்.”வேலை இன்ட்ரஸ்டிங்கா இருக்கு, சவாலா இருக்கு, எதிர்பாராத சம்பளம் மற்றும் அலவன்சுகள் இருக்கு… அருமையான சாப்பாடு குடுக்கறாங்க… ஆனா, வாழ்க்கை முறை மாறிப் போச்சு…”பெரும்பாலும் அமெரிக்க நிறுவனங்களுக்காகத் தான் சாப்ட்வேர் தயார் பண்றோம்… ஸோ… அவங்களோட தொடர்பு கொள்ள, அங்க பகலா இருக்கும் போது தான் முடியும்… அங்க பகலா இருக்கும் போது, இங்கே இரவு.”எனவே, தினமும் இரவில் தான் வேலை… இரவு வேலை என்றாலும், பெண்களின் பாதுகாப்புக்கெல்லாம் பயம் ஒன்றும் இல்லை. இரவு 2 மணிக்கு முழுச் சாப்பாடு. விடிந்து, வீட்டுக்கு வந்த பிறகு பகல் முழுவதும், ஏன் மாலை வரை கூட தூங்க வேண்டியுள்ளது.”இதனால், சாதாரண மனிதர்கள் செய்யும் எந்த ரொட்டீன் வேலையும், பொழுது போக்கும், உறவினர், நண்பரை காணச் செல்வதும் முடியாமல் போய் விடுகிறது.”சனி, ஞாயிறு தான் விடுமுறை… அந்த நாட்களில் இரவில் தூக்கம் வருவதே இல்லை. இரவு இரண்டு மணிக்கு அகோர பசி எடுக்கிறது. அந்த நேரத்தில் பிரிட்ஜை, கிச்சனைக் குடைந்தால் அம்மா சப்தம் போடுறாங்க.”திங்கள் டு வெள்ளி வரை பசங்க குடிக்கவே மாட்டாங்க… சனிக்கிழமை இரவு சக்கை போடு போடுறாங்க… ஹாஸ்டல்ல தங்கி வேலை பார்க்கும் சாப்ட்வேர் பொண்ணுங்களும், பசங்களோட சேர்ந்து விடிய, விடிய டிஸ்கோ கிளப்புகளில் கும்மாளம் போடுறாங்க… சில பசங்க காரை எடுத்துகிட்டு புதுச்சேரி போயிடறாங்க…”தினம், தினம் ராத்திரியில வேலைக்கு போறப்போ ஒண்ணுமே சொல்லாத அம்மா, ஞாயித்துக்கிழமை சாயங்காலம் வெளியே புறப்பட்டா, “எங்கே போறே?’ன்னு கேக்கறாங்க… இப்படி மாறிப் போச்சு எங்க வாழ்க்கை…’ என நீண்ட விளக்கம் கொடுத்தார்.கடந்த ஞாயிறு நானும், லென்ஸ் மாமாவும் புதுச்சேரி போகும் போது, கிழக்கு கடற்கரை சாலையில் வெவ்வேறு இடங்களில், புத்தம் புது மாருதி கார்கள் நான்கு விபத்துக்குள்ளாகி கிடப்பதைக் கண்டோம்.அப்பெண் சொன்னது போல் சாப்ட்வேர் பையன்கள் செய்த விபத்துக்கள் தான் அவை.இதுவரை, அதாவது, அவர்களது 20–22 வயது வரை பைக் ஓட்டியே பழகியவர்கள் அவர்கள். காரையும் பைக் போலவே நினைத்து, புகுந்து, புகுந்து செல்ல எத்தனிக்கின்றனர். தேசிய நெடுஞ்சாலைகளில் வண்டி ஓட்டுவது ஒரு கலை… இவர்கள் கார் டிரைவிங்கிற்கு புதியவர்கள் என்பதால் அக்கலை கைவரப் பெறாதவர்களாக உள்ளனர்.தேசிய நெடுஞ்சாலைகளில் இரவில் கார் ஓட்ட மிகுந்த அனுபவம் தேவை. இவர்கள், பல்வேறு காரணங்களுக்காக இரவில் கார் ஓட்டி மாட்டிக் கொள்கின்றனர். அதுவும் புதுச்சேரியிலிருந்து திரும்பும் போது முழு போதையில், அதீத வேகத்தில் கார் ஓட்டி, விபத்தை சந்திக்கின்றனர்.காருக்கு புதியவர்களான இவர்கள் மூலமாக, கிழக்கு கடற்கரை சாலையில் மற்ற வாகன ஓட்டிகளுக்கு ஆபத்து இருப்பதால், சனி ஞாயிறு – அதுவும் இரவில் மேற்படி சாலையை தவிர்ப்பது நல்லது.

 

source of this article: Dinamalar

திண்ணை 31.10.2010

“சமைப்பது எப்படி?” படித்திருக்கிறோம். “சாப்பிடுவது எப்படி?” அதற்கும் சாஸ்திரம் இருக்கிறது.

* பகலில் ஒரு வேளையும், இரவில் ஒரு வேளையும் மட்டுமே போஜனம் செய்ய வேண்டும். சந்தியா காலம், விடியற்பொழுது, நடுநிசி ஆகிய வேளைகளில் எதையும் புசிக்கலாகாது.

* தாமரை இலை தவிர, வேறு எந்த இலையிலும் பின்புறத்தில் சாப்பிடக் கூடாது.

* போஜன காலத்தில் பேசினால், ஆயுள் குறையும்.

* ஈர வஸ்திரத்துடனும், ஒற்றை வஸ்திரத்துடனும் சாப்பிடக் கூடாது.

* மனைவி சாப்பிடும் போது, கணவன் பார்த்துக் கொண்டிருக்கக் கூடாது.

* பந்தி போஜனம் பண்ணும்போது, முன்னதாக எழுந்து விடலாகாது. அப்படி எழுந்து விட்டால், அந்தப் பந்தியைச் சேர்ந்த மற்றவர்களின் பாவத்தை அவன் அடைய வேண்டும்.

* பழம், பட்சணம் இவைகளைக் குழந்தைகளுக்கு முதலிலும், மற்ற பதார்த்தங் களைப் பெரியவர்களுக்கு முதலிலும் பரிமாற வேண்டும்.

****************************************

தஞ்சை பெரிய கோவிலை ராஜராஜசோழன் கட்டி 1000வது ஆண்டு நிறைவடைந்துள்ளது. இது சம்பந்தமாக பல நூறு ஆண்டுகளாக வழங்கும் ஒரு கர்ண பரம்பரைக் கதை: சிற்பிகள் இரவு பகலாக கோவிலைக் கட்டும் பணியில் ஈடுபட்டிருந்தனர். இதில் கிழவி ஒருத்தியும் பங்கு கொண்டாள். சிற்பிகளுக்குத் தாகம் எடுக்கும்போது, குளிர்ந்த நீரைக் கொடுத்து உதவி வந்தாள்.எல்லாப் பணிகளும் முடிந்து, கடைசியாக கர்ப்ப கிரகத்தின் மேல் விமானம் அமைக்கும் வேலை நடந்து வந்தபோது, “பாட்டி… உங்கள் பொருள் ஏதாவது ஒன்று கொடுங்கள். அதை விமானத்தில் வைக்கிறோம்…’ என்றனர், சிற்பிகள்.”என் வீட்டு வாசற்படி தான் இருக்கிறது. வேறென்ன என்னிடம் உள்ளது?’ என்றாள் அவள்.விமானத்தின் உச்சியில் கலசங்களை அமைப்பதற்கான பிரம்மரந்திரத்தை மூடும் கருங்கல் பலகை ஒன்று தேவையாக இருந்தது. பாட்டி வீட்டு வாசற்படிக் கல்லை அதற்குப் பயன்படுத்திக் கொண்டனர்.கும்பாபிஷேகத்தை நாடு போற்றும் விதமாகக் கொண்டாடினான் ராஜராஜன். அன்றிரவு அவன் கனவில் சிவபிரான் தோன்றினார். “கோவில் அழகாக அமைந்திருக்கிறதா?’ என்று கேட்டான் மன்னன். “நீ கட்டிய கோவிலில், கிழவியின் நிழலில் சுகமாக இருக்கிறேன்…’ என்றார் சிவன்.விழித்துக் கொண்ட மன்னன், மனதில் இருந்த கர்வம் கரைந்தது. கிழவி போன்ற சிறந்த பக்தைகள் தன் நாட்டில் இருப்பதை அறிந்து மகிழ்ந்தான்.

************************************

அக்பர் பாதுஷாவுக்கு தம் ஆஸ்தான வித்வான் தான்சேனிடம் மிகுந்த மதிப்பு உண்டு. அவரது இசைப் புலமையை மிகவும் கொண்டாடினார்.ஒருநாள் அவர் தான்சேனிடம், “உன் குருவை ஒருநாள் இங்கே வந்து பாடச் சொல்ல முடியுமா?’ என்று கேட்ட போது, “அவர் இங்கே வரமாட்டார்; நாம் தான் அங்கே போக வேண்டும்…’ என்று  கூறினார் தான்சேன். தாம் பேரரசர் என்ற முறையில் இல்லாமல், சாதாரண உடுப்பு அணிந்து, தான்சேனுடன் நகருக்கு வெளியே அந்தப் பாடகரின் குரு பாவா ஹரிதாஸ் என்பவர் குடியிருந்த குடிலுக்குப் போனார் அக்பர். அவரது இசையைக் கேட்டு மெய்மறந்து இருந்தார்.சில நாட்களுக்குப் பின், ஒருநாள் தான்சேன் பாடிய போது அக்பர், “என்ன தான்சேன்… உன்னுடைய குரு எவ்வளவு நன்றாக பாடுகிறார். அவருடைய பாட்டுடன் ஒப்பிட்டால் உன் பாட்டு சப்பென்றிருக்கிறதே!’ என்றார். “பிரபுவே… நான் உங்களுக்காகப் பாடுகிறேன்; அவர், பகவானுக்காகப் பாடுகிறார். இதுதான் காரணம்!’ என்றார் தான்சேன்.

source of  this article: Dinamalar