பார்த்தது..கேட்டது..படித்தது 14.12.2010

கையில் ஒரு தொழில் இருந்தால் கவலையே கிடையாது...’ என்பதற்கு, கோவிந்த சாமி என்ற ஒருவரை அறிமுகம் செய்து வைத்தார் லென்ஸ் மாமா.

“கோவிந்தசாமி ஒரு, “இன்ட்ரஸ்டிங் கேரக்டர்…” என் வீட்டில் மரம் ஏறி தேங்காய் பறித்துப் போடுவது அவர் தான்…” எனக் கூறினார்.
கோவிந்தசாமியிடம் பேச்சுக் கொடுத்தேன்…

“திருவொற்றியூர் தாங்க என் சொந்த ஊர். திருவொற்றியூரில் ஒரு கம்பெனியில தொழிலாளியா வேலை பாத்தேங்க… அந்த கம்பெனிய 1990ல் மூடிட்டாங்க…”

“நான் இதப்பத்தி எல்லாம் கவலைப் படல… நான் கிராமணி வகுப்பைச் சேர்ந்தவன்… படிக்கும் போதே எங்கப்பா கிட்டே இருந்து தென்னை மரம் ஏறக் கத்துக்கிட்டேன். இப்போ எனக்கு 45 வயசு. ரெண்டு மகனுங்க… ரெண்டு பொண்ணுங்க இருக்காங்க… கம்பெனிய மூடுனதும், எங்கப்பா விட்டுப் போன மரம் ஏறும் சாமான்களை எடுத்து இடுப்பில் கட்டிக்கிட்டேன். சென்னை நகரில் உள்ள பங்களாக்களில் தேங்காய் பறிக்கும் வேலய இப்போ செஞ்சுகிட்டு இருக்கேன். கம்பெனியில வாங்கின சம்பளத்துக்கு குறையாமல் வரும்படி இப்போது வருது… வயசுக்கு வந்துட்ட என் பெண்ணின் கல்யாணத்துக்கு வரன் பார்த்துகிட்டு இருக்கேன்…

“என்னோட ரெண்டு பசங்களையும் இப்போதே லேத், டர்னிங் தொழில்களை படிக்க அனுப்பிட்டேன்… என் கடைசி மகளை மட்டும் பள்ளிக்கு அனுப்புறேன்… என் கையில் தொழில் இருக்கு… எதுக்கும் கவலை இல்லே!’ என்று சந்தோஷமாக கோவிந்தசாமி சொல்லி முடித்தபோது, ஆரம்பித்தார் லென்ஸ் மாமா…
அப்போது, ராஜாஜி சென்னை ராஜதானியில் (பின்பு ஆந்திரம் பிரிந்தது) முதல்வராக இருந்தார். சுதந்திர நாட்டில் கல்வி கற்க நிறைய பள்ளிகள் தேவைப்பட்டது. செங்கல் கட்டடத்திற்கும், மரபெஞ்சுகளுக்கும் நிறைய செலவிடுவதற்கு பதில், இருக்கும் பள்ளிகளில், “ஷிப்ட்’ முறையை கொண்டு வரலாம் என்றார் ராஜாஜி. “மிச்ச நேரத்தில் மாணவர்கள் என்ன செய்வர்?’ என்று, “ஷிப்ட்’ முறையை எதிர்ப்பவர்கள் கேட்டனர். “தகப்பனார் செய்யும் தொழிலை செய்யட்டும். பல பெற்றோர், தன் தொழிலுக்கு மகனின் உதவி தேவை என்பதால், பள்ளிக்கு அனுப்ப மறுக்கின்றனர். இம்முறையால் கல்வியும் கற்கலாம்; தகப்பன் தொழிலுக்கும் உதவ முடியும்…’ என்று கூறினார் ராஜாஜி. அதற்கு பயங்கர எதிர்ப்பு மூண்டது. ராஜாஜி, முதல்வர் பதவியை துறக்க இதுவும் ஒரு காரணமாகி விட்டது.
“கோவிந்தசாமி இன்னைக்கு கூறும் அறிவுரையை ராஜாஜி 60 வருடங்களுக்கு முன்பே எண்ணிப் பார்த்துள்ளார்!‘ என்றார் லென்ஸ் மாமா.
— கைத் தொழில் ஒன்றுக்கு நாமும் ஏற்பாடு செய்து கொள்வோமா?

*********************************************

படித்து விட்டு வேலைக்காக பரீட்சை எழுதிக் கொண்டிருக்கும் வாசகர் ஒருவர், “ஆப்ஜக்டிவ் டைப்’ தேர்வுகளில் (இவ்வகைத் தேர்வுகளில், ஒரு கேள்வி கேட்டு, அதற்கு நான்கு பதில்களைக் கேள்வித் தாளில் கொடுத்து இருப்பர்… அந்த நான்கில் எது சரியான விடை என்பதை, “டிக்’ செய்தால் போதும்!) “புதுவிதமாக, காப்பி நடக்கிறது… அதை நீங்கள் நேரில் பார்த்தால், “இன்ட்ரஸ்டிங்’ ஆக இருக்கும்… தேர்வு நடக்கும் நேரத்தில் சொல்கிறேன்… வருவீர்களா?’ எனக் கேட்டார்…
“ஓ, வருகிறேன்… ஆனால், தேர்வு நேரங்களில் வெளியாட்களை உள்ளே விட மாட்டார்களே…’ என்றேன்.
“கவலையை விடுங்கள்… நான் அழைத்துச் சென்று, வசமான இடத்தில் உங்களை உட்கார வைக்கிறேன்… அந்த இடத்தில் இருந்தே தேர்வு அறையின் உள்ளே நடப்பதை நீங்கள் தெளிவாகக் காணலாம்…’ என்றார்.
அந்த நாளும் சமீபத்தில் வந்தது. வாசக நண்பர், தன் தேர்வு எழுதும் கல்லூரிக்கு அழைத்துச் சென்று, அவர் கூறியபடியே பாதுகாப்பான இடத்தில் அமர வைத்தார்.
மணி அடித்தது… அதுவரை பரபரப்பாக இருந்த கல்லூரி வளாகம் அமைதியானது. தேர்வு எழுத வந்தவர்கள் அவரவர் இருக்கையில் அமர, பரீட்சை பேப்பர் வினியோகம் ஆரம்பமானது.
எல்லாம் வழக்கப்படி நடக்க, ஒரு விஷயம் மட்டும் வினோதமாகப் பட்டது.
அது —
தேர்வு எழுத வந்தவர்களில் பலரும் நான்கு பேனாக்கள், பென்சில்கள், ரப்பர்கள் என மேசை மீதும், தத்தம் சட்டைப் பைகளிலும் வைத்து இருந்தனர். இரண்டு பேனாவும், ஒரு பென்சிலும், ஒரு ரப்பருமே அதிகப்படி எனும் போது, இத்தனை எதற்கு என எண்ணிக் கொண்டிருக்கும் போதே, தேர்வு எழுத வந்தவர்களின் சேஷ்டைகள் ஆரம்பமானது.
ஒரு பேனாவைத் தூக்கிக் காட்டுவதும், இரண்டு பேனாக்களைத் தூக்கிக் பிடிப்பதும், பேனா, பென்சில், ரப்பர் என எடுத்துக் காட்டுவதுமாக இருந்தனர்.
வாசகர் சொன்ன, “டுபாக்கூர்’ வேலை இது தான் என்பது தெரிந்தாலும், விஷயம் முழுமையாகப் புரியவில்லை… தேர்வு முடித்து வந்த அந்த வாசகர் பின்னர் விளக்கினார்:
“நம்ம மக்கள் எந்த அளவுக்கு புத்திசாலிகள் என்பதற்கு ஓர் உதாரணத்தைப் பார்த்தீர்களா… சரியான விடை தெரிந்தவர்களிடமிருந்து விடைகளைப் பெற, மற்றவர்கள் சங்கேத அடையாளங்களை பயன்படுத்துகின்றனர். இதன்படி தலையைச் சொறிந்தால், முதல் விடை சரியானது. நெற்றியைத் தொட்டால், இரண்டாவது விடை சரியானது. அதே போல கண்ணைத் தொட்டால், மூன்றாவது விடையும், மூக்கைத் தொட்டால், நான்காவது விடையும் சரியானவை.”
“சரி… கேள்விகள் நூறு வரை இருக்குமே… இதை எப்படி சொல்கின்றனர்…'” எனக் கேட்டேன்.
“பேனா மூடி காட்டினால் ஒன்று. பேனாவைக் காட்டினால் இரண்டு, பென்சில் ஐந்து, ரப்பர் பத்து என மதிப்பு கொடுத்துள்ளனர்… கர்சிப் ஜீரோ. விடை கேட்பவர்கள் பேனா, பென்சில், ரப்பர் போன்றவற்றில் தலா மூன்று நான்கு வைத்திருப்பர். உதாரணமாக, இருபத்தாறாவது கேள்விக்கு விடை கேட்க வேண்டும் என்றால், ஒரு பேனா அதை அடுத்து ஒரு பென்சில், அதன் மேல் ஒரு பேனா மூடி என வைத்து விட்டு தேர்வு எழுத வந்திருக்கும் புத்திசாலியான நண்பனை ஒரு பார்வை பார்ப்பர். அவர் தலையையோ, மூக்கையோ, சொறிந்து சரியான விடையைச் சொல்வார். அதே போல், ஐம்பதாவது கேள்விக்கு விடை தேவை என்றால், பென்சிலை வைத்து அதை அடுத்து கர்சிப்பை வைப்பர்.”

“இந்த சங்கேத அடையாளத்தை போட்டித் தேர்வு எழுத வருபவர்களும், கல்லூரி மாணவர்களும் பரவலாகப் பயன்படுத்துகின்றனர்!’ என்றார் வாசகர்.

— இப்படி பரீட்சை பாஸ் பண்ணிட்டு வர்றவங்ககிட்ட இருந்து என்ன, “குவாலிட்டி’ எதிர்பார்க்க முடியும்?

Source of this article: DINAMALAR

பார்த்தது..கேட்டது..படித்தது 7.11.2010

சென்னையிலிருந்து ஒரு வாசகர், தன் மகளுக்கு வரன் பார்த்த அனுபவம் பற்றி எழுதிய கடிதத்தைப் படியுங்களேன்…


அன்புள்ள அந்துமணிக்கு வணக்கம். நான் தங்களுடைய வாசகன். நான் ஒரு தேசிய வங்கியில் வேலை பார்த்து, ஓய்வு பெற்றவன். வருமான வரித்துறையில் அதிகாரியாக இருந்து ஓய்வு பெற்றவர் என் மனைவி. எங்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் தான். என் மகளுக்குத் திருமணம் செய்ய வரன் பார்த்துக் கொண்டிருக்கிறேன். எனக்கு ஏற்பட்ட அனுபவங்களை உங்களுடனும், வாசகர்களிடமும் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
ஆணுக்குப் பெண் சளைத்தவள் அல்ல என்றும்,  கிரண்பேடி போன்ற தீரமிகு பெண்கள் உள்ளனர் என்றும், பல்துறைகளிலும் பெண்கள் கொடி கட்டிப் பறக்கின்றனர் என்றும், நாம் ஜம்பமடித்துக் கொண்டாலும், திருமணம் என்று வரும்போது ஆணாதிக்கம் அதிகமாயிருப்பதுடன் பெண்ணையும், பெற்றவர்களையும் கிள்ளுக் கீரையாக மதிப்பிடுவதே இன்றும் தொடர்கிறது.
என் மகள் பி.காம்., முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்று, எம்.எஸ்ஸி., சைக்காலஜி மற்றும் மனிதவள மேம்பாட்டில் முதுகலை பட்டம் பெற்றவள். அழகும், திறமையும் உள்ளவள். அவளுக்கு வரன் பார்க்க செய்தித்தாளில் வந்த விளம்பரங்களைப் பார்த்த போது, அதிர்ந்து போனேன்.
மாப்பிள்ளையாக விரும்பும் பையன் எந்த நிறத்திலும், காமாலைக்காரனைப் போலவோ, வழித்தெடுக்கும் கறுப்பாகவோ இருக்கலாம்; ஆனால், மணமகளோ பால் வெள்ளையாக இருக்க வேண்டும். கோதுமை நிறமா? வேண்டவே, வேண்டாம். மிக அழகியாக, இந்திய அழகிப் போட்டியில் பங்கு கொள்ள வேண்டிய அழகுடன் இருத்தல் அவசியம். மணமகன் எப்படி வேண்டுமானாலும் கரடு, முரடாகக் கூட இருக்கலாம்; இது மிகவும் அடிப்படையான விஷயம்.
பெண் பார்த்தலில் துவங்கி, திருமணம் முடியும் வரை பெண் மிக ஒல்லியாக இருத்தல் அவசியம்; ஆனால், மணமகன் எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். திருமணம் முடிந்த சில வாரங்களில் பெண், “குண்டாக”  மாற வேண்டும். அப்போது தான் உறவினர்களும், நண்பர்களும் மணமகன் வீட்டில் அப்பெண்ணை நல்ல போஷாக்குடன், “கவனித்து” கொள்வதாக நம்புவர்.
இன்னொரு விஷயம்: பெண் குடும்பம், கட்டுப்பெட்டியான குடும்பமாக இருக்க வேண்டும். இதன் பொருள் என்னவென்று விளங்கவில்லை. பெண்ணின் தந்தை பஞ்சகச்சம், உச்சிக் குடுமியுடனும், தாயார் மடிசாருடன் இருக்க வேண்டுமா… தெரியவில்லை. ஆனால், அதே சமயம், “முற்போக்கு”  கொள்கைகளுடன் நவநாகரிகமாகவும் இருக்க வேண்டும். வைதீகமாக ஆசாரமாக இருப்பதுடன், “கடவுள் பயம்”(கடவுளிடம் அன்பு தேவையில்லை; பயம் தான் தேவை) இருப்பதுடன் நாசூக்காக, மிடுக்காக, ஆணவம் இன்றி, மாடர்ன் ஆக இருத்தல் வேண்டும்.
அடுத்த நிபந்தனை: “ஹோம்லி!’ இதற்குப் பொருள் வீட்டிலேயே இருக்க வேண்டுமா அல்லது வேலையில் இருக்கக் கூடாதா என்பது தெளிவாகத் தெரியவில்லை. ஆனால், பல மணமகன்கள் வேலை பார்க்கும், “ஹோம்லி’ பெண்களையே தேடுகின்றனர். வேலைக்கும் போய்க் கொண்டு, வீட்டையும் கவனித்து, சமையல் முதல் அனைத்து வேலைகளையும் செய்வதுடன், மாப்பிள்ளையின் நண்பர்களுடன், “நாசூ” க்காக பழகத் தெரிந்திருக்க வேண்டும்.
அடுத்தது, ஆங்கிலப் புலமை அடிப்படைத் தேவைகளில் ஒன்று!
தொழில் மற்றும் சம்பளம் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. டாக்டருக்கு டாக்டரும், சாப்ட்வேருக்கு சாப்ட்வேரும் தேவை. ஒரே தொழிலில் இருத்தல் அவசியம். இன்னும் சிலருக்கோ, மிகவும் அதிக அளவில் படித்திருக்க வேண்டும்; வீட்டில் இருந்து வித, விதமாய் சமைத்துப் போட்டால் போதும்;  படித்த படிப்பு  வீணாவது பற்றி கவலையில்லை.
அடுத்தது, அமெரிக்கா போன்ற வெளிநாட்டு மாப்பிள்ளைகளும், அவர்களது பெற்றோரும் செய்யும் கிராக்கி, மேல் நாட்டில் படிப்பவராகவோ, வேலை செய்பவராகவோ இருக்க வேண்டும் அல்லது சொந்த செலவில் விசா வாங்கக் கூடிய திறன் இருக்க வேண்டும்.
வரதட்சணை தேவையில்லை என்பதில், உள் சூட்சமம் உள்ளது. ஆனால், மற்ற வாழ்க்கை வசதி சாதனங்கள் பூரணமாகத் தேவை என்பதுதான் உள்ளர்த்தம். அதுவும் வெளிநாட்டு மாப்பிள்ளையாக இருந்தால், போக, வர விமானச் செலவு பெண் வீட்டாருடையது தான்.
இவ்வளவு சிரமங்களையும் பட்டுக் கொண்டிருக்கும் போது, எனக்கு ஒருவர் போன் செய்து, என் மகள் ஜாதகம் கிடைத்ததாகவும், தன் இரண்டு மகன்களில் மூத்த மகன் பெங்களூரூவில் மாதம்  50 ஆயிரம் ரூபாய் சம்பாதிப்பதாகவும், தமிழகத்தின் ஒரு பெரிய நகரில் வீடும், மகனுக்கு சொந்த கார் உள்ளதாகவும், தங்களுக்கு, “எதிர்பார்ப்பு’ ஏதுமில்லை; தங்களுக்கு பந்தா கிடையாது என்றும் கூறி, அணுகினார்.
அந்தப் பையனும் மிக நல்ல முறையில் பழகி, என் மகளைப் பற்றிய விவரங்களை தெரிந்து கொண்டான். அவள் தற்போது உள்ள சைக்காலஜிஸ்ட் வேலையில் தொடரலாமென்றும், தான் சாப்ட்வேர் துறையில் இருந்தாலும், சைக்காலஜிஸ்ட் ஆட்சேபனையில்லை என்றும், புகைப்படத்தைப் பார்த்து பெண் பிடித்திருப்பதாகவும் கூறி, புகைப்படத்தையும் வாங்கி வைத்துக் கொண்டனர்.
என் மகள் வேலை பயிற்சி காரணமாக வெளியூரில் இருந்ததால், வாரம் இருமுறை போன் செய்து, அவள் எப்போது வருவாள் என்று விசாரித்தபடி இருந்தனர். இவ்வாறு இரண்டு மாதம் கழிந்தன.
என் மகள் வந்த விவரம் தெரிவித்தவுடன், என் வீட்டிற்கு வந்த மணமகனின் பெற்றோர் மற்றும் தாத்தா அவளிடம் பேசி, பின் பெண்ணைப் பிடித்து விட்டதாகவும், அவளே தங்கள் மருமகள் என்று முடிவெடுத்து விட்டதால் புகைப்படத்தை வைத்துக் கொள்வதாகவும், சில நாட்களில்  பெண்ணை ஒரு சம்பிரதாயத்துக்கு, “பார்க்க’ மணமகனை மட்டும் அனுப்புவதாகவும் கூறிச் சென்றனர்.
நாங்களும் மிக நல்லவர்களாக இருக்கின்றனர், இந்த இடம் முடிந்த மாதிரி தான் என்று அவர்கள் கொடுத்த அபிப்ராயத்தின் பேரில் மணநாள் மற்றும் மண்டபம் தேர்வு செய்ய முயன்றோம்.
திடீரென்று ஒருநாள் மணமகன் தந்தை போன் செய்து, தன் மகன் ஓராண்டுக்கு திருமணம் வேண்டாமென்று கூறுவதாகவும், உடனே மணமகள் சாப்ட்வேர் ஆக இருந்தால் பரவாயில்லை என்றும் பேச்சை மாற்றி கூறினார். நான் எவ்வளவோ எடுத்துரைத்தும், தன் மகன் இந்த முடிவை மாற்றிக் கொள்ளவில்லை என்றும் கூறினார்.
தன் மகன் ஓராண்டு கழித்து திருமணம் செய்வதாயிருந்தால் இப்போது ஏன் முயற்சி செய்ய வேண்டும் என்று அவர்களுக்கு தோன்றவில்லை? என் மகள் சைக்காலஜிஸ்ட் என்று தெரிந்து ஒப்புக் கொண்டு, பின்னர் சாப்ட்வேர் புரொபஷனல் தான் வேண்டும் என்று கூறுவது என்ன நியாயம்? சுமார் மூன்று மாதம் தொங்கலில் வைத்தனர்.
இதிலிருந்து, பெண்ணையும், பெற்றோரையும் கிள்ளுக்கீரையாக எண்ணும் போக்கு இன்றும் மாறவில்லையென்று எனக்குப் படுகிறது.
— “இக்காலத்தில் இன்னும் கட்டுப்பெட்டித்தனம் மாறவில்லையே…”என, கடிதத்தை படித்த பின் சலிப்பு தட்டியது.

Source of this article: Dinamalar

பார்த்தது..கேட்டது..படித்தது 31.10.2010

கம்ப்யூட்டர் சாப்ட்வேர் துறையும், கால் சென்டர்களும் சென்னையிலும், சென்னையைச் சுற்றியும் பெருகி விட்டதால், இளைஞர்கள் மற்றும் இளம் பெண்களின் வாழ்க்கை முறையும் மாறி விட்டது; வாழ்க்கைத் தரமும் மாறி விட்டது.சமீபத்தில் ஒரு நாள், முழு உடல் பரிசோதனை செய்து கொள்ள சென்னை வந்திருந்தார் வெளியூர் நண்பர் ஒருவர். என் உதவியை நாடினார். தி.நகரில் உள்ள ஒரு பரிசோதனைக் கூடத்தில் அவருக்கு, “அப்பாயின்மென்ட்’ வாங்கிக் கொடுத்திருந்தேன். வெறும் வயிற்றுடன் மறுநாள் காலை வரச் சொல்லி இருந்தனர்.தனியே போக அச்சப்பட்ட நண்பர், என்னையும் அழைத்தார். காலை நேரத்தில் அந்த பரிசோதனைக் கூடத்தின் வெளி வாயிலை ஒட்டி வண்டியை நிறுத்தி இறங்கவும், என் வண்டிக்கு பின்னால், ஐந்து புது மாருதி கார்கள், “சர்… சர்’ என வேகமாக வந்து நின்றன.ஒவ்வொரு காரிலிருந்தும் ஒரு இளம் பெண் இறங்கினர்! அனைவருமே 23–25 வயதுக்குட்பட்டவர்கள்.புரிந்து போனது… அவர்கள் அனைவரும் சாப்ட்வேர் நிறுவனத்தில் வேலை செய்பவர்கள் என்பது! அந்த நிறுவனத்தினர் உடல் பரிசோதனைக்காக இப்பெண்களை அனுப்பியுள்ளனர் என்பதையும் அனுமானிக்க முடிந்தது.சாப்ட்வேர் நிறுவனங்கள், இரண்டு வருட அனுபவம் உள்ள, “கேன்டிடேட்’களுக்கு மாதம் 40 ஆயிரம் முதல் 60 ஆயிரம் ரூபாய் வரை சம்பளம் வழங்குகின்றன… இவ்வளவு சின்ன வயதில் இவ்ளோ பணத்தை வைத்து என்ன செய்வர்?உடனே புது மாருதி கார் வாங்க வேண்டியது தான்! மாதத் தவணைத் தொகையாக நிதி நிறுவனங்கள், மாருதி கார்களுக்கு குறைந்த பட்ச தவணை தானே கேட்கின்றன… எனவே, 90 சதவீதம் பேர் கார் வாங்கி விடுகின்றனர்!வாழ்க்கைத் தரம் இப்படி உயர்ந்தாலும், வாழ்க்கை முறை தவிடு பொடியாகி விட்டது! இவர்கள் சூரியனைப் பார்ப்பதே அரிதாகி வருகிறது.எப்.எம்., ரேடியோ நிலையத்தில் பணியாற்றி வந்த இளம் பெண் ஒருவர், சாப்ட்வேர் துறையில் வேலை கிடைத்து சென்று விட்டார். சமீபத்தில், நம் அலுவலகத்தில் அப்பெண்ணை சந்தித்த போது, “வேலை எப்படி இருக்கும்மா?’ எனக் கேட்டேன்.”வேலை இன்ட்ரஸ்டிங்கா இருக்கு, சவாலா இருக்கு, எதிர்பாராத சம்பளம் மற்றும் அலவன்சுகள் இருக்கு… அருமையான சாப்பாடு குடுக்கறாங்க… ஆனா, வாழ்க்கை முறை மாறிப் போச்சு…”பெரும்பாலும் அமெரிக்க நிறுவனங்களுக்காகத் தான் சாப்ட்வேர் தயார் பண்றோம்… ஸோ… அவங்களோட தொடர்பு கொள்ள, அங்க பகலா இருக்கும் போது தான் முடியும்… அங்க பகலா இருக்கும் போது, இங்கே இரவு.”எனவே, தினமும் இரவில் தான் வேலை… இரவு வேலை என்றாலும், பெண்களின் பாதுகாப்புக்கெல்லாம் பயம் ஒன்றும் இல்லை. இரவு 2 மணிக்கு முழுச் சாப்பாடு. விடிந்து, வீட்டுக்கு வந்த பிறகு பகல் முழுவதும், ஏன் மாலை வரை கூட தூங்க வேண்டியுள்ளது.”இதனால், சாதாரண மனிதர்கள் செய்யும் எந்த ரொட்டீன் வேலையும், பொழுது போக்கும், உறவினர், நண்பரை காணச் செல்வதும் முடியாமல் போய் விடுகிறது.”சனி, ஞாயிறு தான் விடுமுறை… அந்த நாட்களில் இரவில் தூக்கம் வருவதே இல்லை. இரவு இரண்டு மணிக்கு அகோர பசி எடுக்கிறது. அந்த நேரத்தில் பிரிட்ஜை, கிச்சனைக் குடைந்தால் அம்மா சப்தம் போடுறாங்க.”திங்கள் டு வெள்ளி வரை பசங்க குடிக்கவே மாட்டாங்க… சனிக்கிழமை இரவு சக்கை போடு போடுறாங்க… ஹாஸ்டல்ல தங்கி வேலை பார்க்கும் சாப்ட்வேர் பொண்ணுங்களும், பசங்களோட சேர்ந்து விடிய, விடிய டிஸ்கோ கிளப்புகளில் கும்மாளம் போடுறாங்க… சில பசங்க காரை எடுத்துகிட்டு புதுச்சேரி போயிடறாங்க…”தினம், தினம் ராத்திரியில வேலைக்கு போறப்போ ஒண்ணுமே சொல்லாத அம்மா, ஞாயித்துக்கிழமை சாயங்காலம் வெளியே புறப்பட்டா, “எங்கே போறே?’ன்னு கேக்கறாங்க… இப்படி மாறிப் போச்சு எங்க வாழ்க்கை…’ என நீண்ட விளக்கம் கொடுத்தார்.கடந்த ஞாயிறு நானும், லென்ஸ் மாமாவும் புதுச்சேரி போகும் போது, கிழக்கு கடற்கரை சாலையில் வெவ்வேறு இடங்களில், புத்தம் புது மாருதி கார்கள் நான்கு விபத்துக்குள்ளாகி கிடப்பதைக் கண்டோம்.அப்பெண் சொன்னது போல் சாப்ட்வேர் பையன்கள் செய்த விபத்துக்கள் தான் அவை.இதுவரை, அதாவது, அவர்களது 20–22 வயது வரை பைக் ஓட்டியே பழகியவர்கள் அவர்கள். காரையும் பைக் போலவே நினைத்து, புகுந்து, புகுந்து செல்ல எத்தனிக்கின்றனர். தேசிய நெடுஞ்சாலைகளில் வண்டி ஓட்டுவது ஒரு கலை… இவர்கள் கார் டிரைவிங்கிற்கு புதியவர்கள் என்பதால் அக்கலை கைவரப் பெறாதவர்களாக உள்ளனர்.தேசிய நெடுஞ்சாலைகளில் இரவில் கார் ஓட்ட மிகுந்த அனுபவம் தேவை. இவர்கள், பல்வேறு காரணங்களுக்காக இரவில் கார் ஓட்டி மாட்டிக் கொள்கின்றனர். அதுவும் புதுச்சேரியிலிருந்து திரும்பும் போது முழு போதையில், அதீத வேகத்தில் கார் ஓட்டி, விபத்தை சந்திக்கின்றனர்.காருக்கு புதியவர்களான இவர்கள் மூலமாக, கிழக்கு கடற்கரை சாலையில் மற்ற வாகன ஓட்டிகளுக்கு ஆபத்து இருப்பதால், சனி ஞாயிறு – அதுவும் இரவில் மேற்படி சாலையை தவிர்ப்பது நல்லது.

 

source of this article: Dinamalar

பார்த்தது..கேட்டது..படித்தது 24.10.2010

மது உற்பத்தி நிறுவனம் ஒன்றின் மாநிலப் பிரதிநிதி ஒருவர் எங்கள் நண்பர். நாகாலாந்து மாநிலம் முழுவதற்கும் பொறுப்பாளர். தமிழர் தான்! கடந்த வாரம் சென்னை வந்திருந்தார்.

“பீச் பக்கம் போயே ரெண்டு வருஷம் ஆச்சு… நாகாலாந்தில் பீச்சை எங்கே பார்க்கிறது… வா… அங்கே போவோம்!”  என அழைத்தார்.

பீச் நண்பர்களுடன் அளவளாவி விட்டு, கடல் நீரில் காலை நனைத்து விட்டு, மணலில் அமர்ந்த போது, “அரசியல் நிலவரமெல்லாம் நாகாலாந்துல எப்படி இருக்கு?” எனக் கேட்டேன்.

“நம்மூருக்கு இளச்சது இல்லே நாகாலாந்து அரசியல்… எங்க மதுக் கம்பெனியின் ஏரியா வினியோகஸ்தராக இருந்தார் ஒருவர்… திடீரென அமைச்சராகி விட்டார். என்ன பதவி கொடுப்பது? முக்கியமான பதவிகள் எல்லாம் பலமிக்கவர்கள் எடுத்துக் கொண்டு விட்டனர்.

“இவரும் ஓரளவு செல்வாக்கு மிக்கவரே… பார்த்தார் முதல்வர்… பட்டு வளர்ப்புத் துறை என்ற ஒரு மினிஸ்டிரியை உருவாக்கி, அதில் அமைச்சர் பதவியைக் கொடுத்து விட்டார்.

“இவரது பணி என்ன தெரியுமா? வெளி மாநிலங்களில் இருந்து, வளர்ப்பதற்காக வரும் பட்டுப் புழுக்களை இரண்டு பாகமாகப் பிரித்து, ஒரு பாகத்தை முதல்வர் வீட்டுக்கு அனுப்புவது, மற்றதை தான் வைத்துக் கொள்வது.”

பல லட்சக்கணக்கான பட்டுப் புழுக்கள் இருக்குமல்லவா… அதை, நண்பர்கள், உறவினர்கள் வீடுகளுக்கு பிரித்து அனுப்பி விடுவார்.

“ஓ… ஹோ… பொது மக்களும், பட்டு பூச்சி வளர்ப்போருக்கும் கொடுக்காமல், முதல்வர் மற்றும் அமைச்சர், அவரது உறவினர்கள், நண்பர்கள் மட்டுமே பட்டுப் பூச்சிகளை வளர்த்து, துட்டு சம்பாதிக்கின்றனர் போலும்…’ என்று தானே நினைக்கிறாய்…

“அது தான் தவறு! நம்மூரில் மழைக் காலங்களில் அடை, அடையாகப் பறந்து வரும் ஈசல்களை வறுத்து உண்பரே… அது போல பட்டு புழுக்களை வறுத்து, வயிற்றுக்குள் அனுப்பி விடுவர்… பட்டு புழுக்கள் நாகர்களின், “டெலிகசி’ – மிகப் பிடித்த உணவு… பட்டு புழுக்களுக்கே இந்த கதி என்றால், மற்ற துறைகள் என்ன பாடுபடும் என கணக்கிட்டுக் கொள்… இது தான் நாகாலாந்து மாநில அரசியல்…’ பிரமித்துப் போய் அவரது முகத்தையே பார்த்தபடி இருந்த போது, “வா… மணலில் நடக்கலாம்…’ என அழைத்துச் சென்றார்.


மணலில் நடந்த போது, ஆங்காங்கே அமர்ந்து, தோளில் சாய்ந்து, மடியில் படுத்து கிடந்த காதல் ஜோடிகள் தத்தமது நிலைக்கு வந்து, முகத்தை மறைத்துக் கொண்டனர். நம்மால் தான் அவர்களுக்கு இடைஞ்சல் என்பதை உணர்ந்து, நண்பரை அழைத்துக் கொண்டு, மற்ற நண்பர்கள் கூடி இருந்த இடத்தை வந்தடைந்தேன்.
பள்ளி விடுமுறையை ஒட்டி சொந்த ஊரான நாகர்கோவில் சென்று திரும்பிய நண்பர் ஒருவரின் மனைவி, அங்கிருந்து பனை ஓலைப் பெட்டியில் காரச்சேவு, தட்டை போன்றவை வாங்கி வந்திருந்தார்.

அதை நண்பர் வினியோகம் செய்ய, பீச்சாளர்கள் சுவைத்துக் கொண்டிருந்தனர்.
வாயில் காரச் சேவை போட்டு அரைத்துக் கொண்டிருந்த நடுத்தெரு நாராயணன், அதை முழுவதும் முழுங்காமலேயே, “சார்… உங்க ஊருல நாய (நாய்) அடிச்சு சாப்பிடுவாங்களாமே… உண்மையா?’ என கொழ, கொழவெனக் கேட்டார்.
“உண்மை தான் அண்ணாச்சி, நம்மூருல விருந்தாளிக வந்தா, கோழி அடிச்சு குழம்பு வைக்கிறோம் பாருங்க… அது மாதிரி அவங்க நாய் அடிச்சு, விருந்து வச்சுருவாங்க… அது மட்டுமில்லே… விழாக் காலங்களிலும் நாய் விருந்து தான்!’

“அத எப்படி சமைப்பாங்க?’ என கேட்டார். அண்ணாச்சி.
“விருந்துக்கு ஆள் வருது… விழா வருதுன்னாலே, வீட்ல வளர்கிற நாய்களில் ஒன்றை தெரிவு செய்து, மூன்று நாள் பட்டினி போட்டுடுவாங்க! நாலாவது நாள், தண்ணீல ஊற வச்ச அரிசியை நாய் தின்ன கொடுப்பாங்க… பேய் பசியில இருக்கும் நாய், அதை லவக்கு, லவக்குன்னு தின்னுப்புடும்.

“நாய் அதைச் சாப்பிட்டு ஆறு மணி நேரம் ஆனதும், மேலோகம் அனுப்பி, அதன் குடலை வெட்டி தனியே எடுத்துடுவாங்க. அந்த குடலை நிலக்கரி தணலில் பதமாக வாட்டி, வேக வைப்பாங்க. அந்த நேரத்துல, நாய் குடலில் இருக்கிற அரிசி வெந்து சோறாகி விடும். அப்புறம் என்ன… ஹார்லிக்ஸ் விளம்பரத்தில் வரும் குழந்தை சொல்வது போல, அப்படியே சாப்பிடலாம்!’ எனக் கூறி முடிக்க, அங்கே கூடி இருந்த 10–15 பேரும், “உவ்வே…’ என்றனர்.


“நமக்கு, “உவ்வே’ ஆக இருப்பது அவர்களுக்கு, “ஓகோ!’ இது தான் உலகம்!’ என ஒரு தத்துவத்தைச் சொல்லி முடித்தார்.
சரி… சரி… நாய்–பூனை கதை எல்லாம் விடுங்க… கோவையில பிரபல ஓட்டல்ல தங்கி இருந்த போது, உணவகத்திலும், உ.பா., கூடத்திலும் சேவை ரொம்ப சுமார்ன்னு ஒருமுறை எழுதி இருந்தியே… ஏதாவது ரெஸ்பான்ஸ் உண்டா… அந்த பக்கத்திலிருந்து…’ என கேட்டார் குப்பண்ணா.

“ஏன் இல்லாம… வாரமலர் இதழ்ல வந்த விஷயத்தை படிச்சிட்டு, அடுத்த நாள் காலையில், கோவை ஓட்டலில் இருந்து போன்… அவர்களது பொது மேலாளர் பேச விரும்புவதாகக் கூறினார்… “சரி கொடுங்கள்!’ என்றேன். எடுத்ததுமே நடந்த விஷயங்களுக்கு ஆங்கிலத்தில் வருத்தம் தெரிவித்தார். எது, எது, எப்படி, எப்போது நடந்தது எனக் கேட்டார்.

“நடந்த விஷயங்களை நான் தமிழில் விவரிக்க, “ஐம் எக்ஸ்டிரீம்லி சாரி… ஐ டோன்ட் நோ டமில்…’ என்றார். இது ஏதடா வம்பா போச்சு… எனக்கு நோ… நோ கம் இங்கிலீஷ் ஆச்சே… என்று, லென்ஸ் மாமாவிடம் விஷயத்தைக் கூறி, ஆங்கிலத்தில் விவரிக்கச் சொன்னேன்.

“அவர் மிகுந்த வருத்தம் தெரிவித்து விட்டு, “இதை மனதில் வைத்துக் கொண்டு நம் ஓட்டலுக்கு அடுத்த முறை வராமல் இருந்து விடக் கூடாது…’ என்றும் கேட்டுக் கொண்டாராம்; விபரத்தைக் கூறினார் மாமா…

“அதெல்லாம் சரி… என்னைப் போல தமிழ் மட்டுமே தெரிந்த ஆசாமிகளுடன் பேசுவதற்காகவாவது, அந்த ஜி.எம்., தமிழ் கற்றுக் கொள்ளலாம் அல்லவா… குப்பண்ணா சார்!’ என்றேன்.

“ஓட்டல்ன்னதும் நினைவுக்கு வருதுண்ணா… போன வாரம் புதுச்சேரி போயிருந்தேனா… மாஸ் ஓட்டலில் தங்கினேன்… அங்கே, குளிக்கிறதுக்கு ஒரு ஹேண்ட் ஷவர் இருக்குண்ணா… அதனோட டியூப்பை கொஞ்சம் நீளமாக வைக்க மாட்டாங்க.. முதுகுப் பக்கமெல்லாம் தண்ணி அடிச்சுக்க முடியலே…’ என்றார் பீச் நண்பர் ஒருவர்.

மாஸ் ஓட்டலில் இவர் கூறியது போன்ற ஷவர் கிடையாதே… என யோசித்த போது தான் புரிந்தது… “நம்பர் டூ’ போன பிறகு சுத்தம் செய்ய, வெஸ்டர்ன் கிளாசட் அருகே சின்னதாக வைத்திருக்கும் ஷவரை எடுத்து ஐயா குளித்திருக்கிறார் என்பது… இதைக் கேட்டு அனைவரும் விழுந்து, விழுந்து, சிரித்தனர்.
மேற்படியாரை அவரது பெயருடன் ஐ.ஏ.எஸ்., சேர்த்து தான் கூப்பிட வேண்டும் என்பார். நண்பருக்கு ஐ.ஏ.எஸ்., ஆக ஆசை… முடியவில்லை… மத்திய அரசு அலுவலகத்தில் பணி கிடைத்தது. இவர், முன்னாள் மத்திய அமைச்சர் ஒருவரின் உறவினர்.

“நான் செஞ்ச கூத்தைக் கேளுங்க…” என ஆரம்பித்தார் மத்திய அரசு ஊழியரான இன்னொரு பீச் நண்பர்…
“நண்பர் ஒருவருக்கு வேலை ஒன்று முடித்துக் கொடுத்ததன் பொருட்டு, புதுச்சேரி ஜாலி டூருக்கு ஏற்பாடு செய்து, ஒரு காரும் கொடுத்து, ரூமும் போட்டுக் கொடுத்தார். ரொம்ப பெருமையாக என் மனைவியையும் அழைத்துக் கொண்டு, “ஏசி’ ரூம் டீ… வாழ்க்கையிலே முதன் முதலா தங்கப் போறே…” எனச் சொல்லி அழைத்துச் சென்றேன்.

“ரூமில் தங்கியதும் என் மனைவியிடம், “கம்பளி போர்த்திக் கொள். “ஏசி’  குளிரை உன்னால் தாங்க முடியாது!’ என்று வேறு கூறி, “ஏசி’யை ஆன் செய்து, ரொம்ப குளிர வேண்டும் என்பதற்காக, 30ம் எண்ணில் வைத்து, நானும் படுத்துக் கொண்டு கம்பளியைப் போர்த்திக் கொண்டேன். அடுத்த பத்து நிமிடங்களில் வியர்த்துக் கொட்ட ஆரம்பித்தது.

“என் மனைவியோ, “என்னய்யா… ஏதோ “ஏசி’  கீசின்ன… வியர்த்துக் கொட்டுது. நம்ம மைலாப்பூர் ஸ்டீரிட் ஹவுசில் கூட காத்து ஜிலு, ஜிலுன்னு வருமே…’ என்றதும், என் ஈகோ பஞ்சராக, கடும் கோபம் கொண்டு ஓட்டல் பணியாளரை வரவழைத்து புகார் செய்தேன்.

“வந்தவர் “ஏசி’  மெஷினைப் பார்த்து விட்டு, “சார் … “ஏசி’க்கு புதுசா?’ எனக் கேட்டார். அடடே… எப்படியோ கண்டுபிடித்து விட்டானே என மனதில் நினைத்தபடி பதில் ஒன்றும் சொல்லவில்லை… பணியாளர் 30 என்ற எண்ணிலிருந்து ஸ்விட்சை 18ம் எண்ணிற்கு கொண்டு வந்ததும் ஜிலு, ஜிலுவெனக் காற்று வர ஆரம்பித்தது…

“நான் என் வெட்கத்தை விட்டு, “என்ன தம்பி, பேன் ரெகுலேட்டர்ல எல்லாம் ஒண்ணுல வச்சா, மெதுவா சுத்தும், ஆறுல வெச்சா, வேகமா சுத்தும்… அப்படிதான் நெனைச்சு ரொம்ப ஜிலு, ஜிலுப்பா இருக்கணும்ன்ற காரணத்துக்காக 30ல வச்சேன்…’ என்று கூறவும் —

“அந்த பணியாளர் என் அறியாமையை எண்ணி நகைக்காமல், மிகவும் பணிவாக, “ஏசி டெம்ப்ரச்சர்’ என்றால், 18 டிகிரி சென்டிகிரேடு இருக்கும்… அது ரொம்ப குளிரெடுத்ததுன்னா 22ல் வைத்துக் கொள்ளலாம்!’ எனக் கூறி விடை பெற்றார்.
“என் மனைவி என்னை பார்த்து ஏளன சிரிப்பு ஒன்று விட்டாளே, பார்க்கலாம்…’ என்று முடித்தார்.

“இது பரவாயில்லை… என் கதை வித்தியாசமா னது…’ என ஆரம்பித்தார் இன்னொரு நண்பர்…
“அமர்ந்து கொண்டு, “நம்பர் டூ’ இருக்க வேண்டும் என்ற விஷயம் தெரியாமல், ஒரு ஓட்டல் அறையில், வெஸ்டர்ன் கிளாஸட் மீது வழக்கம் போல ஏறிக் குந்திக் கொண்டேன். அடுத்த இரண்டாவது நிமிடம், “தடால்’ என அந்த பீங்கான் கோப்பை சாய்ந்தது. நான் கீழே விழ, பீங்கான் சில்லிகள் என் அமருமிடத்தை பதம் பார்த்து விட்டன…’ எனக் கூற, சபையின் சிரிப்பொலி அடங்க வெகு நேரமாயிற்று!

———-

source of this article: DINAMALAR