இந்திய ராணுவத்தில் வீரர்களின் உணவு வழக்கங்கள்

india-kashmir-soldier-sweets-lg

ராணுவத்தில், அவரவர்கள் சுவைக்கு ஏற்ப, ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக உணவு சமைக்க முடியாது. நூறு முதல், ஆயிரம் பேர் வரையிலான ஒவ்வொரு முகாம்களிலும், அத்தனை பேருக்கும், ஒரே வகை, ஒரே சுவை, ஒரே அளவிலான உணவு முறைதான்.

காலை எழுந்தவுடன், நான்கு மணிக்கெல்லாம் சூடான தேனீர்.

காலை ஏழரை மணி அளவில் சிற்றுண்டி,

மதியம் ஒரு மணியளவில் பகல் உணவு.

மாலை நான்கு மணியளவில் தேனீர்.

இரவு எட்டு மணிக்கு உணவு.

இதுதான் தினசரி வழங்கப்படும் உணவு முறை.தினசரி உணவுக்காக வழங்கப்படும் பொருட்கள் ஒவ்வொன்றுக்கும், ஒரு அளவு உண்டு. ஒரு நபருக்கு, ஒரு நாள் உணவுக்காக வழங்கப்படும் பொருட்கள்:

அரிசி – 420 கிராம்,

கோதுமை மாவு – 210 கிராம்,

பருப்பு – 90 கிராம்,

சர்க்கரை – 90 கிராம்,

வனஸ்பதி – 60 கிராம்,

தேயிலை – 8 கிராம்,

காய்கறி – 250 கிராம்,

உருளைக்கிழங்கு – 100 கிராம்,

வெங்காயம் – 60 கிராம்,

ஆட்டுக்கறி – 100 கிராம் அல்லது கோழிக்கறி – 60 கிராம்,

பால் – 200 மி.லி.,

பழம் – 100 கிராம்

என்ற அளவில் வழங்கப்படுகிறது.

ஒரு முகாமில் நூறு வீரர்கள் இருந்தால், மேற்கூறிய ஒரு நபருக்கான உணவுப் பொருட்களின் அளவு போல், நூறு நபர்களுக்கான உணவுப் பொருட்களை எடுத்து, அன்றைய சமையலுக்குப் பயன்படுத்திக் கொள்வர்.ஒரு முகாமில், குறைந்தபட்சம் ஒரு வாரத்திற்குண்டான உணவுப் பொருட்கள் எப்போதும் கைவசம் இருக்கும்.

ராணுவ முகாம்களுக்கு இந்த உணவுப் பொருட்களை வழங்குவதற்காக, ஒரு பகுதியில் அமைந்துள்ள அனைத்து முகாம்களுக்கும் என, ஒரு இடத்தில் ஆர்மி சப்ளை டெப்போ அமைந்திருக்கும்.ஒரு வீரர், தினசரி நூறு கிராம் அளவிலான மாமிசம் உண்டாலும், சமைத்துப் பரிமாறுவதில், சில சிக்கல்கள் உண்டு. இரண்டு நாட்களுக்கு ஒருமுறை இருநூறு கிராம் என்ற கணக்கில், (நூறு பேர் இருந்தால்) இருபது கிலோவாக வாங்கி, சமைத்துப் பரிமாறுவர். இதன்படி, ஒருநாள் விட்டு ஒரு நாள், அசைவம் பரிமாறப்படும்.

ராணுவ முகாம்களுக்குள், மாட்டிறைச்சி, பன்றி இறைச்சி போன்றவைகளுக்கு இடமில்லை. மாடு, பன்றி போன்றவைகளின் இறைச்சியை, ராணுவ முகாம்களுக்குள் எடுத்து வருவதே, கடுமையான தண்டனைக்குரிய குற்றம்.

எல்லைப் பகுதிகளில் தனித்தனிக் குழுக்களாகக் செல்லும் போது, ரொட்டி, பூரி, பட்டர், ஜாம், இப்படி எதையாவது மூட்டை கட்டி, தோளில் மாட்டிக் கொண்டு போய், வாரக் கணக்கில் அதையே சாப்பிட வேண்டி வரும். சமயத்தில், அதுவும் தீர்ந்து போய், ஒரு சில நாட்கள் பட்டினி கிடக்கவும் பயிற்சி பெற்றிருக்க வேண்டும்.

— “ராணுவம் ஓர் அறிமுகம்”  நூலிலிருந்து…

Article Source: DINAMALAR

திண்ணை 21.11.2010

என்னுடைய தேசாபிமான எண்ணங்கள் உருவாவதற்கு மிகவும் உதவியாக இருந்தவர், என் நண்பர் நாகராஜ ஐயங்கார். நாமக்கல்லில் இருந்து இவர், சென்னை சென்று வக்கீலுக்குப் படித்தார்.
அப்போது சென்னை மூர்மார்க்கெட்டில் அடிக்கடி நடக்கும் பாரதி பிரசங்கங்களுக்கு இவர் போவார். அந்தக் காலத்தில், மூர்மார்க்கெட்டில் இப்போது உள்ளது போலக் கட்டடங்கள் இல்லை. பெரும் பகுதியும், புழுதி படிந்த பொட்டலாக இருக்கும். பாரதியாருடைய சுதந்திரப் பிரசங்கங்கள் அங்கேதான் நடக்கும்; மக்கள் திரளாகக் கூடுவர்.


விடுதலை வேட்கைமிக்க அநேக புதுப் புதுப் பாடல்களை, பாரதியார் இந்த மூர்மார்க்கெட் பிரசங்களிலேதான் அரங்கேற்றினார். அவர் சென்னையை விட்டு, புதுச்சேரிக்குள் புகுந்து கொள்வதற்கு, சில காலத்துக்கு முன்புதான், ஒரு நாள் மூர்மார்க்கெட் பிரசங்கத்தில்,என்று தணியும் இந்த சுதந்திரம் தாகம்…“என்ற பாடலை முதன்முதலாகப் பாடி, மிக்க ஆவேசத்துடன் பிரசங்கம் செய்தார். அந்தக் கூட்டத்துக்கு, நாகராஜ ஐயங்கார் போயிருந்தார்.
பாரதியார் பாடிய அந்தப் பாட்டின் சில முக்கியமான அடிகளை, அப்படியே நாகராஜ ஐயங்காரும், மற்ற மாணவர்களும் எழுதி, பாடம் பண்ணிக் கொண்டனர்.
அந்தப் பிரசங்கத்துக்கு சில நாட்களுக்குப் பின், நாமக்கல்லுக்கு வந்த நாகராஜ ஐயங்கார், எங்களை எல்லாம் கூட்டி வைத்து, பாரதியாரின் புதுப்பாட்டைப் பற்றியும், அதிலுள்ள சில குறிப்பிடத்தக்க சொற்றொடர்களையும் சொல்லி, புகழ்ந்து கொண்டிருந்தார். அவர் கடைசியாக மூர்மார்க்கெட்டில் பாடிய, “என்று தணியுமிந்த சுதந்திர தாகம்…” என்ற பாட்டும், அன்று அவர் பேசிய பேச்சும், இளைஞர்களுக்கு சுதந்திர ஆவேசத்தை ஊட்டக் கூடியவை. அவர் அன்று பாடியதாக, நாகராஜ ஐயங்கார் எழுதிக் கொண்டு வந்து எங்களுக்கெல்லாம் சொன்ன பாட்டுக்களின் சில முக்கியமான பகுதிகளை, இப்போது வெளியாகி விற்பனைக்கு வரும் புத்தகங்களில் காண முடியாது. அந்தச் சில அடிகள், மிகவும் உத்வேகம் உள்ளவைகளாகக் கருதப்பட்டு, அப்போதே அரசாங்கத்தால் பறிமுதல் செய்யப்பட்டன.


பின்னர், பாரதியார் பாடல்களை அச்சிட்டவர்கள், அந்தக் குறிப்பிட்ட சொற்றொடர்களை உடைய சில அடிகளை அடியோடு விட்டு விட்டும், புள்ளிகளை வைத்தும், வேறு சில இடங்களில் இடைச் செருகல் செய்தும், அச்சிட்டு விற்கலாயினர். நாளடைவில், விடுபட்ட வரிகளுக்காகப் புள்ளிகள் வைத்து அச்சிடுவதும் போய்விட்டது. மாற்றப்பட்ட பாட்டுகளும் மறைந்து விட்டன. இப்போது கிடைப்பது, இடைச் செருகலோடு கூடிய பாட்டுக்கள் தாம்! நாகராஜ ஐயங்கார் எழுதிக் கொண்டு வந்து, எங்களுக்குச் சொன்ன பாட்டிற்கும், இப்போது புத்தகத்தில் படிக்கிற, “என்று தணியும் இந்த சுகந்திர தாகம்…”  பாட்டிற்கும் எவ்வளவோ வித்தியாசம் இருக்கின்றன.
— “என் கதை” நூலிலிருந்து  நாமக்கல் கவிஞர்  ராமலிங்கம் பிள்ளை.

*****************************************************

அந்த நான்கு வயதுக் குழந்தை செய்வதை, அந்த வீதியிலுள்ள அத்தனை குழந்தைகளும் செய்யும்; அந்தக் குழந்தை சொல்கிற விளையாட்டைத் தான், எல்லாக் குழந்தைகளும் விளையாடும். அந்தக் குழந்தையை ஒரு மனநல நிபுணர், தொலைவிலிருந்து கவனித்து, என்ன செய்கிறதென்று பார்த்தார். தான் விரும்பும் விளையாட்டை, மற்றவர்களிடம் அது வற்புறுத்தவில்லை. மாறாக, தனியாய் அமர்ந்து அந்த விளையாட்டை ரசித்து விளையாடுகிறது. அதிலேயே மூழ்கி ஆனந்தமாய் இருக்கிறது. அதைப் பார்க்கிற மற்ற குழந்தைகள், தாமாக வந்து சேர்ந்து கொள்கின்றன என்பதைக் கண்டுபிடித்தார். நாம் செய்வதை ரசித்துச் செய்தால், உலகம் நம்மைப் பின்பற்றும் என்பதை, அந்தக் குழந்தை கற்றுக் கொடுத்திருக்கிறது.

Article source: Dinamalar

திண்ணை 14.11.2010

தி.மு.க., ஆட்சிக்கு வரும் முன், காங்கிரசை எதிர்த்து சந்தித்த பொதுத் தேர்தல் அது. போராட்டத்தில், துப்பாக்கிச் சூட்டிற்கு ஆளாகி இறந்த ஒரு தோழரின் விதவை மனைவி, “கூலி உயர்வு கேட்டான் அத்தான்; குண்டடிபட்டு செத்தான்...”  என்று அழுவது போல, பல நூறு சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன.

தி.மு.க.,வை எதிர்த்து பிரசாரம் செய்தார் ஈ.வெ.ரா., ஒரு கூட்டத்தில், “பிரச்னைக்கு வழி சொல்லாமல், அரசாங் கம் தாலியை அறுத்து விட்டது என்று சொல்லுகிறாயே… அண்ணாதுரை ஆட்சிக்கு வந்தால், மறு தாலி போடு வாயா?” என்று கடுமையாகக் கேட்டார்.

வேறெங்கும் இந்தப் பிரச்னைக்குப் பதில் சொல்லாத அண்ணாதுரை, பிரமாண்ட மான ஈரோடு கூட்டத்தில் பதில் சொன்னார்…
“மறு தாலி போடுவாயா என் கிறார், என் தலைவர் ஈ.வெ.ரா.,  மறு தாலி போட மாட்டான் அண்ணாதுரை; அப்படியே போட்டாலும், என்னுடைய தலைவர், ஈ.வெ.ரா.,வைப் போல், அவரசப்பட்டு போட மாட்டான்…” என்றார்.

அண்ணாதுரையின் பதிலைப் படித்த ஈ.வெ.ரா., கொஞ்ச நேரம் அமைதியாக இருந்துவிட்டு, பிறகு லேசாகக் சிரித்தார். “உம்… அது ஆத்திரத்தில் எடுத்த அவசர முடிவு…’ என்றார். தன் இரண்டாவது திருமணத்தைக் குறிப்பிட்டு!
— திருச்சி செல்வேந்திரன் எழுதிய, ” ஈ.வெ.ரா., கலைஞருடன் கார் பயணங்களில்’ நூலிலிருந்து…

****************************************

பாண்டியருக்கு மீன் கொடி, சோழருக்கு புலிக் கொடி, சேரனுக்கு வில் கொடி. அதுபோல், ஐதராபாத் சமஸ்தான மன்னர் நிஜாமுக்கு, “ரொட்டிக் கொடி” என்பது உங்களுக்கு தெரியுமா? “காம்ருதீன் கான்” என்ற பெயர் கொண்ட நிஜாம், தன் கொடியின் நடுவே, வெந்தும், வேகாத ரொட்டியை சின்னமாக அமைத்தார்.
இது, முதலாம் நிஜாமின் வாழ்க்கையில் நடந்த ஒரு நிகழ்ச்சியைக் குறிக்கிறது. ஐதராபாத்தின் மேற்கே, 480 கி.மீ., தொலைவில் உள்ள அவுரங்காபாத் நகரின் வெளியே, ஒரு சூபி மகான் இருந்தார். அவர் ஒருமுறை, காம்ருதீனுக்கு சப்பாத்தி ரொட்டிகளைத் தந்தார். குளிர் மிகுந்த அந்தப் பனிக் காலத்தில், அவரால் ஏழு ரொட்டிகளை மட்டுமே உண்ண முடிந்தது.
மேலும், சில ரொட்டிகளை உண்ணுமாறு, காம்ருதீனை (முதல் நிஜாமை) வற்புறுத்தினார் அந்த ஞானி. அவர் மறுத்து விடவே, அந்த ஞானி தீர்க்க தரிசனமாக, “ஐதராபாத்தின் முதல் நிஜாமான காம்ருதீன் வம்சத்தில், ஏழு மன்னர்கள் மட்டுமே இருக்குமாறு விதிக்கப்பட்டு விட்டது. அக்குடியில், ஏழு மன்னர்களுக்கு மேல் இருக்க முடியாது…” என்றாராம்.
இது மெய்யோ, பொய்யோ தெரியவில்லை. இக்குடியின் கடைசி மன்னரான நிஜாம், ஏழாமவர். இவர்தான், இந்தியாவுடன் தன் அரசை இணைப்பதற்கு முதலில் மறுத்து, பின்னர் வல்லபாய் படேல் நடவடிக்கை எடுத்ததும், ஐதராபாத் சமஸ்தானத்தை இணைத்தார்.
— ப.சிவனடி எழுதிய, “இந்திய சரித்திரக் களஞ்சியம்’ நூலிலிருந்து..

****************************************

ஒருமுறை, அரசினரால் எழுதப் பட்ட பாட நூல்களைத் திருத்தி அமைக்க, கவிமணி தேசிக விநாயகம் பிள்ளையும், இன்னும் சில பெரியோர் களும், அவர்களுக்கு உதவியாக சிலரும் அமர்த்தப்பட்டிருந்தனர்.
ஒருநாள் அவர்கள் எடுத்துக் கொண்ட புத்தகத்தில், “கிளி” எனும் பாடம் வந்தது.  தலைப்பில் கிளியின் படமும் வரையப் பட்டிருந்தது. விநாயகம் பிள்ளை, எல்லா ரையும் புத்தகத்தை மூடும்படி செய்துவிட்டு, “கிளிக்கு விரல் முன்னே எத்தனை? பின்னே எத்தனை?” என்று கேட்டார்.
“முன்னே மூன்று விரல்; பின்னே ஒரு விரல்…” என்றனர் சில இளைஞர்கள். மற்றவர்களும், அதுவே சரி என்றனர். உடனே விநாயகம் பிள்ளை, எல்லாரையும் புத்தகத்தைத் திறந்து பார்க்கும்படி கூறினார். படத்தில் உள்ள கிளியும், முன்னே மூன்று விரல்களைக் காட்டிக் கொண்டு தான் இருந்தது. “இது பிழை; கிளிக்கு விரல் முன்புறம் இரண்டு. அதுபோல் பின்புறமும் இரண்டு உண்டு…”என்றதும், யாவரும் அதிசயித்தனர். விநாயகம் பிள்ளை அந்த அளவிற்கு கிளியின் கால் அமைப்பைக் கூட கவனித்து வைத்திருந்தார்.

****************************************

செப்பு மொழி பதினெட்டுடையாள்…என்று, அன்னை பாரதத்தைப் போற்றிப் பாடினார் பாரதி. அந்தப் பதினெட்டு மொழிகள் எவை?

 • அங்கம்
 • அருணம்
 • கலிங்கம்
 • கவுசிகம்
 • காம்போசம்
 • கொங்கணம்
 • கோசலம்
 • சாவகம்
 • சிங்களம்
 • சிந்து
 • சீனம்
 • சோனகம்
 • திராவிடம்
 • துளுவம்
 • பப்பரம்
 • மகதம்
 • மராடம்
 • வங்கம்

ஆகியன. இதில், திராவிடம் என்பது தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய நான்கும் அடங்கும்.

Source of this article: DINAMALAR

திண்ணை 7.11.2010

நவாப் ராஜமாணிக்கம் என்பவர், அந்தக் காலத்தில் கொடிகட்டிப் பறந்த நாடக நடிகர். சொந்தமாக நாடகக் கம்பெனி வைத்து, தமிழகம் முழுவதும் நாடகங்கள் நடத்தி வந்தார். இவர், ஒருமுறை தன் நாடகத்தைக் கும்பகோணத்தில் நடத்திக் கொண்டிருந்தார். அதே நாட்களில், எம்.ஆர்.ராதாவும் கும்பகோணத்தில் தன் நாடகத்தை நடத்தி வந்தார்.
நவாப் ராஜமாணிக்கத்தினுடையது புராண-பக்தி நாடகங்கள்! ராதாவுடையதோ நாத்திகப் பிரசார நாடகங்கள். நவாப்பின் நாடகங்களுக்குத் தான் நல்ல கூட்டம்; வசூல். ராதாவுக்கு, “கலெக்ஷன்’ சரியில்லை.
ஒரு நாள், நேராக நவாப் ராஜமாணிக்கத்திடம் போனார் ராதா. “எனக்கு அவசரமாகக் கொஞ்சம் பண உதவி வேண்டும்; கொடுங்கள்…”  என்று கேட்டார். ராஜமாணிக்கத்திற்குக் கோபம் வந்து விட்டது.
ஏன்யா… நான் பக்தி நாடகம் போடறேன்… எனக்கு எதிராக நீ நாத்திகப் பிரசார நாடகம் போடறே. அப்புறம் என்னிடமே வந்து பணம் கேட்கிறாயே?” என்று கேட்டார்.
“நான், “கடவுள் இல்லை’ன்னு சொல்லி நாத்திக நாடகம் போடறதால தான், “கடவுள் உண்டு’ன்னு சொல்லி பக்தி நாடகம் போடற உங்க நாடகத்துக்கு கூட்டம் வருது. என் மீது இருக்கிற கோபத்திலே, ஆஸ்திகர்கள் உங்க நாடகத்துக்கு வர்றாங்க. நாளைக்கே நான் என் நாடகத்தை வேற ஊருக்கு மாத்திட்டுப் போயிட்டா, அப்புறம் உங்க நாடகத்துக்கு எவனும் வர மாட்டான். அப்புறம், நீங்க ஈ ஓட்ட வேண்டியது தான். இப்ப என்ன சொல்றீங்க? பணம் கொடுக்கறீங்களா அல்லது நாளைக்கே நான் நாடகக் குழுவோட வேறு ஊருக்குப் புறப்படவா?’ என்று கேட்டார் ராதா.
கொஞ்சம் யோசித்த நவாப் ராஜமாணிக்கம், பேசாமல் உள்ளே போய், ஒரு பெருந் தொகையைக் கொண்டு வந்து ராதாவிடம் கொடுத்து, வழியனுப்பி வைத்தார்.

source: DINAMALAR

திண்ணை 24.10.2010

தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த ஐயர் ஒருவர், பட்டுக்கோட்டை யாரை ஒரு படத்துக்குப் பாட்டு எழுத ஒப்பந்தம் செய்தார். பாடல், “ரிகார்டிங்’கும் ஆகிவிட்டது. ஆனால், அதற்கான ஊதியத்தைக் கொடுக்காமல், இழுத்தடித்து வந்தார்.
ஒரு நாள் ஐயரின் வீட்டுக்குப் போனார் பட்டுக்கோட்டையார்; ஐயரும் இருந்தார். வணக்கம் சொல்லி விட்டு, “முக்கியமான செலவுகளுக்காக சிரமப்படுகிறேன். இன்று எப்படியாவது நீங்கள் பணம் கொடுத்தாக வேண்டும்…’ என்றார்.
ஐயரோ, “பணம் இன்னிக்கு இல்லே; நாளைக்கு வேணும்னா வந்து பாருங்கோ…’ என்றார்.
ஐயரைப் பார்த்தபடியே நின்று கொண்டிருந்தார் பட்டுக் கோட்டையார்.

“என்ன… நின்னுட்டே இருக்கேள்… போய்ட்டு நாளைக்கு வாங்கோன்னேன்! இல்லே, நிக்கிறதா இருந்தா நின்னுன்டே இரும்…’ என்று கூறிவிட்டு, ஐயர் உள்ளே போய் விட்டார்.
முதலில், “நாளைக்கு வாங்கோ’ என்றிருந்த மரியாதை, கடைசியில், “நின்னுன்டே இரும்…’ என்றும், “வாரும், போரும்…’ என்றும் குறையத் தொடங்கி விட்டதைப் புரிந்து கொண்டதும், வந்தது கோபம். பிறகென்ன, அது கவிதைக் கனலாக உருவெடுத்தது. உடனே, சட்டைப் பையிலிருந்து தாளையும், பேனாவையும் எடுத்து, ஏதோ எழுதினார். மேஜையின் மீது வைத்துவிட்டு வீட்டுக்கு, “விர்’ரென்று வந்து விட்டார். வந்து கொஞ்ச நேரம் கழிந்ததும், அந்தக் கம்பெனியிலிருந்து ஒரு ஆள் பணத்துடன் வந்து விட்டான். அவர் துண்டுச் சீட்டில் எழுதி வைத்துவிட்டு வந்த கவிதை இதுதான்.

“தாயால் வளர்ந்தேன்
தமிழால் அறிவு பெற்றேன்
நாயே… நேற்றுன்னை
நடுத் தெருவில் சந்தித்தேன்
நீ யார் என்னை நில்லென்று சொல்ல?”

இதைப் படித்து விட்டுத்தான் அந்த ஐயர் உடனே பணத்தைக் கொடுத்தனுப்பி விட்டார்.

— தில்ரூபா சண்முகம் எழுதிய, “பட்டுக் கோட்டையார்’ நூலிலிருந்து…

*****************************************************

சேலத்தில், “காந்தி ஐயர்’ ஓட்டல் பெயர் பெற்றது. அந்த ஓட்டலின் சொந்தக்காரர் இயற்பெயர் எனக்குத் தெரியாது. பொது ஜனங்கள் அவரை காந்தி ஐயர் என்று தான் அழைக்கின்றனர். அரிஜன இயக்கம் தமிழகத்தில் தலையெடுத்த காலத்தில் சேலம் காந்தி ஐயரும் அதில் ஈடுபட்டார்.
தம் ஓட்டலில் அரிஜனங்கள் நுழையவும், மற்ற ஜாதி இந்துக்களுடன் இருந்து உணவு உண்ணவும் அனுமதி கொடுத்தார். இதன் பயனை ஒரு வாரத்திற்குள் அனுபவித்தார். அவர் ஓட்டலுக்கு யாரும் சாப்பிடப் வருவதில்லை. ஓட்டலுக்கு யாரும் சாப்பிட வராவிட்டால், ஓட்டல்காரர் கதி என்னவாகும்? காந்தி ஐயர் ஓட்டாண்டி ஆகிவிட்டார். இருப்பினும், மகாத்மாவின் மேல் பாரத்தைப் போட்டு, தாம் பிடித்த விரதத்தை விடாது கடைபிடித்து வந்தார். பதினைந்து நாட்கள் ஆயின. ஒருவர் இருவராக மெல்ல மெல்ல ஜாதி இந்துக்கள் திரும்பி வர ஆரம்பித்தனர்.
மாதம் ஒன்றாயிற்று. போன பேர்வழிகளில் பாதிப் பேர் திரும்பி விட்டனர். இரண்டாவது மாதத்தில், எல்லாரும் திரும்பி விட்டனர். மூன்றாவது மாதத்தில், காந்தி ஐயர் ஓட்டல் கியாதி அடைந்து விட்டது. நஷ்டமடைந்த பணம் வட்டியும், முதலுமாகத் திரும்பிவிட்டது.
சேலம் நகர சபையினர், தங்கள் எல்லைக்குள் எந்த சாப்பாட்டு இடம் இருந்த போதிலும், அதனுள் எல்லா ஜாதியாரும் சமமாகப் புகும் உரிமை வேண்டுமென்ற நியாயத்தை வற்புறுத்த வேண்டுமெனத் தீர்மானம்  செய்தனர். பொது ஜனங்களுக்கு சாப்பாடு, பலகாரம் முதலியவை அளிக்கும் இடங்களில், ஒரு ஜாதியாரை மட்டும் வராமல் தடை செய்யும் ஓட்டல்களுக்கு லைசென்ஸ் ரத்து செய்யப்படும் என்று, தீர்மானம் நிறைவேற்றி, சென்னை சர்க்கார் அனுமதிக்கு அனுப்பினர். சென்னை சர்க்கார் அதற்கு அனுமதி கொடுக்க மறுத்தனர். ஆனால், நகரசபையார், சென்னை சர்க்கார் இருவரையும் காந்தி ஐயர் வென்று விட்டார்.

—”தமிழ்நாட்டில் காந்தி’   நூலிலிருந்து…

—————–

source: DINAMALAR